வங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதிப்பு கிடையாது என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.
இருப்பினும் இத்தாழமுக்கம் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்க முடியும். அத்தோடு கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் கடலுக்குச் செல்லும் மினவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிகவும் தூரமான கடற் பிரதேசத்தில் தான் இத்தாழமுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது.
என்றாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற் பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகவும் உள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்துக் காணப்பட முடியும்.
ஆகவே, இப்பிரதேசங்களில் வாழும் மீனவர்கள், கடலுக்குச் செல்வதாயின் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கலாம். அதனால் கடும் காற்றின் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினமிரவு முதல் இடையிடையே கடும் காற்று வீசுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறினார்.