இலங் கையில் வாழும் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எனது கடமையும், பொறுப்பும் ஆகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தெரிவித்தார். தமிழ் வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் நேற்றிரவு நடத்திய சினேகபூர்வ கலந்துரையாடலில் தமிழில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் 700 தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தமிழ் மொழியில் உரையாற்றுகையில் கூறியதாவது :- ‘உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். அலரி மாளிகைக்கு வந்துள்ள உங்களை அன்பாக வரவேற்கின்றேன்.’
‘இது எமது தாய்நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று சகோதரர்களாக வாழ வேண்டும்.’
‘புலிகளால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். இதனை நான் அறிவேன். நான் நாட்டின் தலைவன். உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.’
‘புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீங்களும் உதவ வேண்டும். சிங்கள மக்களும் உதவுவது அவசியம்.’
‘இந்த நாட்டில் இனிமேல் எந்த பேதமும் இருக்க முடியாது. இங்கு வாழும் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும்.’
‘இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் பயம், சந்தேகமின்றி சம உரிமை பெற்று வாழ வேண்டும். இதில் எவ்விதமான பேதமும் காட்ட முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் ராஜகிரிய ஸ்ரீமகாவீர பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு காளி கனகரட்னம் சுவாமி, ஈஸ்வரன் பிரதஸ் தனியார் நிறுவன உரிமையாளர் ரி. ஈஸ்வரன், இலங்கை நகைக் கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், இலங்கை ஹார்ட்வெயார்ஸ் வர்த்தக சங்கத் தலைவர் ரி. தியாகலிங்கம், புறக்கோட்டை புடவை வர்த்தக சங்கத் தலைவர் வி. தியாகராஜ பிள்ளை, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். பி. சாமி மற்றும் விக்னேஷ் சுந்தரலிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள்.