June

June

68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு பரவும் பிரதேசமென பிரகடனம்

mosquito_preventionss.jpgடெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவு (எம். ஓ. எச்) கள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பொது சுகாதாரத்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சுற்றாடலைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பாக 0112665329 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரதம பொது சுகாதாரப் பரிசோதகருக்கு அறியக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் ஆயிரம்பேருக்கு விசேட பயிற்சி அளிக்கப்படவிருக்கின்றன. இவர்களுக்கான பயிற்சி இன்று 4 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருக் கிறது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். 7110 பேர் இக்காய்ச்சலுக்கு இக் காலப் பகுதியில் உள்ளாகியுள்ளனர் என்றும் டாக்டர் மஹீபால குறிப்பிட்டார்.

கண்டி, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இப் பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்து கொள்ள உதவுமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2007 ஆம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தவிர்ப்பதற்கான சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதற்கேற்ப, சுகாதாரத் திணைக்கள மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபைகளின் பிரதம மருத்துவ அதிகாரிகள், மாகாணமட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் போன்றோருக்கு விசேட சுற்றறிக்கைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

20-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடைபெறவுள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போதான பாதுகாப்பு நடவடிக்கை, கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

லண்டனில் நடைபெறவுள்ள உலக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதன்கிழமை மாலை மோதின.

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்புக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூர் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அதுதான்.

இதில் ஆறு போலீசார் பலியாயினர், ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக மிக முக்கியமான போட்டிகள் என்று கருதப்படும் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னரும், லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னரும், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு போட்டியில் சந்தித்தன.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ளள இந்த 20-20 உலகக் கோப்பை போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றாலும் போட்டிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலலுத்தப்படுவததாக போட்டிகளுக்கான இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவிக்கிறார்.

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்க அதிபர் விஜயம்

usa-sa.jpgஅமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.

ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.

“டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்’

mosquito_preventionss.jpgமக்கள் ஒத்துழைப்பில்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. சூழலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அக்குறணை வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரக்குறைவு காணப்படுவதுடன் வைத்தியர்களுக்கும் இதனால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது என்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் அக்குறணை மாவட்ட வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இங்கு விடுதிகளில் எந்தவொரு வைத்தியரும் தங்குவதில்லை. இதனால், அவரசிகிச்சை பிரிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஞாயிற்றுக்கிழமையில் வெளிநோயாளர் பிரிவில் காலையிலும் மாலையிலும் ஒரு வைத்தியர் மட்டும் சேவையிலுள்ளதால் 50 வீத நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாது மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். முறையற்ற சேவைமாற்று முறைகளை முறையாக்க பணிப்பாளரினால் சேவைமாற்று பட்டியல் ஒன்று தயாரித்து அனுப்பப்படவேண்டும்.தற்போது சேவைமாற்று முறைப்படி வெளிநோயாளர் பிரிவிற்கான வைத்தியர்கள் அதற்காக கலந்துகொள்வதில்லை.

சிலர் மேலதிக சேவைக்கொடுப்பனவினை முறையாக கடமைசெய்யாது பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எழுத்துமூல கேள்வியினை மாகாணசபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தனவிடம் கேட்டிருந்தார்.

இதற்கு தொடர்ந்தும் அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன பதிலளிக்கையில்; வைத்தியர் சேவை செய்வது போதாது என கூறமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அக்குறணை தெலும்புஹாவத்த பகுதியே டெங்குமூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலையில் 378 மாணவர்களில் 150 மாணவர்களே வருகை தருகிறார்கள். இங்கு சரியான குடிநீர் வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஆர்.பி. சமரகோன் தும்பனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு எனக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படுவதில்லை.இதுபற்றி நான் விசாரித்தேன். ஒரு அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே அழைப்புகள் அனுப்புவதில்லை என்றனர்.இது எனது உரிமை மீறப்பட்ட செயலாகும் என்றார். இதுபற்றி தும்பனை பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாக சபைக்குத் தலைமைதாங்கிய எம்.யசமான தெரிவித்தார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபை: 18 முதல் 25 வரை வேட்புமனு ஏற்பு

sri-lanka-provincial-council.jpgயாழ். மாநகர, சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று (3) அறிவித்தது. இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (4) வெளியிடப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

சுயேச்சைக்குழுக்கள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். வேட்பு மனுக்கள் யாழ். மற்றும் வவுனியா மாவட்ட செயலகங்களில் ஏற்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. யாழ். மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு வவுனியா நகர சபைத் தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரத்துக்கு 626 பேர் தகுதி பெற்றுள்ளனர். யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 12 உறுப்பினர்களும் தெரிவாக உள்ளனர்.

இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.

அமரர் தொடங்கொடவின் இறுதிக்கிரியைகள் இன்று

dodangoda.jpgஅமரர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று (04) வியாளக் கிழமை காலி கராப்பிட்டியில் நடைபெறுகிறது. நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சரான அமரசிறி தொடங்கொட கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, கராப்பிட்டிய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் மறைவு குறித்து பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள இரங்கல் செய்தியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் பணியாற்றிய அமரசிறி தொடங்கொடவின் இழப்பு இலங்கை மக்களுக்குப் பேரிழப்பாகும். குறிப்பாக காலி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் – 2008 வாக்காளர் இடாப்பின்படி தேர்தல்: எட்டு இலட்சத்து 75,000 பேர் தகுதி

sri-lanka-provincial-council.jpgஊவா மாகாண சபைத் தேர்தல் 2008 வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்படும் எனவும் இம்முறை தேர்தலில் வாக்களிக்க சுமார் 8 இலட்சத்து 75 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பு மனு கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தினுள் அறிவிக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து 5 இலட்சத்து 74 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக பதுளை மற்றும் மொனராகலை உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். பதுளை மாவட்டத்தில் 507 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாண சபை கடந்த 28 ஆம் திகதி மாகாண ஆளுநரால் கலைக்கப்பட்டது. மாகாண சபை கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் வேட்புமனுத் திகதி அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

இதேவேளை ஐ. ம. சு. கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜே. வி. பி. அடங்கலான பல கட்சிகள் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சு.க. வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய கூட்டுக் கட்சிகளிடம் தமது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன்

Jan Jananayagamதமிமீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! இங்கு காட்டாற்று வெள்ளம் போல் கூடியிருக்கும் புலம் பெயர்ந்த என் அன்பார்ந்த தமிழீழ மாக்களே! கொள்ளையானந்தன் பேச வருகிறான் என்றதும் விசிலடிப்பதற்கு என்றே வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் சிரமத்தையும் பாராமல் பிரித்தானியா பாராளுமுன்றலில் கூடியிருக்கும் மாணவப் பெருந்தகைகளே! தேசியத் தலைவர் வழிகாட்டலில் வன்னியில் ஒரு சந்ததியே அழிந்தபின் ஆமிக்காரன் சரணடைய வைத்துச் சுட்டுக் கொன்றோ அன்றி சபாரத்தினம் பத்மநாபா ராஜினி திரணகம போன்றோரைக் கொன்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொன்றோ மரணித்துப் போன அண்ணையின்ரை இடத்தை நிரப்பி லண்டனில் இருந்தபடியே தமிழீழம் வாங்கித் தர வந்திருக்கும் எங்கள் தலைவி மேதகு ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதிலே நான் பெருமைப் படுகிறேன்.

இங்கு தேசியத் தலைவரைப் போல போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் தலைவி எப்படிப் பட்டவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. சிங்கள வெறியர்களுக்கு நான் ஒன்றைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் தேசியத் தலைவி ஜனாவின் கோபத்துக்கு ஆளாகி விடாதீர்கள். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தன்னம் தனியாக நின்று தமிழீழம் அமைக்கப் போகும் எங்கள் மேதகு தலைவி சொன்னால் வவ்வால் வரும். எப்படி வரும்……. (மாணவர்கள் விசிலடிக்கிறார்கள்.)

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் தொடங்கியபோது யாழ் லோதிக்க மேட்டுக் குடி மக்களுக்கே உரிய பாணியில் எங்கள் தலைவி சிம்பாப்வேக்கும் பின்னர் நைஜீரியாவுக்கும் தனது பெற்றோருடன் சென்றது எதற்காக? 24 மணி நேரமும் தமிழீழம் எப்படி அமைக்கலாம் என்று சிந்திப்பதற்காகவே என்பது இங்கு நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க் கட்சியினர் சொல்வது போல 30 ஆண்டுகள் நடந்த போராட்த்தில் ஒரு சிறு பாதிப்புக் கூட படாமல் எங்கள் தலைவி தப்பியிருந்தது சொகுசாக வாழ்வதற்கல்ல. தமிழ் மக்களை அண்ணை அம்போ என்று கைவிடும் போது ஓடிவந்து காப்பாத்துவதற்காகவே.

