வட பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விசேட திட்டமொன்றை செயற்படுத்த உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் 1058 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யவிருப்பதாக குறிப்பிட்டார்.
மோதல்கள் காரணமாக வடக்கில் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் குறித்து விவரம் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 90.33 மில்லியன் ரூபா செலவில் புதிய விடுதியொன்று அமைக்கப்பட்டிருப்பதுடன் யாழ் உயர் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு 609.89 மில்லியன் ரூபா செலவில் நிர்வாகக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அங்கே கற்பிக்கும் பாடநெறிகளை பலனுள்ளதாக்குவதற்கும் மேலும் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்குமென 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 14.45 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, வவுனியாவில் 65 மில்லியன் ரூபா செலவில் உயர் தொழில்நுட்ப நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவிருப்பதாக் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.