22

22

புத்தளம் தேர்தல் தொகுதியில் ஐ.ம.சு.முன்னணி வெற்றி

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியிலுள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட மீள்வாக்களிப்பின்  வாக்குகள்  புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய வாக்களிப்பின் போது எதுவித அசம்பாவிதங்களோ தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்களோ, இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாக்குச் சாவடியில் மொத்தமாக 1195 வாக்குகளே அளிக்கப்படவேண்டும். கடந்த 14ம் திகதி இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் புத்தளம் தொகுதி, நாயக்கர் சேனை தமிழ் வித்தியாலயத்தில் வாக்களிப்பின் போது இடம்பெற்ற மோசடிகளையடுத்து தேர்தல் ஆணையாளரால் அந்தச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டன. இதனையடுத்தே மீள் வாக்களிப்பு நேற்று நடத்தப்பட்டது.

புத்தளம் தேர்தல் முடிவுகள்

 United People’s Freedom Alliance  26,753   53.40%
 United National Party   22,667   45.24%
 People’s Liberation Front   337   0.67%

Valid 50,103   91.84%
Rejected 4,449   8.16%
Polled 54,552  
Electors 100,637

புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

 United People’s Freedom Alliance  171377   67.48%       11
 United National Party  76799   30.24%                             5
 People’s Liberation Front  4344   1.71%                             0

Valid   253,960 92.68%
Rejected  20,054 7.32%
Polled    274,014
Electors 489,852

சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம்: ரூபனின் இறுதிக்கடிதம் – தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு.

Ruban_Colவிடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்” : வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்!  தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

 “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு :

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! மாவீரர்கள், மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். ‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது. எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும். மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

neelp-pulikal.jpg“நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை. மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது. வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது. விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள். எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு :

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா? யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது. 

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான்  போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள். உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது. ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது. சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது. ”கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.

தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு

kattunayaka.jpgகட்டுநாயக்கவில் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட புலிகளின் இலகு ரக விமானத்திலிருந்து 215 கிலோ வெடி மருந்து மீட்கப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். சதுப்பு நிலப் பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளதாகக் கூறிய விங் கமாண்டர் நாணயக்கார கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிகளின் இரு விமானங்களும் செக் குடியரசின் தயாரிப்பாகுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொழும்பு நகருக்குள் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு ஊடுருவியதை அறிந்த விமானப் படையினர், புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டனர். கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகர் இருளில் மூழ்கியது.

புலிகளின் விமானங்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கொழும்பு நகரை அண்டிய நேரம் வரையில் விமானப்படை தலைமையகத்துக்கு தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன.

இதனாலேயே புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதற்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது எனவும் விமானப்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் விமானப்படை தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்த வந்த புலிகளின் விமானம் ஒன்று சூட்டுக்கு இலக்காகி இறைவரித் திணைக்களத்தில் மோதி விழுந்தது.

இப்பகுதியை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் படையதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். விமானத்தின் பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. விமானியின் உடல் பாகங்களும் விமானச் சிதைவுக்குள்ளிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று சுமார் 215 கிலோ எடைகொண்ட சீ. 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளுடன் பறந்த மற்றுமொரு விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்திய பின்னர் கட்டு நாயக்க விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து சென்ற போது விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானியின் சடலம் மற்றும் சயினைட் வில்லை, டிஜிடல் கமரா, புலிகளின் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவையும் நொருங்கிய விமான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன.

நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளன என்ற தகவல் அறிந்த மறுகணமே கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீதிகளில் செல்லும் வாகனங்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு மின்விளக்குகள் அணைக்கச் செய்யப்பட்டன.

விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறை இயங்க ஆரம்பித்தன. கொழும்பு லேக் ஹவுஸ¤க்கு முன்பாகவுள்ள சிற்றம்பலம் ஏ. கார்டின் மாவத்தையிலுள்ள இறைவரித் திணைக்களத்தின் முன்னால் புலிகள் வீசிய குண்டு விழுந்து வெடித்துள்ளது.