துப்பாக்கிச் சூட்டுக்கும் குண்டு மழையிலும் சிறிலங்கா இராணுவத்தின் அட்டூழியத்திலும் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் சீரழிந்த போது தலைவி தமிழீழம் கட்டுவதற்கான படிப்புக்கள் அத்தனையையும் படித்துக் கொண்டு இருந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அவரின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தைப் பாருங்கள். அதிலே எழுத்துக்களை மாத்திப் போட்டு எம் பி ஏ என்றெல்லாம் படித்திருக்கிறார். அதன் அர்த்தம் பரியாதவர்கள் தலைவி ஏதோ தப்பி ஓடிப் போய் வெளிநாடுகளில் வாழ்ததாகவும் அவருக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாதர் போலும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் இரண்டு சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வேட்பாளராவது இந்தத் தேர்தலில் தனது குவாலிவிக்கேசனைக் காட்டியிருக்கிறர்களா. தலைவியைத் தவிர வேறு யாராவது குவாலிவிக்கேசனைக் காட்டியிருந்தல் நான் இந்த மேடையிலேயே தீக்குளிக்கத் தயார்.

அடுத்தது தலைமை என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி ஆகையால் எங்கள் தானைத் தலைவி கரிகாலி சோழத்து வீராங்கனை தமிழீழ தேசியத் தலைவி ஏகத் தலைவி ஜன ஜநநாயகத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இதுவே வன்னியா இருந்தா கேக்கிற விதமே வேறை. முல்லைத்தீவில பார்திருப்பீங்கள் எங்கட அண்ணைக்கு வன்னி மக்கள் மண்மூட்டையா நின்றவை. எங்கட விரோதிகள் சொல்லினம் நாங்கள் பலவந்தமா வைச்சிருந்தது என்று. அதில ஒரு துளியும் உண்மையில்லை. வன்னி மாக்கள் அடங்காப்பற்றுடையவர்கள். அவர்களை ஒரு கட்டு வைக்கோலோடு மேய்க்கலாம். தெரியும் தானே கடைசியா அந்தச் சனத்துக்கு தவிடு கரைச்சுக் குடுத்த நாங்கள். இது லண்டனா இருக்கிறபடியா உங்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து எங்கள் தலைவிக்கு வாக்களியுங்கள்.

ஜரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு விதி இருக்கிறது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. தனித்த வேட்பாளர் அதுவும் லண்டனில் நின்று ஜெயிக்கும் ஒரு வேட்பாளர் எழுந்து எங்களுக்கு தமிழ் ஈழம் வேணும் என்று பேசிவிட்டால் அதுவும் தீபம் ஜிரிவி போன்ற தெல்லைக் காட்சிகளில் அம்ணி பேசும் தங்கிலிஸ் தமிழில் பேசிவிட்டால் உடனே ஒரு பையினுள் போட்டு கையோடு தமிழீழத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. சிம்பாப்வே நைஜீரியா பிறகு லண்டன் அதுவும் டபுள் எம்மே படிச்ச ஒரு தலைவி கேட்கும் போது ஜரோப்பியப் பாராளுமன்றமே அதிரப் போகின்றது என்பதை நான் உங்கள் முன் செல்லிக் கொள்வதில் அடங்காத் தமிழன் என்ற முறையில் மார்தட்ச் சொல்லுவேன்.

தயவு செய்து ரத்தத்தில் பொட்டு வைக்க வருபவர்கள் வரிசையாக வந்து தலைவிக்கும் எனக்கும் வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மங்கையக்காவுக்குப் பிறகு ரத்தப் பொட்டு வைக்கிற வீர விளையாட்டுகள் அமந்து போச்சுது. இப்ப எங்கட தானைத் தலைவி வெளிக்கிட்டு இருக்கிறா அவவுக்கு உங்கட வீர விளையாட்டை நீங்கள் காட்டலாம். ஒரு சிறிய வேண்டுகோள். தலைவிக்கு பொட்டுவைப்பவர்கள் குறைந்த பட்சம் சவுத்பாங்க் பல்கலைக் கழகத்திலாவது குவாலிவிக்கேசன் எடுத்திருக்க வேண்டும். அம்மணி இம்பீரியல் எம்மே.

