February

February

மருந்துவகைகளுக்கான தேசிய கொள்கைத்திட்டம் இல்லாமையால் பெருமளவு நிதி துஷ்பிரயோகம் – சுகாதார சேவைகள் சங்கம் குற்றச்சாட்டு

medicine.jpgமருந்து வகைகளுக்கான தேசிய கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நிதியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தமைக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேரடியாக பதிலளிக்க வேண்டுமென்று அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இக்கொள்கைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமற் போனமை காரணமாக பெதடீன் கைய்ட்றோசோல் ஹட் மற்றும் மோர்ப்பின் போன்ற வலிநிவாரண மருந்துவகைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் சுகாதார சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சையின் போது வலி நிவாரண மாத்திரைகளாக பெதடீன் உபயோகிக்கப்படுகிறது. இந்த மருந்துகள், அரசாங்க வைத்திய சாலைக்கு விநியோகிக்கப்படாமையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச்சிகிச்சைப் பிரிவு மற்றும் அனைத்து மருத்துவப் பிரிவின் சிகிச்சைப் பணிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குமாரசிங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சு ஒரு மாதத்துக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருதொகுதி பெதடீன் மருந்துகள் காலாவதியானவை என தெரிய வந்ததையடுத்து பாவனையில் இருந்து அவை அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான இம்மருந்துகளை அப்புறப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வைத்தியசாலைகளில் மோர்ப்பின் மருந்தை பாவிக்குமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மருந்தின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பால்மா தொழிற்சாலை உருவாக்க திட்டம் – அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க

cp-ratnayaka.jpgமட்டக் களப்பில் சேகரிக்கப்படுகின்ற பசும்பாலை அம்பேவல தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று பால்மாவாக மாற்றி மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதை விடுத்து அங்கேயே பால்மா தொழிற்சாலையை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

பாலின் பாவனையை அதிகரிப்பதற்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பசுவதை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கத்தினர், இறைச்சி வகை உண்பவர்களின் சங்கத்தினர் போன்றவர்களின் ஆலோசனைகளுடனேயே விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய மட்டத்தில் பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கம் எனவும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க தெரிவித்தார். விலங்குகள் திருத்தச் சட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசும் போதே அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்து பேசினார்.

பசுவை ஒரு தாயாகவே கருதுகிறோம். நல்ல ஆரோக்கியமான நபராக உருவாவதற்கு தாயின் பால் போன்றே பசுவின் பால் எமக்கு கிடைக்கிறது. தாயாக புனிதமாக போற்றப்பட வேண்டிய பசுவை மிகவும் கொடூரமாக கொல்லும் இழிவு நிலைக்கு மனிதர்கள் ஆளாகிவிட்டார்கள். எமது சமூகம் அந்தளவுக்கு முரட்டுத்தனமும், தன்னலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்குத் தேவையான பாலை வழங்கும் பசுவை பலாத்காரமாக கடத்துகிறார்கள். அல்லது களவாடுகிறார்கள். இதனால் இக் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அக் குழந்தைகளின் தாய் களவாடப்படுகிறார். கொல்லப்படுகிறார். சட்ட ரீதியாக இதற்கு கிடைக்கும் தண்டனை என்ன? வெறும் 500 ரூபா அல்லது 50 ரூபா மட்டும் தான். இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக பொலிஸ் மா அதிபருடனும், இது தொடர்பாக பேசி இருக்கிறோம். லொறிகளில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமான மாடுகளை ஏற்றி வருவதை தடை செய்தல் அவ்வாறு ஏற்றி வரும் நபர்களை கைது செய்தல் மாடுகளை கைப்பற்றுதல், போன்ற நடவடிக்கைகளுடன் அதி கூடிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பசுக்களை வளர்ப்பவர்களுக்கு காப்புறுதித் திட்டமும் அமுல் படுத்தப்படல் வேண்டும். இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக 60,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பாலின் பாவனையை அதிகரிக்கச் செய்ததன் பின்னர் 45,000 மில்லியன் ரூபாவுக்கு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க கூறினார்.