விமான எதிர்ப்பு ஏவுகணையின் தாக்குதலுக்குள்ளான விமானம் இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்துச் சிதறியது.

விமானத்தின் தாக்குதல் காரணமாக ஒரு விமானப்படை வீரர் உட்பட ஏழுபேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு விமான எதிர்ப்பு பொறிமுறை இயங்கிய போது வானத்தை நோக்கி ஒளிபாய்ச்சியவாறு விமானங்களை தேட ஆரம்பித்தனர். வானமெங்கும் வானவேடிக்கை போல காட்சியளித்தது.

தலைநகரிலும் அதனை அண்டிய பகுதிகள் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். குண்டு வெடிப்புகள் காரணமாக இறைவரித் திணைக்களத்துக்கு அருகேயுள்ள கட்டடங்கள் அதிர்ந்தன.

பொலிஸ் மற்றும் இராணுவ படைப்பிரிவினர் கூட்டாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இரசாயன பகுப்பாய்வாளர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜோன் ஹோம்ஸின் மறக்கமுடியாத அனுபவம்

இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வெள்ளியன்றிரவு பலமணி நேரத்தை “மெழுகுதிரி’ வெளிச்சத்தில் கழித்த அனுபவத்தை நேற்று ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு கோட்டைப் பகுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஜோன் ஹோம்ஸ் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு விடுதலைப்புலிகள் கொழும்பில் மேற்கொண்ட விமானத்தாக்குதலின்போது தலைநகரில் மின்சாரம் சுமார் ஒருமணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கியிருக்க நேர்ந்ததாக அவர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இது தனக்கு இலங்கையில் கிட்டிய ஒரு புது அனுபவம் எனவும் இதனை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேசமயம், விடுதலைப்புலிகளின் இந்த விமானத்தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஜோன் ஹோம்ஸ், இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்க முடியாதவை எனக் கூறினார்.

இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கும் பலியானவர்களின் குடும்பத்தவருக்கும் தனது கவலையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றைய பிரச்னைக்குக் காரணம்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங் கைக்கும் இந்திய அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் போராடும் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியவர் இந்திரா. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிரணாபோ, வெளிநாட்டுப் பிரச்னையில் தலையிடமுடியாது என்கிறார்.  ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம். இந்த ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை சிங்களவன் ஏற்றுக்கொள்ளாததன் வெளிப்பாடுதான், ராஜீவ் மீதான துப்பாக்கிக் கட்டை தாக்குதல்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை, நீதிமன்றத்தின் மூலம் சிங்கள அரசு பிரித்துவிட்டது. இதைக்கூட இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. தமிழினத்துக்கு எதிராக இந்தியா பச்சைத்துரோகம் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு ராஜபக்ச அரசு, தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசுதான் போரில் ஈடுபட்டுவருகிறது. மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். போரை நிறுத்தத் தயார் என விடுதலைப்புலிகள் பல முறை கூறிவிட்டனர். ஆனால் சிங்களத் தரப்பு போரை நிறுத்தத் தயாராக இல்லை.

இந்த நிலையில், இரு தரப்பும் போரை நிறுத்தவேண்டும் எனக் கூறுவது, அங்கு நடப்பதைப் பற்றி தெரியாமல் பேசுவதாகும் அல்லது மழுப்பலாகப் பேசுவதாகும். இலங்கையில் தமிழர்களை அழிக்கும் போரை நிறுத்தவேண்டும் என்று இதுவரையில் கேட்காத ஒரே கட்சி அதிமுகதான். தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழருக்காக தியாகச் சாவடைந்த கடலூர் தமிழ்வேந்தனின் இறுதி ஊவலத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சமூகவிரோதிகள் புகுந்து திமுக பதாகைகளை சேதப்படுத்தினர். ஆனால் போலீசார், நான் சொல்லியும் கேட்காமல், தடியடி கொண்டு தாக்கினர். இதில் 20 பேருக்கு தலைக்காயமும் 40 பேருக்கு காயமும் அடைந்தனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற வளாகத்திலும் அத்துமீறிய போலீசார், வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்சிக்கு எதிராக போலீசில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இத்தகையை கருப்பு ஆடுகளை முதலமைச்சர் அடையாளம் காணவேண்டும். ரவுடிகளை அழைத்துவந்த சுப்ரமணியசுவாமி வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார். போராடும் வழ்க்கறிஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார். 
 
