June

June

பாகிஸ்தானில் தாலிபான் தலைவர் கொலை

zainuddin.jpgபாகிஸ் தானிய தாலிபன் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் எதிர்ப்பாளரான குவாரி சைனுதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலரால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களை கொல்லும் தற்கொலை குண்டு தாக்கு தல்களை பயன்படுத்தும் பைதுல்லா மெஹ்சூத் இன் தாக்குதல் நடைமுறைகளை இவர் கண்டித்திருந்தார். இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று அவர் கூறியிருந்தார்.

தாலிபனுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கிறது.தாலிபன்கள் வலுவாக இருப்பதாக கருதப்படும் தெற்கு வசிரிஸ்தானில் ராணுவம் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்கிற நிலையில், தீவிரவாதிகள் மத்தியில் நிலவக்கூடிய பிளவுகள் வெளியில் தெரியத்துவங்கியிருப்பதாக, செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

‘வளவை மரபுரிமை – 2009’ – வர்த்தகக் கண்காட்சி 30முதல் ஜூலை4 வரை

தகவல் ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதி செயலகம் உட்பட பல அமைச்சுக்கள் இணைந்து நடாத்தும் “வலவே உறுமய – (வளவை மரபுரிமை) 2009 வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தெற்கின் அங்ருணுகொலபெலஸ்ஸ மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அமரர் டி. ஏ. ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட “சந்திரிகாவெவ” திட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வாகவே “வலவே உறுமய” கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளது.

இக் கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்றுத் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது. ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர், கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க கண்காட்சி தொடர்பாக விளக்கமளித்தார்.

‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியைப் போன்று பாரிய நிகழ்வாக “வலவே உறுமய” கண்காட்சி இடம் பெறவுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு, நிர்மாணம் மற்றும் பொறியியல்துறை, அமைச்சுக்கள் இணைந்து இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுடன் இது நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் தேர்தல் குறித்து புத்தளம் மக்களிடையே ஆர்வம் இல்லை?

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்திலிருந்து 19 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடையே ஆர்வம் இல்லை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவுகளை ஆடவர்களே எடுப்பார்கள் என்றும் புத்தளம் பகுதியில் இருக்கும் சில மகளிர் கருத்து வெளியிட்டுள்ளனர். யாழ் பகுதியில் இருக்கும் தமிழ் மக்களிடையே கூட இந்தத் தேர்தல் நடத்தப்படுவதில் விருப்பமில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜஃபருல்லா.

தமது உறவினர்கள் வவுனியா மற்றும் இதரப் பகுதிகளில் இருக்கும் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதே தேர்தலுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாதததுக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். எனினும் தேர்தலுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலை – 7 மாதங்களில் சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் ஏழு மாதகாலங்களில் மீள இத்தொழிற்சாலையைக் கட்டியெழுப்புவதுடன், சீமெந்து உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் செல்வநாயகம் தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளது. இவ்விஜயத்தின் போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் நிலைமையை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர்; ஏற்கனவே அங்கிருந்த இயந்திராதிகளை மீள உபயோகிக்க முடியுமாஎன்பதையும் ஆராய்ந்துள்ளார். பயங்கரவாத சூழல் காரணமாகக் கடந்த மூன்று தசாப்த காலங்களாக மேற்படி தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததுடன் அங்குள்ள இயந்திராதிகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு முன்னர் இத்தொழிற்சாலை இயங்கியபோது வருடாந்தம் இங்கு பத்து இலட்சம் மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதுடன் அது நாட்டின் சீமெந்து தேவையில் பெருமளவை ஈடுசெய்துள்ளது.

இத்தொழிற்சாலையை மீள ஆரம்பித்து சீமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிமாவட்டங்களிலிருந்தாயினும் பெற்று தேசிய சீமெந்து உற்பத்தித்துறைக்குப் பங்களிப்புச் செய்வதே நமது நோக்கமெனவும் அமைச்சர் வெல்கம தெரிவித்துள்ளார்

“சட்ட மூலங்களுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும்’

joshepmichel.jpgபாராளு மன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிலசட்ட மூலங்களுக்கு தாம் எதிர்ப்புக் தெரிவிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்ற கட்சிகளின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பொது விமான சேவைகள் தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிக்கு அதிக அதிகாரங்களுடன் ஒருவரை நியமிப்பது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், வியாழக்கிழமை மாலை நடைபெறும் அமர்வில் டெங்கு தொற்று தொடர்பான சட்ட மூலத்தை பிற்போடுவது தொடர்பான விவாதம் இவ்வார அமர்வில் இடம்பெறவுள்ளது.

பர்தாவை கண்டித்துப் பேசிய சர்கோசி

பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தாவை அணிவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார். நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தமது கொள்கை தொடர்பாக அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்திருந்தார்.

பெண்களின் தலையிலிருந்து கால் வரை மூடும் இந்த பர்தாவை அணிவது என்பது பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும், அதனால் பர்தா உடை பிரான்சில் வரவேற்கப்படாது என்றும் அவர் கூறினார். இத்தகைய பர்தாவை பொது இடங்களில் அணிவதற்கு தடை விதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவை அமைப்பதற்கு சர்கோசி தமது ஆதரவை அளித்தார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நாட்டின் அதிபர் ஒருவர் உரை நிகழ்த்தியிருப்பது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை. இதற்கு எதிரான சட்ட ரீதியிலான தடையானது குறுகிய பெரும்பான்மையுடன் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி. போட்டி

21deva.jpgயாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும்,  சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன்,  வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய,  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர,  ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும்,  வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. இக்கட்சி தனது வேட்புமனுக்களை இறுதிநாளான நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது. 

அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த நிலையில்,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.

ஐ.தே.க. வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படும்

election_ballot_.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதுடன், யாழ் நகரம் நவீனமயப்படுத்தப்படுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐ.தே.கட்சியின் வேட்பு மனுவை யாழ்.மாவட்டத் தேர்தல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் மாவட்டச் செயலகத்தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்த ஜயலத் ஜயவர்தன , ஏ.எஸ்.சத்தியேந்திராவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ். மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள 29 வேட்பாளர்களும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களில் 28 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதோடு, 5 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஜயலத் ஜயவர்தன எம்.பி.கூறுகையில்;

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தையும் நிலையான அமைதியையுமே விரும்புகிறது. வட பகுதியிலுள்ள மக்கள் யுத்தம் உட்பட பல்வேறு காரணங்களாலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது தொடர்பாக எங்களால் தற்போது எந்தக் கருத்தையும் கூற முடியாமலிருக்கின்றது. எவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் எமது கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறது. நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிராகச் செயற்படுபவர்கள் அல்ல.

நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி திறக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். யாழ்நகரிலுள்ள மத்திய பஸ் நிலையம் மற்றும் நவீன சந்தை போன்றன மறு சீரமைக்கப்பட்டு யாழ்நகரம் நவீன மயப்படுத்தப்படும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக அணுகி அதற்குத் தீர்வு காண்பதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண முடியும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் தன்னுடைய உறவினர்கள் என்றும் தமிழ்ச் சிறுவர்கள் தன்னுடைய பிள்ளைகள் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவது பேச்சளவில் நின்றுவிடக்கூடாது. அதைச் செயலுருப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வைக் காண முடியும் என்றார். யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தயாராகிக்கொண்டிருக்கின்ற போதிலும் முதன் முதலாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது ஐ.தே.கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் வேட்பு மனு தாக்கல்

21tissa.jpgவவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் நாடாளுமன்ற உறுப்பி்னர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விசேடமாகக் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். விவசாயிகளுக்கு இன்று உழவு இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பு

ஜப்பானிய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள 20 உழவு இயந்திரங்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கவுள்ளார்.யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ் உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்குக் கையளிப்பாரென மேற்படி அமைச்சு தெரிவித்தது.

ஜப்பானிய ஜென் உதவித் திட்டத்தின் கீழ் இந்த உழவு இயந்திரங்கள் விவசாய மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சிற்கு வழங்கப்பட்டவையாகும். யாழ். விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு வழங்குமுகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை யாழ். விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதாக அமைச்சு தெரிவித்தது. இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கிற்கு குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் லொறி உரிமையாளர்கள் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியு மெனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.