புலிகள் இயக்கம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு

anura-piriyadarshana-yappa.jpgபுலிகள் இயக்கம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் தெளிவு படுத்தியுள்ளமையை அரசாங்கம் வரவேற்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடக்கத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

“இந்தியாவின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோது அமளி துமளி ஏற்பட்டதாக அறிகிறோம். என்றாலும் புலிகள் இயக்கம் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது” என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார முன்னெடுப்பு செயற்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

glperisss.jpgஇது தொடர்பான யோசனைகள் அடங்கிய பிரேரணையொன்றை, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பு யோசனைகள் தொடர்பில் அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப் படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நிதி நிறுவனங்களில் (பினான்ஸ், லீசிங்) தவணைக் கட்டண முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து, செலுத்த முடியாத நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணமளிக்கும் திட்டமொன்றையும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் பொருளாதாரம் 14% வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முழு நாட்டினதும் பொருளாதாரம் 6.4% வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றவேளையில் மேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியானது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு நெருக்கமானது என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

ஏ-9 பாதை திறக்கப்படுவதாலும், கிழக்கு மாகாணத்தில் இது வரை செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக “எயார்ரெல்” நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.” என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், “உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கு முடிந்துள்ளது.

வங்கிக் கூட்டமைப்பை வலுவாக்குவதற்குத் தக்கதருணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், வங்கி முறைமையில் மக்கள் நம்பிக்கைகொள்ளும் நிலை மேம்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையினருக்குப் பாரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

சர்வதேச பிரதிநிதிகள் பாராளுமன்றம் வருகை

sri-lanka-parliment.jpgசர்வதேச அபிவிருத்தி மதிப்பீடு பயிற்சி கருத்திட்ட அங்கத்தவர்கள் வியாழக்கிழமை பாராளுமன்றம் வந்திருந்தனர்.

சபாநாயகர் கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்களை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபைக்கு அறிமுகப்படுத்தி நல்வரவு கூறி வரவேற்றதுடன், சபையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மேசையைத் தட்டி அவர்களை வரவேற்கும் முகமாக ஆதரவு வெளியிட்டனர்.

பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிக்கல்லூரிகள் அமைக்கப்படும் -உயர்கல்வி அமைச்சர்

உயர் கல்விக்கு பிரவேசிக்க முடியாத மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிக்கல்லூரிகளை அமைத்து தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்துள்ளார்.  கேகாலையில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியை திறந்து வைத்துப் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று உலக நாடுகளில் தொழில்நுட்பத்துறை நவீன முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. கணினி மற்றும் ஆங்கில மொழி அறிவு இன்று மாணவர்களுக்கு அவசியம் தேவை. எந்தத் துறையிலும் கணினி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாடசாலைகளில் உயர் கல்வி கற்றுவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது காலத்தின் தேவையாகும்.

வருடாந்தம் க.பொ.த.உயர்தர கல்வி கற்று பரீட்சையில் திறமையாக சித்தி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களில் சிறு தொகையினரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமையால்தான் அரசு பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு இவ்வாறான தொழில் நுட்பப் பயிற்சிக்கல்லூரிகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கு பற்றுவதற்கேற்ற கல்வி முறையே நாட்டுக்குத் தேவையாகும்.

பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் தமக்கு வேலைதருமாறு வீதிகளில் ஊர்வலம் செய்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் பட்டதாரிகள் எவருமே இவ்வாறு ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை என்றார்.

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப் புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது : வீ. ஆனந்தசங்கரி (ஊடக அறிக்கை)

aananda-_sangary.jpgதமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும்,
மக்களுக்கும்
அன்புடையீர்!

தமிழ்நாட்டின் இரண்டும் கெட்டான் நிலை

உலகநாடுகளில் இந்தியாவின் 28 மானிலங்களில் முப்பது கிலோ மீட்டர் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மிக அண்மையிலுள்ள மாநிலமாகிய தமிழ் நாடே ஏனைய இந்திய மாநிலங்களிலும் பார்க்க இலங்கை பிரச்சினையில் கூடிய அக்கறை கொள்ள வேண்டிய மாநிலமாகும்.