 

ஸ்ரீதுங்க ஜெயசூரியா இந்தியாவின்மீது குற்றச்சாட்டு

srithungajaysurya.jpgஇலங் கையில் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறிகொண்டு அப்பாவி தமிழீழமக்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கிறது. இலங்கை ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த செயலை இலங்கையின் மூத்த அரசியல் வாதியான ஸ்ரீதுங்க ஜெயசூரியா நிறுத்த கோரியுள்ளார்.

புதுதில்லியில் நடந்து வரும் மனித உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ஸ்ரீதுங்க ஜயசூர்யா வந்திருந்தார். அவரிடன் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது :

இலங்கையில் வடக்கில் தஞ்சமடைந்துள்ள சுமார் 2,50,000 மக்கள் மீது இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் கொல்லபட்டு வருகின்றனர். இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரஸ் அரசு இந்த இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க்காமல் மேலும் மேலும் ஆயுத உதவி செய்து வருகிறது,

தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் தளத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று ஸ்ரீதுங்க ஜயசூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

பிறர் உயிரைப்பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை; பிரதமர் விக்கிரமநாயக்க

srilanka-parliament.jpgஎவருக்கும் பிறிதொருவரது உயிரைப் பறிக்கும் உரிமை கிடையாதென  வெள்ளிக்கிழமை சபையில் வலியுறுத்தி தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இதன் காரணமாகவே நாட்டில் ஏனைய பிரச்சினைகள் இருப்பினும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அனுதாப பிரேரணையில் பேசும் போதே பிரதமர் விக்கிரம நாயக்க இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பூரணத்துவமிக்க மனிதர், ஒரு அரசியல்வாதி என்பதற்கு அப்பால் சிறந்த மனிதத்துவம் மிக்கவர் என்ற வகையில் தான் நான் அவரைமதித்தேன். ஜெயராஜ் என்பவர் சிறந்த மனிதர், பண்பானவர், நட்பானவர்.

அவர் மரணிக்கவில்லை, அவரது உயிரை பிரித்தெடுத்துவிட்டார்கள். மக்களுக்கென சேவைகளை தொடர அவருக்கு இன்னும் நீண்ட காலம் இருந்த போதிலும் அவரது உயிர் பறித்தெடுக்கப்பட்டமையே எமக்கு அதிக கவலையளிக்கிறது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை பலரும் நம்பினார்கள். அதனால் தான் அவர் பாதுகாப்பற்ற இடங்களுக்கும் சென்றார். இந்த நிலையிலேயே அவர் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளானார். இம் மாதிரியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்காகத் தான் பயங்கரவாதத்தை ஒழித்துவருகிறது.

எவர்க்கும் பிறிதொருவரது உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. இதனால் தான் ஏனைய பிரச்சினைகள் இன்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதை அரசாங்கம் முக்கிய பிரச்சினையாக எடுத்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. ஜெயராஜ் கல்வி தொடர்பாக மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். இதனால் தான் அவர் கல்வி மன்றமொன்றையும் ஏற்படுத்தி செயற்பட்டு வந்தார். பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த அரசியல்வாதியொருவரை இழந்துவிட்டோம். ஜெயராஜ் பிறப்பில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது, மதத்துக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ஏனைய மதங்கள் தொடர்பாகவும் அக்கறையுடனும் நட்புடனும் செயற்பட்டுவந்தார். நாம் மதத்துக்கு மதம் வேறுபட்டு முரண்பட்டுக்கொண்டு ஏனையவர்களின் உரிமைகளை கூறு போடுவது தவறு.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சகல துறைகளிலும் தனித்துவம் பெற்று தெரிகிறார். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பரீட்சைத் திணைக்கள செயற்பாட்டை மேம்படுத்த சிபார்சுகளை வழங்க புத்திஜீவிகள் குழு – கல்வியமைச்சர் நியமிப்பு

