February

February

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தி.மு.க.குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

president-of-india-residence.jpgதமிழ் நாட்டில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவையின் துணைக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதுடில்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.  தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அந்தக் குழுவில் மத்திய அமைச்சர் ஆர்.ராதா, கனிமொழி எம்.பி., திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க, இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்றும், சர்வதேச அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பில் இந்திய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய அரசு இந்த பிரச்சினையை ஐ.நா.பொதுச் சபைக்கு எடுத்துச் சென்று அங்கு விவாதித்து அதன் ஊடாக பாதுகாப்பு சபைக்கு அனுப்பி அங்கிருந்து அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென ஜனாதிபதியை நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம்.

மனித உரிமைகள் அமைப்புகள், அகதிகள் ஆணைக்குழு போன்றவற்றுடனெல்லாம் இந்திய அரசாங்கம் தொடர்பு கொள்ளவேண்டும். மேலும், கடுமையான நடவடிக்கை என்றால் பொருளாதார கட்டுப்பாட்டைக் கூட இலங்கை மீது விதிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்கு படியுமென நாம் திட்டவட்டமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம்’ என்றும் துரைமுருகன் மேலும் கூறியிருக்கிறார்.

அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் – இரா.சம்பந்தன்

sampanthan.jpgவிடு தலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவில் சிக்கியுள்ள மூன்றை லட்சம் மக்களை காப்பற்றுவதற்காக அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் (பெப். 17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை வன்னியில் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசு தமிழர்கள் மீதான நன்கு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது. உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன?. அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா?.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும்? அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை என்றார் சம்பந்தன்.

கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் குழு தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட எம்.பி. என்.சிறீக்காந்தா, திரிகோணமலை மாவட்ட எம்.பி. துரைரத்ணம், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைப் பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ

cho_ramaswamy.jpgஇலங்கைப் பிரச்சினையில் மிகத்தெளிவான முடிவை எடுத்துள்ள ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்று “சோ” இராமசாமி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பொதுமேடைப் பேச்சுக்களைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து அதனை “கல்வியே கற்பகத் தரு” என்ற பெயரில் அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், துக்ளக் ஆசிரியரும் பத்திரிகையாளருமான “சோ” இராமசாமி, நல்லி குப்புச்சாமி செட்டியார் கலந்துகொண்டனர். 

“சோ” இராமசாமி  இலங்கைப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகையில்,  காஷ்மீரில் இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேறவும், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தவும் பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக்கொண்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ, அதேபோல்தான் இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லி இந்தியாவை வலியுறுத்துவது.  அந்த நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து போர் நடந்துகொண்டுள்ளது.

இங்கிருந்து கூக்குரலிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  இதனைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.  எந்த மேடையிலும் நான் தைரியமாகச் சொல்வேன். இதையே என்னை யாழ்ப்பாணத்தில் போய்ப் பேசச்சொன்னாலும் நான் பேசத் தயார். இலங்கைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சரியான முடிவை எடுத்துள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டுமே என்று பேசினார்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

fire_.jpgகடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார். கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.

திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் – தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

‘எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு.  நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான்.  ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன்.  அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  அவனுக்கு எல்லாமே  திருமாவளவனும்,  இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான்.  அவங்க ரெண்டு  பேரு மேலயும் பைத்தியமா இருப்பான்.    ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள். தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர்.  தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்.

இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது- பிரணாப் முகர்ஜி : மக்களவையில் பாமக,மதிமுக அமளி

pranaf.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும். வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது. இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி கோஷமிட்டனர். அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர். பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

58 வது படையணி புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ளனர்

udayar-kattu-tmv.jpgஇரணுவத்தின் 58வது படைணி புதுக்குடியிருப்பு மேற்கை முற்றாக கைப்பற்றி அதன்பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6வது கெமுனு படையணி,8வது கெமுனு படையணி,12வது கெமுனு படையணி,11வது காலால் படையணி,10வது காலால் படையணி, 7வது சிங்கப் படைப்பிரிவு என்பன கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாக்குதல் நடத்தி இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். படையினர் இப்பகுதியை கைபற்ற ஏ-35 (பரந்தன்- முல்லைத்தீவு) பாதைக்கு வடக்காகவும் தாக்குதல் நடத்தியதுடன் பயங்கரவாதிகளின் கடும் எதிர்பு நிலைகளையும் பல நீர்நிலைத் தடைகளையும் தாண்டி இப்பகுதியை கைபற்றியுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் போது 28 பயங்கரவாதிகளின் சடலங்களைக் கைபற்றியுள்ளனர் இதில் 14 சடலங்கள் ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கைபற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு- மேற்கு, பரந்தன் நகருக்கு 18 கி.மீ.தொலைவில் உள்ளது. பயங்கரவாதிகளிடம் எஞ்சியிருப்பது புதுக்குடியிருப்பு நகரமாகும். கைபற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை படையினர் பலப்படுத்தி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட இலங்கைப் பிரஜையை விடுவிக்க நடவடிக்கை!