எமது மொழிகளாகிய தமிழும், சிங்களமும் எமது கலாச்சாரமும் இந்திய தொடர்புடையனவாகும். சிங்கள பௌத்தர்களும் இந்து தமிழர்களும் கணபதி, முருகன், ஈஸ்வரன், விஷ்ணு, பத்தினி, சரஸ்வதி, இலட்சுமி போன்ற பொது தெய்வங்களை வணங்குகின்றனர். இதில் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், சிங்களவர்கள் கணபதியை கணதெய்யோ எனவும், முருகனை கதிரகம தெய்யோ எனவும் அழைக்கின்றனர்.

பொது புதுவருடம் பொதுவான குடும்பப் பெயர்களை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் கொண்டுள்ளனர். சீதா, இலக்ஷ்மன், அருச்சுனன், இந்திரஜித், இலட்சுமி போன்ற பெயர்கள் பல தமிழர்களும் சிங்களவர்களும் உபயோகிக்கும் பொது பெயர்களாகும். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் உள்ள சில அரசியல் தலைவர்கள் இருபக்க மக்களையும் தட்டி எழுப்ப உபயோகிப்பது தொப்புள் கொடி உறவை ஞாபகமூட்டியே. தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் எவ்வாறு தொப்புள்கொடி உறவு இருக்கின்றதோ அதே போன்ற தொப்புள் கொடி உறவு சிங்கள மக்களுக்கும் மதுரை தமிழர்களுக்கும் உண்டு என்பதை பெருமளவிலான சிரேஸ்ட தமிழ்நாட்டு தலைவர்களும் தெரிந்திருக்கமாட்டார்கள். இந்த உண்மையை தமிழ் நாட்டை சேர்ந்த 0.1வீதம் மக்கள் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்த உண்மை மதுரையை சேர்ந்த பிரபல நடிகர்களாகிய திருவாளர்கள் விஐயகாந், விவேக், வடிவேலு போன்றவர்களின் கண்களைத் திறக்கும் என நம்புகிறேன். சிங்கள சமூகத்தின் ஸ்தாபகர்கள் கூட விஐயன் என்ற பெயரை கொண்டவராவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பல பின்னிப் பிணைப்புகள் உண்டு. பல கலப்புத் திருமணங்கள் நடந்தேறி பிரிவுகளின்றி வாழ்கின்றனர்.

அம்மன் கோவில், காளிகோவில் போன்றவற்றில் பூஜை நேரம் பிரசன்னமாகி இருப்பவர்கள் இந்து பெண்களிலும் கூடுதலானவர்கள் சிங்கள பௌத்த பெண்களே. தமிழ் பௌத்தர்களும். சிங்கள சைவர்களும் இலங்கையில் ஏன் இல்லை என்பதை இவ் உதாரணம் விளக்குகின்றது. வெவ்வேறு மொழி பேசும் ஒன்றவிட்ட சகோதரர்களே சிங்களவரும் தமிழருமாவர். என்று இவ்விரு இனங்களும் ஒருவருக்கொருவர் மற்றவரின் மொழியை தாராளமாக பேச பழக முடிகிறதோ அன்று நம் நாட்டு இனப்பிரச்சினை தானாக மறைந்துவிடும்.

