கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.
இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது. இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.