பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வடமத்திய மாகாண மகா சங்கத்தினர் “ஸ்ரீ வீரவிக்கிரம லங்காதீஸ்வர” எனும் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவித்தனர். இதற்கான விருதை அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஸ்ரீநிவாச மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அநுராதபுரத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு வடமத்திய மாகாண சர்வமதத் தலைவர்களும் பொதுமக்களும் இணைந்து விஷேட சன்னஸ் பத்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
அனுராதபுரம் ஜயசிறி மகாபோதி வளாகத்திலுள்ள சங்க சபையின் குழு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், கூட்டுப்படைத் தளபதி மற்றும் சிவில் பாதுகாப்புப் படைப் பணிப்பாளர் நாயகம் போன்றோரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான விருதுகளை வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க வழங்கி கௌரவித்தார்.