“எமது பிரதேசங்களில் இடம்பெறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற வன்முறைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
“இலங்கையைப் பாதுகாப்போம்’ என்ற அரசாங்கத்தின் நாடளாவிய இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் கிராம சேவகர் பிரிவுகளில் தமது பணிகளை மேற்கொள்வதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும்’ இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.றபீக் தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர் ஜே.லியாகத் அலி மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். உப பொலிஸ் பரிசோதகர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
பிரதேசங்கள் தோறும் செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பிரதேசத்தில் மக்களிடையே ஒற்றுமையும் சக வாழ்வும் ஏற்படும். அத்துடன் தமது பிரதேசத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்கும் எதிரணியினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்படுதால் இக்குழுக்களை அமைத்த நோக்கம் இலகுவில் எட்டப்படும். விசேடமாக தெரிவு செய்யப்பட்ட இந்த சிவில் பாதுகாப்பு குழுப் பிரதிநிதிகளுக்கு விசேட அடையாள அட்டை கிராமசேவகர் ஊடாக வழங்கப்படும் என்றார்.