pilipinas.jpgபிலிப் பைன்ஸில் கடத்தப் பட்டிருக்கும் இலங்கைப் பிரஜையைப் பாதுகாப்பாக விடுவிடுப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம், பிலிப்பைன்ஸ் அரசைக் கேட்டுள்ளது. வெளி விவகார அமைச்சு இது தொடர்பாக  பிலிப் பைன்ஸ் வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும்; மணிலாவில் இயங்கும் வன்முறையற்ற அமைதிக்கான செயலணியினருடன்; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மூதூரைச் சேர்ந்த ஒமர் ஜமில் என்பவர் வன்முறைகளற்ற அமைதி செயலணியில் தென் பிலிப்பைன்ஸில் பணியாற்றி வந்த வேளையில் கடந்த வெள்ளியன்று தென் பிலிப்பைன்ஸின் பாசிலான் தீவின் லமிற்றன் நகரில் தங்கியிருந்த சமயம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சைக் கேடடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பல்வேறு எச்சரிக்கைகளின் மத்தியிலேயே எமது அரசியல் பணிகள் தொடர்கிறது -மனோ கணேசன்

mano_ganesan_mp_.jpgஅடுத்த இரு வாரங்களில் நான் கொலைசெய்யப்படவிருப்பதாக நேற்று காலையிலிருந்து தொடர்ச்சியாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி செய்தியலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் பதற்றமடையவேண்டாமென ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளையடுத்து கொழும்பு, மலையகம், வடகிழக்கு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து பெருந்தொகையான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும், கேட்டும் அறிந்துகொண்ட கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்டவர்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்றிருக்கக்கூடிய ஒரு கிறிஸ்வ மதத்தலைவர் என்மீது அக்கறைகொண்டு இந்த கருத்தை இந்திய தொலைக்காட்சிகளில் தெரிவித்துள்ளார். நான் கவனமாக இருந்து நீண்ட நாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுவே அவரது நோக்கமாகும்.

நான் கொலை செய்யப்படவிருப்பதாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் நடைபெறுவது எனக்குத் தெரியும். என்னை கொலை செய்வதற்கு மூன்று முறை நாள், இடம் குறிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அவை கைவிடப்பட்டதாக மறைந்த நண்பர் ஸ்ரீபதி சூரியாராச்சி என்னிடம் அவர் இறப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனவே, இத்தகைய எச்சரிக்கைகள் மத்தியில்தான் எனது அரசியல்பணி தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இன்று எமது கட்சி மேல்மாகாணத்திலிருந்து மத்திய மாகாணத்திலும் பிரவேசித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் வேளையில் எம்மை அகற்றிவிடவேண்டுமென சிலர் முன்னைவிடவும் அதிகமாகவும் விரும்புகின்றார்கள்.

மனோ கணேசனை பற்றியும் எமது ஜனநாயக மக்கள் முன்னணி பற்றியும் எதிர்கால வரலாறு தீர்ப்பு கூறட்டும். இன்று நிலவும் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து மரணிப்பதைவிட நிமிர்ந்து நின்று அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மண்ணில் விழுவதே மகத்தான மனித வாழ்க்கை என்பது எனது தந்தை கற்றுத்தந்த பாடமென்றும் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்துவரப்பட்ட மக்கள் தொகை 1212 . கொழும்பு, கண்டி ஆஸ்பத்திரிகளுக்கு 28 பேர் அனுப்பிவைப்பு

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்து வரப்பட்ட வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 1212 பொதுமக்களில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து 306 பேருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 பேர் விசேட சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கும் கண்டி போதனா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 11 இலிருந்து பெப்ரவரி 16 வரை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் வேலாயுதம் சிவகுமார். மற்றவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரிமுகாங்களுக்கு திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட வன்னிப்பிரதேசமக்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.02.2009), நண்பகல் 12 மணி வரை அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

17.02.2009, நண்பகல் 12 மணி வரையான நிலைவரப்படி வெளிமாவட்டங்களிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேச மக்களின் எண்ணிக்கை வருமாறு;

கந்தளாய் ஆஸ்பத்திரி 84, தம்பலகமம் 33, பொலன்னறுவ 86, திருகோணமலை ஆஸ்பத்திரி 678, திருமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி83,

முல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28

மக்கள் தொலைக்காட்சி – யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை

makkaltv-1802.jpgதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின் கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.

இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் அ. சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புகளும் பாராட்டியுள்ளன. ஊடகநெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மைநிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளத இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்யவேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும், ஊடகநெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.