June

June

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக்க முடிவு – பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க

parliament-of-sri-lanka.jpgகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.

இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது. இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு – பக்ரியாவை பயன்படுத்தி நுளம்பை அழிக்கும் சாத்தியத்தை ஆராய ஜனாதிபதி பணிப்பு

he_president.jpgடெங்கு ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜயரத்ன ஹேரத், அமைச்சின் செயலாளர் அதுல கணந்த லியனகே, மாகாண சபை, உள்ளூராட்சிச் சபை அமைச்சின் செயலாளர் கெஷின் ஹேரத், கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ஹத்தானி விஜேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பல உள்ளூராட்சிச் சபைகளுக்குப் பைகளைப் போடுவதற்கு உரிய இடமில்லையானால் அவசரகால சட்ட விதிகளுக்கமைய தற்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் குப்பை போடும் இடங்களை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

குப்பை கூளங்களினால் சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்கும் வகையில் குப்பைகளை மீள்சுழற்சிக்குட்படுத்த விரும்பும் முதலீட்டாளர்க ளுடன் கலந்துரையாடி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக குறிப்பாக சிவில் பாதுகாப்புப் பிரிவு, கல்வியமைச்சு, சமுர்த்தி நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி இது தொடர்பில் தொடர்ச்சியான செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதைக் கவனத்திற் கொண்டு வீட்டுத் தோட்டம், வேலைத் தளங்கள் மற்றும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

கியூபாவில் டெங்கு நுளம்பு ஒழிப்பதற்காக உபயோகப் படுத்தப்படும் பக்aரியாவை இலங்கைக்குக் கொண்டு வந்து அதன் சாத்தியத் தன்மையை பரீட்சிக்குமாறு தெரி வித்த ஜனாதிபதி, இங்கு அந்த பக்aரியாவை உருவாக்க விரும்புபவர்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இத்தகைய தொற்று நோய்களை கட்டுப்படுத்த சட்டத்தினால் மட்டும் இயலாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சகலரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது மிக முக்கியமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொகை நேற்று வரை 11,968 ஆக அதிகரித்துள்ளதுடன் 146 பேர் இதுவரை பலியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இருபது வருடங்களில் அழித்ததை இரு வருடங்களில் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgகடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.

இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

சொகுசு வாகன வரி அறவீடு

25dallas_alahapperuma.jpgசொகுசு வாகனங்கள் மற்றும் அரைச்சொகுசு வாகனங்களுக்கான வரி அறவீட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக அறவிடுவது குறித்து ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரி தனியார் காப்புறுதி நிறுவனங்களாலேயே அறவிடப்பட்டு வந்தது. இதனை வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பிரதேச செயலகங்கள் மூலம் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

images-elc.jpgயாழ்.  மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 ரயில்வே ஊழியர்களுக்கு நாளை நிரந்தர நியமனம்

25dallas_alahapperuma.jpgஒப்பந்த அடிப்படையிலான மற்றும் தற்காலிக ரயில் ஊழி யர்கள் 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (27) வழங்கப்ப டவுள்ளன. இது தொடர்பான வைபவம் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நாரஹேன் பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அழகியவன்ன, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. பீ. விஜேசேகர உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 ஐ பன்றிக் காய்ச்சல் என்று அழைக்க வேண்டாம் – உலக சுகாதார அமையம் அறிவுறுத்தல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Influenza (A) H1N1) வைரஸானது பன்றிகளிலிருந்து பரவுவதில்லையென்றும் அது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயென்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, பன்றிக் காய்ச்சல் என இந்த வைரஸை அடையாளம் காட்டுவதை விடுத்து நவல் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Novol Influenza (A) H1N1) என பெயர் குறிப்பிடுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் வசிர்தோஷி ரேஸ்டமி தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கடந்த 5 மாதங்களில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 2,906 நோயாளர்களிடம் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 1,667 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் மக்கள் மத்தியில் நிலைக்கவே நான் அரசியலில் நுழைந்தேன் – அமைச்சர் பேரியல் அஷ்ரப்

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் பிரவேசித்ததாக வீடமைப்பு அமைச்சரும் “நூஆ’ தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கவிஞர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; தலைவர் அஷ்ரப்பின் திடீர் மறைவின் பின்னர் அவரது நாமம் மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன். எனது நோக்கம் முழு அளவில் நிறைவேறி வருவதுடன் மக்கள் மனதில் தொடர்ந்தும் தலைவர் அஷ்ரப் வாழ்ந்து வருகின்றார் என்பதைக் காணும்போது எனது உள்ளம் பூரிப்பு அடைந்து வருகின்றது.

