June

June

உலகில் மிகச் சிறந்த இராணுவம் என நிரூபனம் – தளபதி பொன்சேகா

sarathfonseka.jpgஎமது இராணுவத்தினர் நாட்டில் புரையோடிப் போயிருந்த பங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் மூலம் தாங்கள் உலக நாடுகளில் உள்ள மிகச் சிறந்த இராணுவ வீரர்களென்பதை நிரூபித்துள்ளனர் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவுக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி அங்கு உரை நிகழ்த்தும்போதே இவ்வாறு கூறினார்.

எமது இராணுவ வீரர்களின் தார்மீக உணர்வு உச்ச கட்டத்தில் காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள ஒழுக்காற்றல் மிக்க இராணுவங்களுள் ஒன்றாக இலங்கை இராணுவமும் கருதப்படுகிறது.   எமது இராணுவ வீரர்கள் யுத்த களத்தில் காண்பித்த உச்ச கட்ட திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. எதிர்கால பாதுகாப்புத் திட்டத்தை கருத்திற்கொண்டு இராணுவம் சகல வழிகளிலும் மேலும் பலப்படுத்தப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியில் ஜனாதிபதியின் தலைமைத்துவமும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலும் மிக முக்கியமானவை என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

“வன்முறைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன’

“எமது பிரதேசங்களில் இடம்பெறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற வன்முறைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 “இலங்கையைப் பாதுகாப்போம்’ என்ற அரசாங்கத்தின் நாடளாவிய இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் கிராம சேவகர் பிரிவுகளில் தமது பணிகளை மேற்கொள்வதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும்’  இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.றபீக் தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர் ஜே.லியாகத் அலி மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். உப பொலிஸ் பரிசோதகர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

பிரதேசங்கள் தோறும் செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பிரதேசத்தில் மக்களிடையே ஒற்றுமையும் சக வாழ்வும் ஏற்படும். அத்துடன் தமது பிரதேசத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்கும் எதிரணியினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்படுதால் இக்குழுக்களை அமைத்த நோக்கம் இலகுவில் எட்டப்படும். விசேடமாக தெரிவு செய்யப்பட்ட இந்த சிவில் பாதுகாப்பு குழுப் பிரதிநிதிகளுக்கு விசேட அடையாள அட்டை கிராமசேவகர் ஊடாக வழங்கப்படும் என்றார்.

இலங்கையில் பன்றிக் காய்ச்சல் தொற்றியோர் நான்காக அதிகரிப்பு – தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தகவல்

19swine-flu.jpgஇலங் கையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயாந்துள்ளதென தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே இந்நோய்தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

இம்மாதம் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலிருந்து 5 சிறுவர்கள சிங்கப்பூரினூடாக  இலங்கை வந்தடைந்தனர். இவர்களுள் இரு சிறுவர்கள் ஏற்கனவே இந்நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளனர். இதனையடுத்து  அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய 3 சிறுவர்களும் தொற்றுநோய்  சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

இதன்போதே ஏனைய இரண்டு சிறுவர்களும் இந்நோயத் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தற்போது இந்த 5 சிறுவர்களும்  தொற்றுநோய்  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ வீரவிக்கிரம லங்காதீஸ்வர’ பட்டம் வழங்கி கௌரவம் – பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் விருதுகள்

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வடமத்திய மாகாண மகா சங்கத்தினர் “ஸ்ரீ வீரவிக்கிரம லங்காதீஸ்வர” எனும் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்தனர். இதற்கான விருதை அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஸ்ரீநிவாச மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அநுராதபுரத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு வடமத்திய மாகாண சர்வமதத் தலைவர்களும் பொதுமக்களும் இணைந்து விஷேட சன்னஸ் பத்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.

