யாழ். மாநகர, சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று (3) அறிவித்தது. இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (4) வெளியிடப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.
சுயேச்சைக்குழுக்கள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். வேட்பு மனுக்கள் யாழ். மற்றும் வவுனியா மாவட்ட செயலகங்களில் ஏற்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. யாழ். மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு வவுனியா நகர சபைத் தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரத்துக்கு 626 பேர் தகுதி பெற்றுள்ளனர். யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 12 உறுப்பினர்களும் தெரிவாக உள்ளனர்.
இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.