16

16

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நூற்றுக்கணக்கானோர் கைதாகித் தடுத்து வைப்பு

colombo.jpgகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்று அதிகாலை முதல்மாலை வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை மேற்கொண்டுள்ளனர்.  இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைதாகி பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது.

பத்துக்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களை இலக்கு வைத்து பாரியதாக்குதல்களை நடத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மாகாணசபை தேர்தல் முடிவு: யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பா? ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிமும் தெரிவாகவில்லை. 3 தமிழர்கள் தெரிவு. : மொஹமட் அமீன்

mahinda1402.jpgவடமேல், மத்திய மாகாண சபைகளுக்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பு என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன்னணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதே நேரம் இதுவரை வெளியான முழுமையான விருப்பத்தெரிவு முடிவுகளின்படி 4 மாவட்டங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு முஸ்லிமாவது தெரிவாகவில்லை. 03 தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்:

ரா. மருதபாண்டி 21544 (நுவரெலியா மாவட்டம்)
ரா.  முத்தையா 18990  (நுவரெலியா மாவட்டம்)
வே ராதாகிருஸ்ணன் 18513 (நுவரெலியா மாவட்டம்) 

6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம்

மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தேர்தல் வெற்றியை விட நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு பாரிய வாக்குவீதத்தினால் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டியுள்ளது. ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர் களுக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடபகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அந்த மக்களை மீட்கவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளினூடாக சர்வதேச சமூகத்திற்கும் சிறந்த செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.

தேர்தல் மிக அமைதியாக நடந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வன்முறைகளில் ஈடுபடாது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு மக்களை கோருகின்றோம. வெற்றியீட்டிய இரு மாகாணங்களையும் முன்னரைவிட சிறப்பாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை – ஜனாதிபதி

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.

அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-

குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.

இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.

இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளம் – நாயக்கர்சேனை வாக்குச் சாவடி வாக்குகள் ரத்து. வடமேல் மாகாண தேர்தல் முடிவுகள் தாமதம்: புதிய தேர்தல் நடத்த ஆணையாளர் தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் மோசடி இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். அந்த வாக்குச் சாவடிக்கு மாத்திரம் வேறொரு தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

47 ஆவது வாக்குச் சாவடி அமைந்துள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்திலே இவ்வாறு மோசடி நடைபெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்கான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதி யின் இறுதி முடிவுகள் அறிவிப்பது பிற்போடப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட முடிவுகள் மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகள் என்பனவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 46 ஆவது சரத்தின் படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க 1145 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

43 சுயேச்சைகளும் கட்டுப்பணம் இழந்தன

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட 43 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன. இச்சுயேச்சைக் குழுக்கள் எதுவும் ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறாததாலேயே கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

இம்மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவ ட்டத்தில் 12 சுயேச்சைக்குழுக்களும், குருநாகல் மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களும், நுவரெலியா மாவட்டத்தில் 10 சுயேச்சைக் குழுக்களும், கண்டி மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் மாத்தளை மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.

இது இவ்வாறிருக்க, இரு மாகாணங்களிலும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இடம்பெற்றதாக சுயாதீன கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பாக 43 வன்முறைகள் இடம்பெற்றதாக கபே அமைப்பு கூறியபோதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவாக இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் இது மிகவும் அமைதியான தேர்தல் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. சுமார் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

இ.தொ.கா., ம.ம.மு. கட்சிகளுடன் எதிர்காலத்தில் தேர்தல்கூட்டு இல்லை – எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்

மக்கள் இத்தேர்தலில் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கண்டிஅனிவத்த ஜானகி ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் யுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்தத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தினால் மட்டும் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் இன்று சீர்கெட்டுப்போயுள்ளது. இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியால் மட்டுமே சீர்செய்ய முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகிய இரு கட்சிகளும் எம்முடன் இணைந்து போட்டியிடாததால் வெற்றிபெறவில்லை.

இனிமேல் எதிர்வரும் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளையும் நாம் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.

எம்முடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகளையும் தமிழ் உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன், அவர்களை எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வோம்.

சதாசிவம், பீதாம்பரம் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார்கள்’ என்றார்.

நான்கு கட்டங்களாக நிரந்தர மீளக்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ எம்.பி

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்தோர் நான்கு கட்டங்களாக சொந்த இட ங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த உறுதியான திட்டத்தின் மூலம், ஏப்ரல் மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  கடந்த வியாழனன்று அமைச்சுக்களின் செயலாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் முழுமையாகச் செய்து வருகிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

புலிகளின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு முதல்நாள் சூடான சாப்பாடும், சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். யு.என். எச். சி. ஆர். மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனங்கள் இவர்களுக்கான கூடாரங்களை வழங்கவுள்ளதெனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு தேவையான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் செய்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமான்

seeman-1302.jpgதமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?  இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான்  பங்கேற்று பேசினார்..

