இலங் கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்மபடுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடன்படிக்கையும் இரு நாடுகளுக்கும் இடையில் விசாத் தளர்வு உடன்படிக்கையுமே இன்று கைச்சாத்திடப்பட்டன.
மியன்மார் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மியன்மார் நாட்டு தலைவரும் அமைதிக்கும் அபிவிருத்திக்குமாக கவுன்ஸிலின் தலைவருமான தான் ஷிவிவுக்குமிடையில் நேற்று நண்பகல் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார, வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் உலகில் தன்னிறைவு அடைந்துள்ள இரண்டாவது நாடாகக் கருதப்படும் மியன்மாரின் ஒத்துழைப்பை இலங்கையின் அபிவிருத்திக்காகப் பெற்றுக்கொள்வது குறித்தும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று காலை மியன்மாரைச் சென்றடைந்தனர். ஜனாதிபதியையும், ஜனாதிபதி தலைமையிலான குழுவினரையும் மியன்மார் நாட்டுத் தலைவரான தான் ஷிவி நேபேதோ விமான நிலையத்தில் பெருவரவேற்பளித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் விஜயத்தின் நிமித்தம் விமான நிலையத்திலும் அதனைச் சு10ழவுள்ள பிரதேசங்களிலும் இலங்கை, மியன்மார் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன
இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவாகும்.
அதேநேரம் இலங்கைக்கும், மியன்மாருக்குமிடையிலான இருபக்க இராஜதந்திர உறவுக்கு இவ்வருடத்துடன் அறுபது வருடங்கள் நிறைவடைகின்றன. அதனால் ஜனாதிபதியின் இவ்விஜயம் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு மேலும் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோகித போகொல்லாகம, டளஸ் அழகப்பெரும, விமல் வீரசன்ச எம்.பி. ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி சேனரத் ஆகியோரும் மியன்மார் சென்றுள்ளனர