யுத்தத்தின் பின்னரான உண்மை நிலையை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவு படுத்தும் தொடர் கருத்தரங்குகளை சர்வதேச ரீதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதுடன் ஜூன் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை “மெல் பேர்னில் இலங்கை வாரம்” என்ற தொனியில் தொடர் நிகழ்வுகள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு அம்சமாக மெல்பேர்ன் பாராளுமன் றத்தில் நடைபெறும் விசேட செயலமர்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிறப்புரையாற்றவுள்ளார்.
“இலங்கையின் தற்போதைய நிலைவரமும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டமும் என்ற பொருளில் அமைச்சர் உரையாற்றவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் சமூக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுகளில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மனோ விஜேரத்ன, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ரரந்தெனிய, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்பிக்க பெரேரா அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வெல் கம்பாய ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று கொழும்பு ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இம் மாநாட்டில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அவுஸ்திரேலிய நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சுசந்த கடுகம்பொல, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ர ரந்தெனிய ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இது தொடர்பில் விளக்குகையில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அவுஸ் திரேலியாவில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவுபடுத்துவதே ”மெல்பேர்னில் இலங்கை வாரம்” நிகழ்ச்சியின் நோக் கமாகும்.
இந்நிகழ்வுகளில் இலங் கையின் வர்த்தக, உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலான சந்திப்புகளும், இலங்கை தொடர்பான புகைப்படக் கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மெல்பேர்னில் ஒரு இலட்சம் இலங்கையர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறந்த சூழல் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மெல்பேர்ன் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் இலங்கை தொடர்பாக சிறப்புரையாற்றவுள்ளதுடன் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை ஏனைய நாடுகளிலும் நடாத்துவதற்கு வெளிநாட்டமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.