அனுராதபுரம் ஜயசிறி மகாபோதி வளாகத்திலுள்ள சங்க சபையின் குழு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், கூட்டுப்படைத் தளபதி மற்றும் சிவில் பாதுகாப்புப் படைப் பணிப்பாளர் நாயகம் போன்றோரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான விருதுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க வழங்கி கௌரவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதி நேற்று இலங்கை வருகை! இன்று அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு!!

moldivian-president.jpgமாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் நேற்றுப் பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தார். நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய மாலைதீவு ஜனாதிபதியை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹ{ஸைன் பஹிலா வரவேற்றார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வருகை தந்துள்ள மொஹமட் நசீத் இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  மாலைதீவு ஜனாதிபதி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

அரசாங்கம் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது

anura_priyadarshana_yapa4.jpgஇலங்கை அரசாங்கம் அதன் வெளிவிவகார நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பான கொள்கைகளைப் பின்பற்றாது அணிசேராக் கொள்கையையே கடைபிடித்து வருகிறது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அயல் நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

உலகக் கிண்ண 2 ஆவது அரையிறுதியாட்டம் இலங்கை – மேற்கிந்தியா இன்று மோதல்

muralitharan-sri-lankas.jpg20 ஓவர் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதியாட்டத்தில் இலங்கைமேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.  இந்த முறை கிண்ணத்தைக் கைப்பற்ற தீவிரமாக உள்ள இலங்கை அணி மேற்கிந்தியாவின் சவாலை எதிர்கொள்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதும் அணிக்குப் பலமாக அமைந்துள்ளது. துடுப்பாட்டத்திலும் அவர்கள் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.

அதேநேரத்தில் மேற்கிந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது.

 மேற்கிந்திய அணியை வெல்வோம் – சங்கக்கார நம்பிக்கை

“ருவென்ரி20′ உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அணியின் கப்டன் குமார் சங்காக்கார தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்;

இலங்கை அணியின் இந்த வெற்றிகளுக்கு தொடக்க வீரர்களான டில்ஷான், ஜெயசூரிய ஜோடி முக்கிய பங்குவகிக்கிறது தவிர பந்துவீச்சில் லசித் மலிங்க, முரளிதரன், மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இக்கட்டான நேரங்களில் துல்லியமான பந்துவீச்சு வெற்றிக்கு நம்பிக்கையளித்தனர்.

இன்று ஓவலில் நடக்கவுள்ள அரையிறுதியில் மேற்கிந்தியாவை எதிர்கொள்கிறோம். இவர்களுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு சாதகமான விடயம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இம்முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறி கிண்ணத்தை வெல்வோமென்று தெரிவித்தார்.

3 வருடங்களின் பின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சொந்த கிராமம் திரும்பினார்

mp-kanagasabai.jpgபாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் த. கனகசபை இன்று அதிகாலை தனது சொந்தக் கிராமமான களுதாவளைக்கு திரும்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றனர். தனது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே இன்று காலை த.கனகசபை தனது கிராமத்திற்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் ஏனைய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்படவேண்டும்-பான்கீ மூன்

06bankimoon.jpgஇலங் கையில் நீண்டகாலமாக நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும்,ஏனைய முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான வழியில் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் வன்முறைகள் எழும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் எஞ்சியிருப்பதாக தாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் காட்டி வரும் அக்கறை வரவேற்கத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.தாம் அண்மையில் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்த போது நிலமைகளை நேரில் அவதானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை நிர்வாக முறைமை அரசினால் ஏற்பு நடைமுறைப்படுத்துவதில் உறுதி

anura_priyadarshana_yapa4.jpgமாகாண அதிகாரங்களை பயன்படுத்தாத நிலையில் சில சபைகள் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை நிர்வாக முறைமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே, அதனை வடக்கு, கிழக்கில் நடை முறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளதென்று அமைச்சர் தெரிவித்தார்.

13வது திருத்தம் அரசியல மைப்பின் ஒரு பகுதியாகும். அதனைப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, மாகாண சபை நிர்வாக முறையில், மத்திய அரசு, மாகாண அரசுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும், ஒத்தியங்கு அதிகாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சில மாகாண சபைகள் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்தாமல் உள்ளன.” என்று தெரிவித்த அமைச்சர், உலகில் ஆட்சி மாத்திரமின்றி சகல போக்குகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாகித்தான் வருகின்றன என்று தெரிவித்தார்.‘காணி விடயத்தில் பிரச்சினை இருக்குமென நான் நினைக்கவில்லை. முன்பு யுத்தச் சூழ்நிலையில் பேச்சு நடந்தது. இப்போது அவ்வாறில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே 13வது திருத்தத்திற்கு எதிராகச் கதைக்கின்றார்களே! என்ற கேள்விக்கே அமைச்சர் மெற்கண்ட விளக்கத்தை அளித்தார். வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரவர் விருப்பமாகுமென்று தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஸ்திரமானது என்று தெரிவித்தார்.