இலங் கையில் 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் தமது அடுத்தகட்ட தந்திரோபாயத்தை வகுப்பதற்காக இந்தியத் தேர்தல் முடிவுகளுக்காக பிரபாகரன் காத்திருந்ததாகவும் தேசிய ஜனநாயக முன்னணி அல்லது மூன்றாவது அணி புதுடில்லியில் ஆட்சிக்கு வருமென எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், இலங்கை இராணுவம் வேறுபட்ட திட்டங்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் மே 16 இல் வெளிவரும் வரை பிரபாகரன் காத்திருந்ததாகவும் தம்முடையதும் தமது இயக்கத்தினுடையதும் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக அவர் இந்தியத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், அது மிகவும் காலம் பிந்திய ஒன்றாகவும் ஏனெனில் தப்பிச் செல்லும் சகல வழிகளையும் அச்சமயம் இலங்கை இராணுவம் துண்டித்துவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“அவர் (பிரபாகரன்) எவராவது தலையிட்டு இராணுவம் மோதல் சூனியப் பகுதிக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவார்கள் என எதிர்பார்த்திருந்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. மே 16 பிற்பகல் அகப்பட்டிருந்த சகல பொது மக்களையும் விடுவிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகின்றதென்பதை அறிந்த பின் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியானது பிரபாகரனுடனும் புலிகள் அமைப்புடனும் பகையுணர்வு கொண்டிருந்தது என்பதால் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் பிரபாகரனுக்கும், இயக்கத்தின் தலைவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், எதனையும் சிந்திப்பதற்கோ, திட்டமிடுவதற்கோ அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. அந்தத் தருணத்தில் அவர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சி போன்று தேசிய ஜனநாயக முன்னணியோ அல்லது மூன்றாவது அணியோ எதிர்ப்புணர்வு கொண்டவையாக இருக்காது என்று புலிகள் நினைத்திருந்தனர். மக்கள் யுத்த வலயத்தை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் இராணுவம் அவர்களை மீட்டு பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு சென்றது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அ.தி.மு.க. வானது மூன்றாவது அணியும் அங்கமாக இருந்தது. அதன் தலைவி ஜெயலலிதா இலங்கைத் தமிழரின் நோக்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். புதுடில்லியில் தனது தேர்வுக்குரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
மே 16 பிற்பகல் விடுதலைப்புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் செல்வராஜா பத்மநாதன் ஒரு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் புலிகள் அமைப்பு தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் சர்வதேச சமூகம் வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருந்தார். இலங்கைப் படையினர் தம்மையும் தமது உதவியாளர்களையும் மிக விரைவில் சுற்றிவளைக்கும் என்று பிரபாகரன் எதிர்பார்த்திருக்கவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவியிடமிருந்து இராணுவம் தகவல்களை பெற்றிருந்தது. நாட்டைவிட்டு வெளியேற சூசையின் மனைவி முயன்றபோது, அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அச்சமயம், பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களும் யுத்த வலயத்திற்கு உள்ளேயே இருந்தனர்.
மே 16 இல் இராணுவம் 2 சதுர கிலோமீற்றர் பரப்பளவை முழுமையாக சுற்றிவளைத்திருந்தது. புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு அதனால் எந்தவொரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மே 16 /17 இரவு அந்தப் பகுதியில் எந்தவொரு பொதுமக்களும் இல்லை என்று இராணுவம் நிச்சயப்படுத்திக்கொண்டது. அதனை அடுத்து, நம்பிக்கையுடன் புலிகளின் தலைமைத்துவத்துக்கு எதிராக இறுதிக்கட்ட நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது.
பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் எஞ்சியிருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழியமைத்து கொடுத்தது. இராணுவத்தின் 3 பிரிவுகள், புலிகள் கடைசியாக இருந்த பகுதி மீது நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இறுதிக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே புலிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அச்சமயமே, தமது துப்பாக்கிகளை மௌனமடையச் செய்ய தாங்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த யுத்தம் கசப்பான முடிவுக்கு கொண்டுசென்றது. எமது மக்கள் குண்டுகள், செல்கள், நோய், பட்டினியால் இறந்துகொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட நாங்கள் அனுமதிக்க முடியாது. நாம் ஒரேயொரு தெரிவுடன் இருக்கின்றோம். எமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுப்பதென நாம் தீர்மானித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மே 18 இல் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட 3 தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்தது. பிரபாகரன், அவரின் மகன் சாள்ஸ் அன்ரனி, சூசை, பொட்டு அம்மான் மற்றும் ஏனைய தலைவர்கள் உட்பட சுமார் 600 விடுதலைப்புலிகளின் மரணத்துடன் இந்த மோதல் முடிவிற்கு வந்தது.