கிழக்கில் 1500 பேருக்கு கண் சத்திரசிகிச்சை செய்யும் நிகழ்வு காத்தான்குடியில் கடந்த சனிக்கிழமை மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் ஜம்இய்யதுல் ஸபாப் நிறுவனத்தினரால் சவூதி அரேபியாவிலுள்ள அல்பஸர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் 40 பேர் கலந்துகொண்டு இந்த சந்திரசிகிச்சையினை ஆரம்பித்துவைத்தனர்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இது தொடர்பான வைபவம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பமானபோது பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் ஜம்இய்யதுல் ஸபாப் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசீம், உதவி முகாமையாளர் ஸபர் ஸாலீ, பாகிஸ்தான் சத்திரசிகிச்சைக்குப் பொறுப்பான டாக்டர் எம்.பகுர்தீன், நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், பிரதேச செயலாளர் ஏ.எம்.முஸம்மில் , பிரதிநகர முதல்வர் மர்சூக் அஹமட் லெவ்வை, பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அல் மனார் அறிவியற் கல்லூரி பிரதிநிதிகள்,ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் என பல தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.
கண் வெண்படலம் படந்துள்ளோர் பரிசோதனையின் போது தெரிவாகி அவர்களுக்கே சத்திரசிகிச்சை செய்யும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சத்திரசிகிச்சை தொடர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும். காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பொதுவாசிகசாலை மேல் மாடியில் சத்திரசிகிச்சை இடம்பெறுகின்றது.
பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, படுவான்கரை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் , சிங்கள மூவின மக்களும் சத்திரசிகிச்சையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானிய வைத்தியர்களுடன் சுகாதார அமைச்சரின் தொண்டு பணியாளர்களும் பிரதேச செஞ்சிலுவைச்சங்க ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல் சம்மேளனம் , தாருல் அதர் அதவிய்யா பணியார்கள் எனப் பலதரப்பட்டோர் தொண்டு பணியாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.