சேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் அ.இ.அ.தி.மு.க. இந்த திட்டத்தை எதிர்க்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2006ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சொல்லாத ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.
சேது கால்வாய் திட்டம் எம்.ஜி.ஆராலும், என்னாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட திட்டம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 3600க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், மும்பை இயற்கை வரலாறு குழுமம் சேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க இத்திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது.
மக்களுக்காகவே திட்டம் என்பதில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக உள்ளது. சராசரி மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருணாநிதியின் தன்னல திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுமக்கள் கேட்புரை கூட்டங்களின் அறிக்கையை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தவறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15ன் கீழ் தண்டனைக்குரிய பிரிவுகள் செயல்படுத்தப்படும் என மிரட்டிய கருணாநிதி முழுவதுமாக மாநில அரசை புறக்கணித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டம் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மூலம் அறிவிக்க செய்த கருணாநிதி, கடலோர பகுதிகளை மேம்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்களை நியாயமற்ற முறையில் அபகரிக்க காரணமாக இருந்த கருணாநிதி சமீபத்தில் மாநில சுயாட்சி குறித்துஅறிக்கை விட்டதுதான் உலகமகா அதிசயமாகும்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.