மக்கள் ஒத்துழைப்பில்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. சூழலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அக்குறணை வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரக்குறைவு காணப்படுவதுடன் வைத்தியர்களுக்கும் இதனால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது என்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன தெரிவித்தார்.
மத்திய மாகாணசபையில் எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் அக்குறணை மாவட்ட வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இங்கு விடுதிகளில் எந்தவொரு வைத்தியரும் தங்குவதில்லை. இதனால், அவரசிகிச்சை பிரிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
ஞாயிற்றுக்கிழமையில் வெளிநோயாளர் பிரிவில் காலையிலும் மாலையிலும் ஒரு வைத்தியர் மட்டும் சேவையிலுள்ளதால் 50 வீத நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாது மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். முறையற்ற சேவைமாற்று முறைகளை முறையாக்க பணிப்பாளரினால் சேவைமாற்று பட்டியல் ஒன்று தயாரித்து அனுப்பப்படவேண்டும்.தற்போது சேவைமாற்று முறைப்படி வெளிநோயாளர் பிரிவிற்கான வைத்தியர்கள் அதற்காக கலந்துகொள்வதில்லை.
சிலர் மேலதிக சேவைக்கொடுப்பனவினை முறையாக கடமைசெய்யாது பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எழுத்துமூல கேள்வியினை மாகாணசபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தனவிடம் கேட்டிருந்தார்.
இதற்கு தொடர்ந்தும் அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன பதிலளிக்கையில்; வைத்தியர் சேவை செய்வது போதாது என கூறமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அக்குறணை தெலும்புஹாவத்த பகுதியே டெங்குமூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலையில் 378 மாணவர்களில் 150 மாணவர்களே வருகை தருகிறார்கள். இங்கு சரியான குடிநீர் வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஆர்.பி. சமரகோன் தும்பனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு எனக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படுவதில்லை.இதுபற்றி நான் விசாரித்தேன். ஒரு அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே அழைப்புகள் அனுப்புவதில்லை என்றனர்.இது எனது உரிமை மீறப்பட்ட செயலாகும் என்றார். இதுபற்றி தும்பனை பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாக சபைக்குத் தலைமைதாங்கிய எம்.யசமான தெரிவித்தார்.