டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவு (எம். ஓ. எச்) கள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பொது சுகாதாரத்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.
அதேநேரம் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சுற்றாடலைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பாக 0112665329 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரதம பொது சுகாதாரப் பரிசோதகருக்கு அறியக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் ஆயிரம்பேருக்கு விசேட பயிற்சி அளிக்கப்படவிருக்கின்றன. இவர்களுக்கான பயிற்சி இன்று 4 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருக் கிறது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். 7110 பேர் இக்காய்ச்சலுக்கு இக் காலப் பகுதியில் உள்ளாகியுள்ளனர் என்றும் டாக்டர் மஹீபால குறிப்பிட்டார்.
கண்டி, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இப் பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்து கொள்ள உதவுமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நுளம்புகள் பெருகக் கூடிய சுற்றாடலைக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2007 ஆம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தவிர்ப்பதற்கான சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதற்கேற்ப, சுகாதாரத் திணைக்கள மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபைகளின் பிரதம மருத்துவ அதிகாரிகள், மாகாணமட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் போன்றோருக்கு விசேட சுற்றறிக்கைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.