சோமாலியாவின் முன்னணி வானொலி நிறுவனங்களில் ஒன்றான ரேடியோ ஷபெல் நிறுவனத்தின் இயக்குநரான முக்தர் முகமது ஹிராபே என்பவர் தலைநகர் மொகதிஷுவில் முகமூடி தரித்த கும்பல் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சோமாலியாவில் இந்த வருடத்திலே கொல்லப்படுகின்ற ஐந்தாவது பத்திரிகையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலே அரசாங்க ஆதரவு படைகளுக்கும் எதிரணிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்துவரும் மோதல்களின் பின்னணியில் இந்த கொலை நடந்துள்ளது.
கிளர்ச்சிக் குழுத் தலைவரான ஷேக் ஹசன் தாஹிர் அவெய்ஸ் என்பவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று வெளியான செய்திகள் காரணமாக ஆத்திரம் அடைந்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆயுதக் குழுவின் உறுப்பினர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பிபிசியின் கிழக்கு ஆப்பிரிக்க செய்தியாளர் கூறுகிறார்.
நாட்டில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு மென்மேலும் ஆபத்தான இடமாக சோமாலியா உருவாகிவருகிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.