அமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.
வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.
ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.
அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.