srilanka-students.jpgஇலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு அவசியமான சிபார்சுகளை செய்வதற்காக நால்வர் கொண்ட புத்திஜீவிகள் குழுவை கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமித்துள்ளார். கலாநிதி எம். உபாலி சேதர தலைமையிலான இக்குழுவில் பேராசிரியர் டபிள்யூ. ஜீ. குலரத்ன, எம். என். ஜுனைத், பீ.என். அயிலப்பெரும ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

குழுவின் செயலாளராக அயிலப்பெரும செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்துசர்வதேச தரத்துக்கமைய பரீட்சைகள் திணைக்களத்தை மேம்படுத்துதல் தேசிய மதிப்பீட்டுக்கான நவீன தொழில்நுட்பவளங்களை பயன்படுத்துதல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்பணியை தரம் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து இக்குழு சிபார்சுகளை வழங்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வருடமொன்றுக்கு 217 விதமான பரீட்சைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத காலத்திற்குள் மேற்படி குழு அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல்: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை

justice.jpgசென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

நீர்க்கட்டண அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல்

water-tap.jpgமக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலான நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறும் அது தொடர்பாக அரசினால் வெளியிடப் பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை சபாநாயகரின் அனுமதியுடன் விஷேட கூற்றொன்றை வெளியிட்டு உரை நிகழ்த்துகையிலேயே இதனை வலியுறுத்திய ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது;

பெப்ரவரி 15 ஆம் திகதியிலிருந்து நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீர் வழங்கல் வடிகால் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் அவர்களது தொழிற்துறையையும் அநாவசியமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இதற்கு முன்னர் வீட்டுப் பாவனைக்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் போது மாதாந்தம் 50 ரூபா நிலையான கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் மேற்படி நிலையான கட்டணத்துக்குப் பதிலாக 50 ரூபாவிலிருந்து 1,600 ரூபா வரையிலான மாதாந்தச் சேவைக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் தலையில் மேலும் சுமையேற்றுவதாகவே இது இருக்கும்.

எமது நாட்டிலுள்ள பெரும்பாலான வீடுகளில் மாதாந்தம் 15 க்கும் 25க்கும் இடைப்பட்ட அலகு நீரையே பயன்படுத்துகின்றனர். அவர்களது நீர்க் கட்டணம் 23 மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 20 அலகுகள் நீரைப் பயன்படுத்தும் வீட்டுக்கான கட்டணம் 131 ரூபாவிலிருந்து 397.60 ரூபா வரை 203.51% அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகக் குறைந்தளவு நீரைப் பயன்படுத்துவதற்காக கணிக்கப்படும் வீடுகளுக்கான நீர்க் கட்டணம் 84 ரூபாவிலிருந்து 218.40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் 40 அலகுகள் வரை நீரைப் பயன்படுத்துகின்றனர். அவர்களது மாதாந்த நீர்க் கட்டணம் 2,464 ரூபாவாக அதிகரிக்கப்படப் போகின்றது. இவ்வாறு நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படுவது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவே இருக்கும்.

சமுர்த்தி குடும்பங்களுக்காக விஷேட நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும் 15 அலகுகளுக்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படும். 16 அலகுகளுக்கு மேல் அதிகரிக்கும் போது ஏனைய பாவனையாளர்களைப் போன்று அவர்களும் நீர்ப் பாவனை கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான வீடுகளில் நீர்ப் பாவனை 15 அலகுகளுக்கு மேல் இருப்பதால் இந்த நிவாரணம் வெறும் கண் துடைப்பு மாத்திரமே.