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.  எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார்.  சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் பெண் அமைச்சர்.

saudi-arabia.jpgசவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான பணி. எனக்கு துணை கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோல மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை நிலைவரம் அமெரிக்க செனட் குழு – பெப். 24 இல் விசாரணை

u-s-a-flag.jpgஇலங் கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுகளுக்கான செனட் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடி விசாரணை நடத்தவுள்ளது. டேர்க்சென் செனட் கட்டிடத்தில் இந்த விசாரணை இடம்பெறுமென குழுவின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் கெரி இந்த விசாரணைக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி ஜே.லன்ஸ்ரட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரட், பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் பொப்டியற்ஸ் ஆகியோர் இந்த விசாரணையின் போது சாட்சியமளிக்கவுள்ளனர். 1989 இன் பின்னர் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர்களாகப் பணியாற்றிய லன்ஸ்ரட் உட்பட முன்னாள் இராஜதந்திரிகள் இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை தொடர்பாகவும் முன்னாள் தூதுவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர 

மக்களின் இறப்புக்கும், தீக்குளிப்புக்கும் சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பு கூறவேண்டும்: த.தே.கூட்டமைப்பு

ஒரு புறத்தில் எரியும் நெருப்பில் தன்னுயிரையே உயிர் தியாகம் செய்யும் அதேவேளை, மறுபுறத்தில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக சில நாடுகளின் போக்கு அமைந்திருப்பது வேதனையும், கவலையும் தருகின்றது என த.தே.கூட்டமைப்பு விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வன்னி நிலப்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் எறிகணை, விமானத் தாக்குதலகளினால் ஒரு மணித்தியாலயத்திற்கு 5 தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் அல்லது காயப்படுவது அன்றாட நிகழ்வாகியுள்ளது. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யப்பவது நிறுத்த வேண்டுமாயின் நிரந்த போர் நிறுத்தம் மேற்கொள்வதே ஒரே வழியாகும்.இல்லையெனியில் வன்னியில் அல்லல்பட்டு அவதியுறும் ஏதிலிகள் பரிதவிக்கும் நிலையில் இலட்சக்கணக்கான மக்களை அழிவிலிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.

இந்த உண்மையை உணர்ந்து உலகத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும், அண்டைய தமிழகத்தில் உள்ள ஏழரைக் கோடி மக்களும் பேரெழுச்சியுடன் பல்வேறு போராட்டங்களையும், கவன ஈர்ப்புக்களையும் தினமும் நாடத்திய வண்ணமே இருக்கின்றார்கள். இதில் உச்சக்கட்டம் உயிர் தியாகங்களாக தமிழகத்தின் சென்னையில் முத்துக்குமார், மதுரையில் ரவி, சீர்காழியில் ரவிச்சந்திரன் மற்றும் அமசேரன், மலேசியாவில் ராஜா, தீக்குளித்து தியாகிகளாகி உயிர் நீத்துள்ளனர். தற்போது உலக மனச்சாட்சியாளர்களின் உறைவிடமாக விளங்கும் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு முன்பாக முருகதாசன் தீக்குளித்துள்ளார்.

இத்தனை தியாகங்களும் போற்றத்தக்க விலைமதிக்க முடியாத தியாகங்களாகவே மதிக்கின்றோம். அத்துடன் தியாகிகளைப் ஈன்ற பெற்றோர், மற்றும் உறவினர்களையும், அந்நாட்டு மக்களையும் மனதார மதிக்கின்றோம். ஆனால் உலக நாடுகள் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக பல்வேறுபட்ட அறிக்கைகளை விட்ட போதும் சிறிலங்கா அரசுக்கு எந்த அழுத்தங்களையும் கொடுத்ததாக தெரியவில்லை.தமிழ் நாட்டில் கொந்தழித்து எழுந்துள்ள உணர்வுகளை உள்ளத்தால் வெளிக்காட்டிய ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை தற்போதைய இந்திய மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது.

இது ஈழத்தமிழர்க்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றது. எனினும் இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் வன்னியில் தொடர்ந்து மக்கள் இறப்பதையும், தீக்குளித்து இறக்கும் செயல்களுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு கூறவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

protestsin.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேல் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வாக்கு சாவடிகளிலேயே எண்ண ஏற்பாடு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். மாலை 4.00 மணிக்கு வாக்களிப்புகள் நடைபெற்று முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். தபால் வாக்குகள் மட்டுமே வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் வைத்து எண்ணப்படும் என்றும் கூறினார். முதல்முறையாக இந்நடவடிக்கை செய்யப்படுவதாகக் கூறிய ஆணையாளர், வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது இவ்வாறு நடைபெறமாட்டாது என்றும் கூறினார்.  மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி தினமான 26ம் திகதியிலிருந்து 36 முதல் 56 வரையிலான தின காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்க ப்படும். அது ஒரு சனிக்கிழமை தினமாக இருக்கும் என் றும் கூறினார்.  2004 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மேல் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2004 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது

திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.