சென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.