இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலைமட்டுமே தெரிவித்த ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராணுவத்தினர், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் போன்று விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.
ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக் கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகிறோம். கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதில் சகல ஊடகவியலாளர்களையும் குற்றம் சாட்ட முடியாது.
யுத்தம் காரணமாக சகல துறைகளிலும் பிரச்சினை இருந்தது. வர்த்தகர்கள் மட்டுமல்லாது, இராணுவத்தில் இருப்பவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அரசாங்கத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகளும் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர். இது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தின் போது இவர்களால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இது வேறு பிரச்சினை. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இது தொடர்பிலும் அரசாங்கம் விசாரிக்கும்.
எவ்வாறாயிருப்பினும் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் குறித்து கவலையடைகிறோம். இது குறித்து ஜனாதிபதிக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பாக 2 வாரங்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேநேரம், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களது விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது; அது பாதுகாப்பு அமைச்சின் வேலை. இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு நாம் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருக்கிறோம் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.