துரதிஷ்டவசமாக தமிழ் நாட்டு தமிழர் இலங்கை பற்றி அதிகம் தெரியாமலும். களநிலைமை பற்றி பெரிதாக அறிந்து கொள்ளாமலும் தமிழர் பிரச்சினைகளுக்கு பெரும் பங்கம் ஏற்படுத்திக்கொண்டு இருப்பது பற்றி உணராமல் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் தப்பாக வழி நடத்தப்பட்டு இரண்டு மூன்றுஅரசியல் கட்சிகள் நீங்கலாக ஏனையவை எல்லாம் எமது பிரச்சினையை வைத்து பந்தாடி ஒருவரை ஒருவர் மிஞ்சி செயற்படுகின்றனர். மேலும் மேலும் அடி வாங்கும் பந்தால் நிச்சயம் துன்பத்தை இனிதாங்க முடியாது இங்கே பந்தாக குறிப்பிடப்படுவது அப்பாவித்தமிழ் மக்களையே. சில தலைவர்களால் தப்பாக வழிநடத்தப்பட்ட தமிழ் நாடு அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டியதால் தீங்கே விளைந்தது. நாளுக்கு நாள் பிரச்சினை மேலும் சிக்கலடைந்து தீர்வுக்கு அண்மிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மனிதசங்கிலி, ஹர்த்தால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள், இரயில் மறியல் போராட்டம் ஆகியவையும் அதுபோன்ற வேறு பல நடவடிக்கைகளும் எதுவித பயனும் தராத பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டது. சில சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் தொழிலுக்கு ஓவ்வாததாக அமைந்தது. பாடசாலை மாணவர்களை பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்துவதும் பௌத்த குருமாரை அவமதித்தல் போன்றவை எதிர்பார்த்த இலக்கினை அடையாது எதிர்விளைவாகவே அமைந்தன.

தமது நலனுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியும் பிழையான வழியை கையாளக்கூடாது. இலங்கைக்கு வந்து இனப்பிரச்சினை தீர்வுக்கு முயற்சியுங்கள் என பல நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அந்த நேரத்தில் நான் எடுத்த முயற்சிகள் பெரும் வெற்றியை தந்திருந்த நேரம். இலங்கையிலும் இந்தியாவிலும் நாடு பிரிவதை எவரும் ஆதரிக்காமையால் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வுக்கு ஆதரவு தேடியிருந்தேன். எமது பிரதேசங்களுக்கு, தமிழ் நாடு உட்பட இந்திய மானிலங்களின் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களை வழங்குமாறு கேட்டிருந்தேன்.

அண்மையிலும் தமிழ் நாட்டு முதலமைச்சரை ஒரு தடவை இலங்கைக்கு விஐயம் செய்யுமாறு அழைத்திருந்தேன். அதை தொடர்ந்து இலங்கை ஐனாதிபதியும் அவருக்கு அழைப்புவிட்டிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இன்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பலர் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் மக்கள் அனுபவித்த விடுதலைப்புலிகளின் கொடூர ஆட்சியைப்பற்றி அறியாது விடுதலைப்புலித் தலைவர் திரு.பிரபாகரனையும் அவரின் கொடூர அணியினையும் காப்பாற்ற விரும்புகின்றனர். இத்தகைய கொடூர ஆட்சியின் கீழ் கஷ்டப்பட்ட தமிழ் மக்கள் தம்மை புலிகளிடமிருந்து மீட்டுத் தரும்படியே வேண்டி நிற்கின்றனர். கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவன் என்ற கோதாவில் நானே ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் உட்பட பல அதிகாரிகளை விடுதலைப்புலிகளிடமிருந்து எமது மக்களை மீட்டுத் தரும்படி கேட்டிருந்தேன்.