அன்று தலைவர் திடீர் விபத்தில் மரணித்தவுடன் அவர் பற்றிய நினைவு நாட்கள் செல்லச்செல்ல எதிர்கால சந்ததியின் மத்தியில் இருந்து மறைந்து விடுமோ என்ற நினைப்பிலேதான் எனது மகன் என்னிடம் தலைவரின் பெயர் தொடர்ந்து மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவ்வாறு அவர் கூறியதில் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் அன்று நான் பாராளுமன்றம் சென்றேன். அது மட்டுமல்லாமல் அதன் யதார்த்தத்தை இன்று நான் கண்கூடாக காண்கிறேன்.

பல வைபவங்களின் போதும் மேடையில் என்னை கண்டவுடன் தலைவரையும் அவர் மக்களுக்காகச்செய்த பணிகளும் ஞாபகம் வருவதாக கூறுவதுடன், அவரைப் பற்றிய நினைவுகளையும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துகின்றனர். இன்று கூட வேறு மதங்களைச் சேர்ந்த பல கவிஞர்கள் என்னைக் கண்டவுடன் மறைந்த தலைவரின் ஞாபகம் வருவதாகக் கூறியதுடன், அவரைப் பற்றியும் அவர் இலக்கியத் துறையில் காட்டிய ஈடுபாடு பற்றியும் ஞாபகப்படுத்தினர்.

மறைந்த அஷ்ரப் இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு காட்டியதுடன், கலையுலகத்தினருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். மேலும் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு கவிதைகளைப் புனைபவராகவும் இருந்தார். அவரது இலக்கிய ஆர்வத்திற்கும் கவிதை எழுதும் திறமைக்கும் எழுதி வெளியிட்ட “நான் எனும் நீ’ நல்லதோர் சான்றாகும் எனவும் தெரிவித்தார்.

உலக முன்னோடிகளின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலில் அறிவிக்க முடிவு

tube-train_pa.jpgஐன்ஸ்டின், காந்தி, ஷான் போல் சார்த்ர் போன்ற உலகின் முன்னோடி சிந்தனையாளர்களின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலின் ஒரு மார்க்கத்தில், போக்குவரத்து நிலவரம் குறித்த அறிவிப்புகளுடன் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் சுரங்க ரயில் வலையமைப்பில், ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பாதையை உள்ளடக்கிய, பிக்கடில்லி மார்க்கத்தில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கு, பயணிகளுக்கு அறிவிப்புகளைத் தரும் போது, இந்த பொன்மொழிகளை எடுத்துக்கூற உதவ, பொன்மொழிப் புத்தகம் ஒன்று தரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு உந்துதலாக இருந்த பிரிட்டிஷ் கலைஞர், ஜெரிமி டெல்லர், இந்த முயற்சி பயணிகளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி புதன்கிழமை முதல் இயங்கும்

இரண்டு மாதகாலமாக சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியிலும் தனியார் கல்விநிலையத்திலும் இயங்கிவந்த சாவகச்சேரி மகளிர்கல்லூரி புதன்கிழமை முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளது.  இப் பாடசாலையில் வன்னியில் இருந்துவந்த 354 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் இப்பாடசாலை தனியார் கட்டிடங்களில் இயங்கிவந்தன. சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் கொடிகாமம் இராமாவில் புனர்வாழ்வுக்கிராமத்துக்கு மாற்றப்பட்டமையால் பாடசாலை முழுமையான தொற்றுநீக்கிக்கு உட்படுத்தப்பட்டபின்னர் பாடசாலை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.