20 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரதம் முதற் தடவையாக நாளை சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணிக்கவுள்ளது. நாளை காலை புறக் கோட்டையிலிருந்து புறப்படும் யாழ் தேவி புகையிரதம் தாண்டிக்குளம் வரை செல்லுமென போக்கு வரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். யாழ் குடா நாட்டுக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே தாண்டிக்குளம் வரையிலான முதற்கட்ட சேவையென அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.
June
June
கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த இன்று (05.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கென அமைச்சர், பாடசாலை சீருடை, தளபாடங்கள், மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கியுள்ளார். இந்த மக்களின் நிலை குறித்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கல்வி அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல்கள் முடிவடைந்து, சமீபத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதிபா பாடீல் வியாழக்கிழமை உரையாற்றினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு கவனம் செலுத்த இருக்கும் முக்கியமான 10 அம்சங்கள் குறித்து அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அதில், உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுதல், பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்டவை அதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், “இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கும், அங்குள்ள அனைத்து சமூகத்தினரும், குறிப்பாக தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும், சம உரிமைகள் பெற்று கெளரவமாகவும், சுய மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் முன்முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு இந்தியா பொருத்தமான பங்களிப்பை ஆற்றும்” என்று தெரிவித்தார்.
திரு கோணமலை மாவட்டத்தைச் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளில் எஞ்சியுள்ள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் இறுதிக் கட்ட பணிகள் நேற்று ஆரம்பமாகின.
இரண்டு கட்டங்களில் இடம்பெறவுள்ள இத்திட்டத்தின் இறுதிக் கட்டம் எதிர்வரும் 8 ஆம்; திகதி நடை பெறுமென மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று செயலகப் பிரிவில் பலாச்சோலை மாவடிவேம்பு, கிரிமுட்டி பண்ணை ஆகிய அகதி முகாம்களில் தங்கியுள்ள 121 குடும்பங்களைச் சேர்ந்த 493 பேர் திருகோணமலை – கிளிவெட்டி இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்துச் செல்ல 17 பஸ் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அகதிகள் விருப்பமின்மை காரணமாக ஒரு தொகுதியினரே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிகள் மீள்குடியமர்வின் இறுதிக் கட்டமாக ஆலங்குளம், கொக்குவில், சத்துருக்கொண்டான், பாலமீன்மடு, சிங்கள மகா வித்தியாலயம், சாஹிரா முகாம், ஆரையம்பதி ஆகிய நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 494 குடும்பங்களின் 1628 பேர் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் வாகரை வழியாக பொலிஸ் பாதுகாப்புடன் யுஎன்எச்சிஆர் பிரதிநிதிகளின் கண்காணிப்புடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
வடக்கி லுள்ள பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.4 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. முன்னிலையில் இது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவுள்ள டானிஷ் டெமினிங் குரூப், மற்றும் ஹலோ ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குயினோ டக்காஷி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக டானிஷ் டெமினிங் குரூப் நிறுவனத்துக்கு 160 மில்லியன் ரூபாவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு 80 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங் கையில் வாழும் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எனது கடமையும், பொறுப்பும் ஆகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தெரிவித்தார். தமிழ் வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் நேற்றிரவு நடத்திய சினேகபூர்வ கலந்துரையாடலில் தமிழில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் 700 தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தமிழ் மொழியில் உரையாற்றுகையில் கூறியதாவது :- ‘உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். அலரி மாளிகைக்கு வந்துள்ள உங்களை அன்பாக வரவேற்கின்றேன்.’
‘இது எமது தாய்நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று சகோதரர்களாக வாழ வேண்டும்.’
‘புலிகளால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். இதனை நான் அறிவேன். நான் நாட்டின் தலைவன். உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.’
‘புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீங்களும் உதவ வேண்டும். சிங்கள மக்களும் உதவுவது அவசியம்.’
‘இந்த நாட்டில் இனிமேல் எந்த பேதமும் இருக்க முடியாது. இங்கு வாழும் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும்.’
‘இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் பயம், சந்தேகமின்றி சம உரிமை பெற்று வாழ வேண்டும். இதில் எவ்விதமான பேதமும் காட்ட முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் ராஜகிரிய ஸ்ரீமகாவீர பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு காளி கனகரட்னம் சுவாமி, ஈஸ்வரன் பிரதஸ் தனியார் நிறுவன உரிமையாளர் ரி. ஈஸ்வரன், இலங்கை நகைக் கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், இலங்கை ஹார்ட்வெயார்ஸ் வர்த்தக சங்கத் தலைவர் ரி. தியாகலிங்கம், புறக்கோட்டை புடவை வர்த்தக சங்கத் தலைவர் வி. தியாகராஜ பிள்ளை, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். பி. சாமி மற்றும் விக்னேஷ் சுந்தரலிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து செயற்பட்ட இலங்கை அரசு மருத்துவர்கள் மூன்று அல்லது நான்கு பேர், தற்போது அரசாங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகம் காரணமாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு நடக்கும் என்றும், ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் மாதம் ஒருமுறை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுவருவார்கள் என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சீன நிதியுதவியின் கீழ் ஒரு இலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான கூட்டுத்தாபனம் ஒன்றான சீன சென்யேங் சர்வதேச பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஓத்துழைப்பு அமைப்பு சலுகை நிபந்தனையின் கீழான நிதிப்பொதி (பெக்கேஜ்) அடிப்படையில் இத்திட்டத்திற்கு உதவி வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுனாமி மற்றும் ஏனைய அனர்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைந்த செலவிலான வீடுகள் சேரிப்புற வீடுகளின் மீள் இட அமைவுக்கான குறைந்த செலவிலான வீடுகள் அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் சலுகை நிபந்தனைகளின் கீழ் அரச ஊழியர்களுக்கு விற்பனைக்கான வீடுகள் போன்றவை அமைக்கப்படவுள்ளன.
இந்த வருட இறுதியில் 100 கோடி டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற இலங்கை முதலீட்டுச் சபை எதிர்பார்த்துள்ளது என தகவல், ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இலங்கைக்கு கூடுதலான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அரசாங்கம் கடந்த வருடம் 865 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
பாது காப்புப் படையைச் சேர்ந்த வலதுகுறைந்த 200 வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
இது தொடர்பான வைபவம் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, உதவி பாதுகாப்புச் செயலாளர் வில்லி கமகே மற்றும் ரணவிரு அதிகார சபைத் தலைவர் மேஜனர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.