வணங்கா மண் புகழ் டாக்குத்தர் தமிழ் போறம் தலைவர் ஒரு பேப்பர் புகழ் அண்ணன் கோபி என்று எனக்குப் பின் நிறையப் பேர் உங்களுக்கு தமிழீழம் எப்படி எடுப்பது அதற்ககு நீங்கள் எப்படிக் காசு கொடுப்பது. பிறகு நாம் அதை எப்படிப் பிரிப்பது என்து பற்றியெல்லாம் விபரமாகப் பேச இருப்பதால் என் பேச்சை நான் சுருக்கிக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

அதில குறிப்பா வணங்கா மண் டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வன்னிப் பேரவலத்தை வைச்சு சேர்த்த காசு வாய்கால் வழியோடி மெற்றோவில விளம்பரம் நோட்டிசுகள் போஸ்ரருகள் என்று நிறையச் செலவாச்சு. இதெல்லாம் எதுக்கு வன்னி மக்களுக்காகத் தானே செய்கிறோம். அவர்களுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் எங்கள் தலைவி ஜனா ஓயமாட்டார் என்பதை உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழீழம் தொடர்பாக பேசும் போது அப்பனை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து பின்னர் தமிழீழ உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என் அப்பா என்று கதையளந்த மாபெரும் தத்துவப் பாடகி தற்போது பிச் கிச் என்று எதுகைமோனையுடன் தவைலிக்காக பாடி தனது தலைவிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கும் மாயா செல்லத்துக்கு இந்தக் கூட்டத்திலே என் இதயத்தைத் தொட்டு நன்றி கூறிக் கொள்கிறேன்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே! ஜனனிக்கு போடுங்கோ. புலம் பெயர் சூழலில் இருக்கும் லண்டன் வாழ் தமிழ் மக்களே தயவு செய்து எங்கள் தலைவி ஜன ஜநநாயயகத்திற்கு போடுங்கோ. வணங்கா மண்ணிலை சுருட்டினது போதாது. கண்ணிர்த் துளிகளில் சேர்ந்தது போதாது. இன்னும் வேணும். அதுக்ககாகவே தேசியத் தலைவர் செத்த செய்தியைக் கூட இன்னும் மறைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம். தமிழீழம் வாங்கித் தருவா எங்கடை அக்கா. தயவு செய்து குவாலிவிக்டீகசன் உள்ளவை 10 மணிக்கு முதலும் மற்றவை எல்லாம் 10 மணிக்கு பிறகும் அக்காவுக்கு நேரே பார்த்துப் போடுங்கோ. தமிழீழம் மலரும், ஒரு கேள்வி ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் கேட்டா போதும். மறு நாளே தமிழீழம் மலரும். மறக்காம நாளைக்கு அக்காவின்யைப் பாத்துப் போடுங்கோ.

மம்மி ஜெய தமிழீழம் வாங்கித் தாறம் என்று வெளிக்கிட இந்தியாக் காரங்கள் எங்கள் முதுகில் குத்திப் போட்டாங்கள். மம்மியை மண் கவ்வ வைச்சிட்டான்கள். மம்மி வருவா ஆசை முத்தம் தருவா என்று பார்திருந்த அண்ணனுக்கு விதி சதி செய்துவிட்டது. மம்மி ஜெயா போனால் என்ன அக்கா ஜனா இருக்கின்றா என்பதை மறந்துவிட வேண்டாம்.

இந்த அரசுகளை நம்ப முடியாது இந்த மாக்களையும் நம்ப முடியாது. போன வருசம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு லண்டனிலை ஒன்பது பேரைத் தெரிவு செய்தவை. ஆனா இந்த வருசம் 8 ஆக குறைச்சுப் போட்டான்கள். 9வது ஆக ஒரு தமிழன் ஏகபிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டுச் செய்த சதி இது. இதுக்கு எதிராக நாங்கள் கிளர்ந்து எழ வேண்டும். ஒன்றை மறக்கக் கூடாது வோட்டு போடுற ஆக்களில் 8 வீதம் பேராவது வாக்களித்தால் தான் 8வது இடத்திற்கு வந்து கடைசிக் கதிரையையாவது பிடிக்கலாம். ஆனபடியா அக்காவை வடிவாப் பாத்து அக்காவுக்கு நேர உங்கள் புள்ளடியைப் போடுங்கள். குறைஞ்சது போடுற வோட்டில 2 வீதம் அதாவது 40,000 க்கும் கூடுதலாக அக்காவுக்கு புள்ளடி விழுந்தால் தான் கட்டுக்காசு 5000 பவுண் என்றாலும் கிடைக்கும். வன்னி மக்களுக்காகச் சேர்த்த காசு தயவு செய்து அதை நாசமாகப் போகவிடாதீர்கள். இன்று (யூன் 4) போடுங்கள் வோட்டு அக்காவைப் பாத்து. அக்காவா கொக்கா!!!

