08

08

ஏ 9 வீதியூடாக யாழ் குடாநாட்டிற்கு 120 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

08lorry-good.jpgயாழ்ப் பாணத்துக்கு ஏ-9 வீதியூடாக எதிர்வரும் வியாழக்கிழமை 120 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ். வர்த்தகர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பிலிருந்து எதிர்வரும் வியாழக்கிழமை யாழ். வர்த்தகர்களின் 120 லொறிகளில் வடபகுதிக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படவுள்ளன.

இந்தப் பொருட்கள் அனைத்தும் அநுராதபுரத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பாதுகாப்புப் பிரிவினரால் லொறிகளில் முத்திரை இடப்படும். மீண்டும் முகமாலையில் லொறிகள் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் இந்த முத்திரைகள் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அரந்தலாவை காட்டு பகுதிக்குள் புலிகள் இருவர் சுட்டுக் கொலை

udaya_nanayakkara_brigediars.jpgஅம்பாறை அரந்தலாவை காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்த முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஒரு தொகை வெடிபொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். காட்டுப் பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மறைந்திருப்பதாகவும் இவர்களுள் அநேகமானோர் அண்மையிலுள்ள பொலிஸ்நிலையங்களில் சரணடைந்து வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சரணடைபவர்களை தவிர்ந்த எஞ்சியிருக்கும் முன்னாள் புலி உப்பினர்களைத் தேடி விசேட அதிரடிப்படையினர் காட்டுப் பகுதிகளில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

அரந்தலாவை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலையடுத்து சம்பவ இடத்திலிருந்து இரண்டு சடலங்களுடன் 03 – கிரனேற் கைக்குண்டுகள், 65 – ரி 56 அம்யுனீசன்கள், 03 – ரி 56 மெகசின்கள், புலிகளின் சீருடை, ஒரு தொலைத் தொடர்பு கருவி மற்றும் பெருந்தொகையான உலர் உணவுகள் என்பனவற்றையும் மீட்டிருப்பதாகவும் பிரிகேடியர் சுட்டிக் காட்டினார்.

ருவன்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை-அவுஸ்திரேலியா களத்தில்

muralitharan-sri-lankas.jpgஐ.சீ.சீ. உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது.  இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமானது. இன்றைய போட்டியில் இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் முதன்முதலாகக் களமிறங்கவுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா இலங்கை அணியுடனான இன்றைய போட்டியிலும் தோல்வியுற்றால் தொடரில் இருந்து நீக்கப்படலாம் என அறிவிக்கப்படுகிறது. 

2010: தேசிய மீலாத் விழா காத்தான்குடியில்

hisbulla-mlam.jpg2010ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந்நபி விழா காத்தான் குடியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.தேசிய மீலாதுந்நபி விழாவை 2010ம் ஆண்டு காத்தான்குடியில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஜனாதிபதி மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார்.

சோமாலியாவில் செய்தியாளர் கொலை

சோமாலியாவின் முன்னணி வானொலி நிறுவனங்களில் ஒன்றான ரேடியோ ஷபெல் நிறுவனத்தின் இயக்குநரான முக்தர் முகமது ஹிராபே என்பவர் தலைநகர் மொகதிஷுவில் முகமூடி தரித்த கும்பல் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சோமாலியாவில் இந்த வருடத்திலே கொல்லப்படுகின்ற ஐந்தாவது பத்திரிகையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலே அரசாங்க ஆதரவு படைகளுக்கும் எதிரணிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்துவரும் மோதல்களின் பின்னணியில் இந்த கொலை நடந்துள்ளது.

கிளர்ச்சிக் குழுத் தலைவரான ஷேக் ஹசன் தாஹிர் அவெய்ஸ் என்பவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று வெளியான செய்திகள் காரணமாக ஆத்திரம் அடைந்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆயுதக் குழுவின் உறுப்பினர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பிபிசியின் கிழக்கு ஆப்பிரிக்க செய்தியாளர் கூறுகிறார்.

நாட்டில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு மென்மேலும் ஆபத்தான இடமாக சோமாலியா உருவாகிவருகிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பிரேசில் கடற்படையால் உடல்கள் மீட்பு

01-air-france.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர். இப்போது கண்டு எடுக்கப்பட்ட உடல்களோடு சேர்த்து இதுவரையில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தன்னுடைய ஏர்பஸ் தயாரிப்பு விமானங்களில் உள்ள வேகத்தை காட்டும் கருவிகளை மாற்றும் பணியை துரிதப்படுத்தப் போவதாக ஏர் பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தக் கருவிகளில் பிரச்சனை இருப்பது ஒராண்டுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் விபத்து நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த கருவிகளை மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

விபத்தை ஆராய்ந்து வருபவர்கள், காணாமல் போவதற்கு முந்தைய நிமிடங்களில், விமானத்தின் உணர்வான்கள் முரண்பட்ட தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் உட்கட்டமைப்பு – பசில்

basil.jpgவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலை, சுகாதாரம், நீர், மின்சாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.

