வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் உட்கட்டமைப்பு – பசில்

basil.jpgவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலை, சுகாதாரம், நீர், மின்சாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.

இங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கட்டம் கட்டமாக செய்து கொடுத்து வெகு விரைவில் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் ‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற ரயில் தாண்டிக்குளம் சென்றடைந்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ எம். பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்:-

எமது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளும், அர்ப்பணிப்புக்களுமே இன்று யாழ் தேவியை தாண்டிக்குளம் வரை கொண்டுவர முடிந்தது. எமது படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையை மனிதாபிமான முறையில் முன்னெடுத்தனர். அவர்களது சேவையும், பங்களிப்புக்களும் மிகவும் மகத்துவமானது எனவே அவர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் புகையிரத சேவைகளை ஏற்படுத்தி கொடுப்பது மாத்திரமின்றி இதுபோன்ற சகல வசதிகளையும் படிப்படியாக செய்து கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அது கட்டாயம் வெகுவிரைவில் நிறைவேறும்.

எனவே தான் ஏ-9 பிரதான வீதி, மதவாச்சி – மன்னார் வீதி, மன்னார் – பூநகரி வீதி என்று பல முக்கிய வீதிகளை புனரமைப்பதற்கான பணிகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புகையிரதம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், பாடசாலை சுகாதாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஐந்து மாவட்டங்களிலும் செய்து கொடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களை போன்று சகல வளங்களையும் கொண்ட இந்த மாகாணம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். நிவாரணக் கிராமம் என்பது சுற்றுலா விடுதியல்ல. சில சில குறைபாடுகள் இருக்கலாம். இதனையும் நிவர்த்தி செய்த வண்ணம் தமது பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *