கடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர். இப்போது கண்டு எடுக்கப்பட்ட உடல்களோடு சேர்த்து இதுவரையில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தன்னுடைய ஏர்பஸ் தயாரிப்பு விமானங்களில் உள்ள வேகத்தை காட்டும் கருவிகளை மாற்றும் பணியை துரிதப்படுத்தப் போவதாக ஏர் பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தக் கருவிகளில் பிரச்சனை இருப்பது ஒராண்டுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் விபத்து நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த கருவிகளை மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
விபத்தை ஆராய்ந்து வருபவர்கள், காணாமல் போவதற்கு முந்தைய நிமிடங்களில், விமானத்தின் உணர்வான்கள் முரண்பட்ட தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.