இங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கட்டம் கட்டமாக செய்து கொடுத்து வெகு விரைவில் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் ‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற ரயில் தாண்டிக்குளம் சென்றடைந்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ எம். பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்:-

எமது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளும், அர்ப்பணிப்புக்களுமே இன்று யாழ் தேவியை தாண்டிக்குளம் வரை கொண்டுவர முடிந்தது. எமது படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையை மனிதாபிமான முறையில் முன்னெடுத்தனர். அவர்களது சேவையும், பங்களிப்புக்களும் மிகவும் மகத்துவமானது எனவே அவர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் புகையிரத சேவைகளை ஏற்படுத்தி கொடுப்பது மாத்திரமின்றி இதுபோன்ற சகல வசதிகளையும் படிப்படியாக செய்து கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அது கட்டாயம் வெகுவிரைவில் நிறைவேறும்.

எனவே தான் ஏ-9 பிரதான வீதி, மதவாச்சி – மன்னார் வீதி, மன்னார் – பூநகரி வீதி என்று பல முக்கிய வீதிகளை புனரமைப்பதற்கான பணிகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புகையிரதம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், பாடசாலை சுகாதாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஐந்து மாவட்டங்களிலும் செய்து கொடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களை போன்று சகல வளங்களையும் கொண்ட இந்த மாகாணம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். நிவாரணக் கிராமம் என்பது சுற்றுலா விடுதியல்ல. சில சில குறைபாடுகள் இருக்கலாம். இதனையும் நிவர்த்தி செய்த வண்ணம் தமது பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க திட்டம் – சுசில்

civiling_fleeng3.jpgவட மாகாணத்தில் 30 புதிய பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் வவுனியாவில் தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இந்தப் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

‘வடக்கின் வசந்தம்’ 180 நாள் வேலைத்திட்டத்துடனேயே பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் பிரேம்ஜயந்த் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 35 இலட்சம் ரூபாய் செலவிடப்படுமென்று தெரிவித்தார்.

இதற்குக் கேள்விப்பத்திரம் கோரப் படாமல், ‘ரேம்’ எனும் அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வட மாகாணப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த மாணவர்களினதும் குறை நிறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கு முகமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட மாநாடொன்று நடைபெற்றது.

இதில் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தற்போதைய நிலைவரத்தை விளக்கினார். இந்த மாநாட்டில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்வி பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஐந்து கண்காணிப்பு அலுவலகங்களை அமைப்ப தாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், அதன் செயற்பாட்டுக்கென 30 சைக்கிள்கள், சீ.டி.எம்.ஏ. தொலைபேசி வசதி, ஃபக்ஸ் இயந்திரம், பிரதிபண்ணும் இய ந்திரம் ஆகிய வசதிகளை அடுத்த வாரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

பிரதம நீதிபதியாக மேலுமோர் என் டீ சில்வா.

asoka-de-silva.jpgநீதித் துறையில் இலங்கையில் அதியுயர் பதவியாகிய பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சரத் என் சில்வா அவர்கள் 7ம் திகதி யூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில், ஜோசப் அசோக என் டீ சில்வா அவர்கள் புதிய பிரதம நீதியரசராக நியமனம் பெறுகின்றார்.

1971ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், 1972ம் ஆண்டு உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்தியப்பிமாணம் செய்துகொண்டதுடன் இலங்கை சட்டத் துறையிலே பல பதவிகளை வகித்து, 2001 ஆண்டு உச்ச நீதிமன்றின் மேலதிக விசாரணை நீதிபதிகளுக்கான தலைவராக விளங்கியுள்ளார்.

ருவண்டாவில் நிறுவப்பட்டிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களால் அசோக என் டீ சில்வா அவர்கள் நிரந்தர நீதிபதியாக 2004ம் ஆண்டு நியமனம் பெற்று, அங்கிருந்த 16 நீதிபதிகளுள் ஒருவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச சட்டவியலில், விசேடமாக இனஅழிப்பு, படுகொலைகள் போன்றவற்றில் மிகவும் பெயர்போன இவர் இன்று இப்பதவிக்கு நியமனம் பெற்றிருப்பாதானது இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்கையில் நீதித்துறை நிமிர்ந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை

sea.jpgவங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதிப்பு கிடையாது என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.

இருப்பினும் இத்தாழமுக்கம் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்க முடியும். அத்தோடு கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் கடலுக்குச் செல்லும் மினவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிகவும் தூரமான கடற் பிரதேசத்தில் தான் இத்தாழமுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது.

என்றாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற் பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகவும் உள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்துக் காணப்பட முடியும்.

ஆகவே, இப்பிரதேசங்களில் வாழும் மீனவர்கள், கடலுக்குச் செல்வதாயின் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கலாம். அதனால் கடும் காற்றின் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினமிரவு முதல் இடையிடையே கடும் காற்று வீசுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறினார்.