இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல்கள் முடிவடைந்து, சமீபத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதிபா பாடீல் வியாழக்கிழமை உரையாற்றினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு கவனம் செலுத்த இருக்கும் முக்கியமான 10 அம்சங்கள் குறித்து அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அதில், உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுதல், பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்டவை அதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், “இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கும், அங்குள்ள அனைத்து சமூகத்தினரும், குறிப்பாக தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும், சம உரிமைகள் பெற்று கெளரவமாகவும், சுய மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் முன்முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு இந்தியா பொருத்தமான பங்களிப்பை ஆற்றும்” என்று தெரிவித்தார்.