மட்டக்களப்பில் பால்மா தொழிற்சாலை உருவாக்க திட்டம் – அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க

cp-ratnayaka.jpgமட்டக் களப்பில் சேகரிக்கப்படுகின்ற பசும்பாலை அம்பேவல தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று பால்மாவாக மாற்றி மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதை விடுத்து அங்கேயே பால்மா தொழிற்சாலையை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

பாலின் பாவனையை அதிகரிப்பதற்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பசுவதை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கத்தினர், இறைச்சி வகை உண்பவர்களின் சங்கத்தினர் போன்றவர்களின் ஆலோசனைகளுடனேயே விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய மட்டத்தில் பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இதன் பிரதான நோக்கம் எனவும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க தெரிவித்தார். விலங்குகள் திருத்தச் சட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசும் போதே அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்து பேசினார்.

பசுவை ஒரு தாயாகவே கருதுகிறோம். நல்ல ஆரோக்கியமான நபராக உருவாவதற்கு தாயின் பால் போன்றே பசுவின் பால் எமக்கு கிடைக்கிறது. தாயாக புனிதமாக போற்றப்பட வேண்டிய பசுவை மிகவும் கொடூரமாக கொல்லும் இழிவு நிலைக்கு மனிதர்கள் ஆளாகிவிட்டார்கள். எமது சமூகம் அந்தளவுக்கு முரட்டுத்தனமும், தன்னலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்திற்குத் தேவையான பாலை வழங்கும் பசுவை பலாத்காரமாக கடத்துகிறார்கள். அல்லது களவாடுகிறார்கள். இதனால் இக் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அக் குழந்தைகளின் தாய் களவாடப்படுகிறார். கொல்லப்படுகிறார். சட்ட ரீதியாக இதற்கு கிடைக்கும் தண்டனை என்ன? வெறும் 500 ரூபா அல்லது 50 ரூபா மட்டும் தான். இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக பொலிஸ் மா அதிபருடனும், இது தொடர்பாக பேசி இருக்கிறோம். லொறிகளில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமான மாடுகளை ஏற்றி வருவதை தடை செய்தல் அவ்வாறு ஏற்றி வரும் நபர்களை கைது செய்தல் மாடுகளை கைப்பற்றுதல், போன்ற நடவடிக்கைகளுடன் அதி கூடிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பசுக்களை வளர்ப்பவர்களுக்கு காப்புறுதித் திட்டமும் அமுல் படுத்தப்படல் வேண்டும். இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக 60,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனினும் பாலின் பாவனையை அதிகரிக்கச் செய்ததன் பின்னர் 45,000 மில்லியன் ரூபாவுக்கு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *