ஜப்பானிய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள 20 உழவு இயந்திரங்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கவுள்ளார்.யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ் உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்குக் கையளிப்பாரென மேற்படி அமைச்சு தெரிவித்தது.
ஜப்பானிய ஜென் உதவித் திட்டத்தின் கீழ் இந்த உழவு இயந்திரங்கள் விவசாய மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சிற்கு வழங்கப்பட்டவையாகும். யாழ். விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு வழங்குமுகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை யாழ். விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதாக அமைச்சு தெரிவித்தது. இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கிற்கு குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் லொறி உரிமையாளர்கள் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியு மெனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.