நன்றி வணக்கம்.

‘இந்தியா எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்!!!’ ஞா.புகழேந்தி (தலைமைச் செயலகம். த வி பு)

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
ஆனி 02,2009

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! சிங்கள இனவாத அரசானது எமது தலைமையினையும், விடுதலைப் போராட்டத்தினையும் அழித்து விட்டதாக பலவாறான பொய்யான பரப்புரைகளையும் கட்டுக்கதைகளையும் கூறி வருகின்றது.

இதற்கு சிங்களத்தின் ஒட்டுக்குழுக்களும், ஊது குழல்களாக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறான இறுமாப்பான பரப்புரைகளால் எமது மக்களின் விடுதலை உணர்வை அடியோடு அழித்துவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகின்றது.

சிங்கள அரசு வெளியுலகிற்குத் தெரியாமல் பாரிய அளவில் இனச் சுத்திகரிப்பைச் செய்து வருகின்றது. இன்று எம் உறவுகள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்டு குடும்பம், உறவுகளை இழந்து தாங்கொனாத் துயரை அனுபவித்துக்கொண்டு திறந்தவெளிச் சிறைக்குள் அடைபட்டு இன்னல்ப்படுகின்றார்கள்.

பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடுமைகள் செய்கின்றார்கள், வயது வந்த ஆண்பிள்ளைகளை விடுதலைப்புலிகள் எனக் கூறி விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் போகின்றார்கள். தினம்தினம் நரகவேதனையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்பதற்கு திட்டமிட்ட பல கற்பனைக்கதைகளைக் கூறிவருகின்றது.

சுயாதீனமாக அரச சார்பற்ற நிறுவனங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றது. உலகநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்;ட பொதுமக்களை அனுமதிக்கின்றது.

ஒட்டுமொத்த ஊடகங்களில் வரும் செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் மத்தியிலேயே இயங்கும் துர்ப்பாக்கியமான நிலையில் ஊடகத்துறையினர் மௌனிகளாக செயற்படுகின்றனர்.

பாதுகாப்பு என்ற போர்வையில் அனைத்து விதமான செயற்பாடுகளையும் முடக்கி வருகின்றது. காலத்துக்குக் காலம் எமது மக்களின் விடுதலை உனர்வை அழிப்பதற்கு பல வழிகளிலும் எதிரி கங்கனம் கட்டி கூட்டாகச் செயற்பட்டுள்ளான் என்பது எமது மக்கள் நன்கறிந்த உண்மை.

எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள், தலைவர்கள் எமது மக்களின் விடுதலைக்கு காட்டிவரும் அபரிவிதமான ஆதரவினைக்கண்டு வியந்து நிற்கின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் இதனைவிட அதிகமான ஆதரவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இந்திய மத்திய அரசு உண்மையான நண்பனை இனம்காணத்தவறியுள்ளதுடன் மாறாக சிங்கள அரசின் செயற்பாடுகளிற்கு ஆதரவுக்கரம் துணைபோகின்றது. சிங்கள அரசின் கபடத்தனத்தை உணரும் காலம் விரைவில் வரும்.

இந்திய மத்திய அரசு எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மத்திய அரசிற்கு எமதுமக்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரியப்படுத்தி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதை நாம் வேண்டி நிற்கின்றோம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

………………………
(ஞா.புகழேந்தி)
செயலாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களின் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஇலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலைமட்டுமே தெரிவித்த ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராணுவத்தினர், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் போன்று விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக் கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகிறோம். கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதில் சகல ஊடகவியலாளர்களையும் குற்றம் சாட்ட முடியாது.

யுத்தம் காரணமாக சகல துறைகளிலும் பிரச்சினை இருந்தது. வர்த்தகர்கள் மட்டுமல்லாது, இராணுவத்தில் இருப்பவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அரசாங்கத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளும் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர். இது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தின் போது இவர்களால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இது வேறு பிரச்சினை. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இது தொடர்பிலும் அரசாங்கம் விசாரிக்கும்.

எவ்வாறாயிருப்பினும் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் குறித்து கவலையடைகிறோம். இது குறித்து ஜனாதிபதிக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  அத்துடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பாக 2 வாரங்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களது விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது;  அது பாதுகாப்பு அமைச்சின் வேலை. இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு நாம் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருக்கிறோம் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.