ஒரு புறத்தில் எரியும் நெருப்பில் தன்னுயிரையே உயிர் தியாகம் செய்யும் அதேவேளை, மறுபுறத்தில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக சில நாடுகளின் போக்கு அமைந்திருப்பது வேதனையும், கவலையும் தருகின்றது என த.தே.கூட்டமைப்பு விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வன்னி நிலப்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் எறிகணை, விமானத் தாக்குதலகளினால் ஒரு மணித்தியாலயத்திற்கு 5 தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் அல்லது காயப்படுவது அன்றாட நிகழ்வாகியுள்ளது. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யப்பவது நிறுத்த வேண்டுமாயின் நிரந்த போர் நிறுத்தம் மேற்கொள்வதே ஒரே வழியாகும்.இல்லையெனியில் வன்னியில் அல்லல்பட்டு அவதியுறும் ஏதிலிகள் பரிதவிக்கும் நிலையில் இலட்சக்கணக்கான மக்களை அழிவிலிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.
இந்த உண்மையை உணர்ந்து உலகத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும், அண்டைய தமிழகத்தில் உள்ள ஏழரைக் கோடி மக்களும் பேரெழுச்சியுடன் பல்வேறு போராட்டங்களையும், கவன ஈர்ப்புக்களையும் தினமும் நாடத்திய வண்ணமே இருக்கின்றார்கள். இதில் உச்சக்கட்டம் உயிர் தியாகங்களாக தமிழகத்தின் சென்னையில் முத்துக்குமார், மதுரையில் ரவி, சீர்காழியில் ரவிச்சந்திரன் மற்றும் அமசேரன், மலேசியாவில் ராஜா, தீக்குளித்து தியாகிகளாகி உயிர் நீத்துள்ளனர். தற்போது உலக மனச்சாட்சியாளர்களின் உறைவிடமாக விளங்கும் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு முன்பாக முருகதாசன் தீக்குளித்துள்ளார்.
இத்தனை தியாகங்களும் போற்றத்தக்க விலைமதிக்க முடியாத தியாகங்களாகவே மதிக்கின்றோம். அத்துடன் தியாகிகளைப் ஈன்ற பெற்றோர், மற்றும் உறவினர்களையும், அந்நாட்டு மக்களையும் மனதார மதிக்கின்றோம். ஆனால் உலக நாடுகள் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக பல்வேறுபட்ட அறிக்கைகளை விட்ட போதும் சிறிலங்கா அரசுக்கு எந்த அழுத்தங்களையும் கொடுத்ததாக தெரியவில்லை.தமிழ் நாட்டில் கொந்தழித்து எழுந்துள்ள உணர்வுகளை உள்ளத்தால் வெளிக்காட்டிய ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை தற்போதைய இந்திய மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது.
இது ஈழத்தமிழர்க்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றது. எனினும் இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் வன்னியில் தொடர்ந்து மக்கள் இறப்பதையும், தீக்குளித்து இறக்கும் செயல்களுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு கூறவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.