அரச படைகளால் மீட்கப்பட்ட மக்கள் தற்போது அகதி முகாம்களில் உள்ளனர். இன்றைக்கேனும் சில தமிழ் நாட்டுத் தலைவர்கள் நேரடியாக வந்து அகதிகளிடம் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் ஆட்சியில் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தது அவர்களின் பிள்ளைகள் எவ்வாறு போர்க்களத்தில் பலிகொடுக்கப்பட்டார்கள் போன்றவற்றை கேட்டறியக்கூடாதா? இன்னும் மீட்டதற்கு ஒரு சிறு பகுதியே இருக்கும்போது அத்துடன் மக்களே தம்மை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டுத்தாருங்கள் என்று வற்புறுத்தும் போது எந்த அரசு யுத்தத்தை நிறுத்த சம்மதிக்கும்? நியாயமற்ற ஓர் கோரிக்கையை முன்வைத்துவிட்டு மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை தமிழ் நாடு அறியவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடவேண்டுமென ஓர் புதிய கோரிக்கை தற்போது சில தலைவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. இது புத்திசாலித்தனமான செயல் அல்லவென கைவிடப்படவேண்டும். தமிழ்நாடு இலங்கை பிரச்சினையில் உதவ வேண்டுமானால் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளிடம் அகப்பட்டு தவிக்கும் அப்பாவி மக்களை விடுவிக்க வேண்டும். மறுப்பின் விடுவிக்குமாறு எச்சரிக்கை விட வேண்டும். ஏனெனில் கடந்த 10 நாட்களாக பாதிப்புள்ளானோரின் எண்ணிக்கை மிகவும் கூடியுள்ளது. அதற்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும். விரைவில் ஒரு நாள் விடுதலைபுலிகள் தோல்வியை தழுவத்தான் போகிறார்கள். ஆகவே எஞ்சியுள்ள விடுதலைப்புலிப் போராளிகளையும் அவர்களால் பலாத்காரமாக பிடித்துவைக்கப்படடிருக்கும் பொதுமக்களையும் உடன் விடுவிக்கவேண்டிய கடமை தமிழ் நாட்டையே சாரும்.

தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எவரேனும் விடுதலைப்புலிகளிடம் ஏன் தம் கட்டுப்பாட்டுக்குள் பலாத்காரமாக வைத்திருக்கும்தமிழ் மக்களை விடுவித்து அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் மக்கள் ஒழுங்காக கவனிக்கப்படும் பிரதேசத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என இன்றுவரை கேட்கவில்லை?

இது ஏன் என எனக்குப் புரியவில்லை. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமே. பலமாதங்களுக்கோ அன்றி சில வருடங்களுக்கோ தம் சொந்த வீடுகளுக்கு போவது நிச்சயமற்ற நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களின் சில பகுதியிலும் வாழ்ந்த 50,000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

இந்த மக்கள் தம் வீடுகளை விட்டு ஓடும்போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கைவிட்டு கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடினர். அவர்கள் வீடுதிரும்பும் வேளை வீட்டு ஓடுகள் கூட மிஞ்சாது. 50,000 குடும்பத்தினரின் சொத்துக்களின் கூட்டுப்பெறுமதி எவ்வளவாக இருக்கும் என தமிழ் நாட்டு மக்கள் கணக்கிடத்தெரியாதவர்கள் அல்ல.

தமிழ் நாட்டவர் இலங்கை தமிழருக்கு செய்யக்கூடிய பெரும் உதவி இந்த சொத்துக்களை பாதுகாத்துக் கொடுப்பதே. யுத்த நிறுத்த மூலமே இதை செய்ய முடியும். யுத்தம் நிறுத்தப்படடு விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிடுவார்களேயானால் நாடோடிகள் போல் வாழும் மக்கள் விரைவில் தம் வீடுகளுக்கு திரும்பி இழந்த உறவினர்களை மீளப்பெற முடியாவிட்டாலும் எஞசியுள்ள தமது சொத்துகளை காப்பாற்ற முடியும்.

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப்புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தப்பாக தூண்டிவிட்டதால் பாதிப்புக்குள்ளான இலங்கை தமிழ்நாடு ஆகியவற்றின் நல்லுறவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். அத்துடன் தமது தனி நாட்டுக்கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த ஓர் தீர்வுக்கு ஒத்துகொள்ளவைக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு இருக்ககூடாது என படுகொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அடிகள் கூறியதை தமிழ் நாட்டுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

கொழும்பைத் தாக்கவந்த புலிகளின் இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன- படைத்தரப்பு தகவல்: இருவர் பலி, 52 பேர் காயம்.

colombo1.jpgகொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு  சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
neelp-pulikal.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

colombo-01.jpg

colombo-04.jpg

041.jpg

colombo-06.jpg

ltte_aircraft-2009-02-21.png

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   www.army.lk   இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இயக்குநர் சீமான் கைது

seeman-1302.jpg
திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சரண்ணடைய வந்த இயக்குநர் சீமானை  போலீசார்  கைது செய்தனர். கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது  செய்யப்பட்டுள்ளார்.