ஊவா மாகாண சபைத் தேர்தல் 2008 வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்படும் எனவும் இம்முறை தேர்தலில் வாக்களிக்க சுமார் 8 இலட்சத்து 75 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பு மனு கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தினுள் அறிவிக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து 5 இலட்சத்து 74 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக பதுளை மற்றும் மொனராகலை உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். பதுளை மாவட்டத்தில் 507 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஊவா மாகாண சபை கடந்த 28 ஆம் திகதி மாகாண ஆளுநரால் கலைக்கப்பட்டது. மாகாண சபை கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் வேட்புமனுத் திகதி அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
இதேவேளை ஐ. ம. சு. கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜே. வி. பி. அடங்கலான பல கட்சிகள் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சு.க. வேட்பாளர் பட்டியல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய கூட்டுக் கட்சிகளிடம் தமது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரித்துள்ளார்.