மத ஸ்தாபனங்களுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 ரூபா கட்டணம் 50 ரூபாவுக்கும் 1,600 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தேநீர் கடைகளைப் போன்ற சிறு கடைகளுக்கான நீர்ப் பாவனை கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது தேநீர் கடைகளும் சிறு ஹோட்டல்களும் ஆகக் குறைந்தது 50 அலகுகள் நீரைப் பயன்படுத்துகின்றன. இதுவரை அவர்களிடமிருந்து 70 ரூபா நிலையான கட்டணமாக அறவிடப்பட்டது. புதிய கட்டணத்துக்கேற்ப நிலையான கட்டணம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தேநீர் கோப்பையிலிருந்து அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்படும். இது சாதாரண பொதுமக்களைப் பாதிக்கக் கூடியதாகும்.

அதேபோன்று, கைத்தொழில் துறையின் நீர்ப் பாவனை கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மாதமொன்றுக்கு 20,000 அலகுகளுக்கும் மேலாக நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. பதிய கட்டணத்தின் படி மாதாந்த நீர்வழங்கலுக்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பொதுவாக 1,000 அலகுகள் நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. அவ்வாறான தொழிற்சாலைகள் மாதாந்தக் கட்டணமாக 4,000 ரூபா செலுத்த வேண்டி ஏற்படும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக துன்பத்துக்குள்ளாகியிருக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு மேலும் சுமையாக இருக்கும். நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அந்தந்த நாடுகள் நிவாரணம் வழங்கும் நிலையில் எமது நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மேலும் சுமையேற்றுவது தொடர்பாக எமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் நாட்டின் தொழிற்சாலைகளை வீழ்ச்சியடையச் செய்யக்கூடிய நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

“ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை தடைசெய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை’

justice.jpg“பொது மக்களுக்குத் தகவல்களை வழங்கவேண்டியது ஊடகவியலாளரின் பொறுப்பாகும். அத்தகைய தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் பொறுப்பினை நிறைவேற்றி வருகின்றவர்களுக்கு சட்டவிரோதமான முறைகளில் தடைகளை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ருவிர வெலிவத்த தெரிவித்துள்ளார்.

“லங்கா தீப’ பத்திரிகையின் செய்தியாளரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியமை மற்றும் அவரது பணிகளுக்குத் தடை ஏற்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்த வேளையிலேயே நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.

லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் அத்துல பண்டார சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சந்தன வீரக்கோன் “விஸ்வமடு பிரதேசத்தில் பயங்கரவாதிகள் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களையடுத்து மிகவும் மோசமாகக் காயமுற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவரின் அழைப்பின் பேரில் அத்துல வைத்தியசாலைக்குச் சென்றவேளையில், சந்தேகநபரின் பலத்த தாக்குதலுக்காளானதாகவும் அக்காட்சிகள் ஏனைய ஊடகவியலாளரின் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் விளக்கினார்.

ஊடக நிறுவனங்களின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய முக்கிய தகவல்களுக்குத் தடை ஏற்பட்டது எனவும், ஊடகவியலாளரின் கடமைக்கு எவரும் குந்தகம் செய்வதை அனுமதிக்க முடியாதெனவும் மற்றுமொரு சிரேஷ்ட சட்டத்தரணியான ராஜ்கருணா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் அத்துல பண்டாரமீது இவ்வாறு தாக்குதல் நடாத்திய சந்தேக நபரான ஜீ.ஏ.சாந்த ஹரிஸ்சந்குர என்பவரை 7500 ரூபா ரொக்கப் பிணையிலும், 30 ஆயிரம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு உத்தரவு வழங்கிய நீதிவான் ருவிர வெலிவத்த, மாதாந்தம், இறுதி ஞாயிறு தினங்களில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் பணித்தார்.