அம்பாறை அரந்தலாவை காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்த முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஒரு தொகை வெடிபொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். காட்டுப் பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மறைந்திருப்பதாகவும் இவர்களுள் அநேகமானோர் அண்மையிலுள்ள பொலிஸ்நிலையங்களில் சரணடைந்து வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
சரணடைபவர்களை தவிர்ந்த எஞ்சியிருக்கும் முன்னாள் புலி உப்பினர்களைத் தேடி விசேட அதிரடிப்படையினர் காட்டுப் பகுதிகளில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
அரந்தலாவை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலையடுத்து சம்பவ இடத்திலிருந்து இரண்டு சடலங்களுடன் 03 – கிரனேற் கைக்குண்டுகள், 65 – ரி 56 அம்யுனீசன்கள், 03 – ரி 56 மெகசின்கள், புலிகளின் சீருடை, ஒரு தொலைத் தொடர்பு கருவி மற்றும் பெருந்தொகையான உலர் உணவுகள் என்பனவற்றையும் மீட்டிருப்பதாகவும் பிரிகேடியர் சுட்டிக் காட்டினார்.