உயர் கல்விக்கு பிரவேசிக்க முடியாத மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிக்கல்லூரிகளை அமைத்து தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்துள்ளார். கேகாலையில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியை திறந்து வைத்துப் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று உலக நாடுகளில் தொழில்நுட்பத்துறை நவீன முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. கணினி மற்றும் ஆங்கில மொழி அறிவு இன்று மாணவர்களுக்கு அவசியம் தேவை. எந்தத் துறையிலும் கணினி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாடசாலைகளில் உயர் கல்வி கற்றுவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது காலத்தின் தேவையாகும்.
வருடாந்தம் க.பொ.த.உயர்தர கல்வி கற்று பரீட்சையில் திறமையாக சித்தி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களில் சிறு தொகையினரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமையால்தான் அரசு பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு இவ்வாறான தொழில் நுட்பப் பயிற்சிக்கல்லூரிகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கு பற்றுவதற்கேற்ற கல்வி முறையே நாட்டுக்குத் தேவையாகும்.
பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் தமக்கு வேலைதருமாறு வீதிகளில் ஊர்வலம் செய்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் பட்டதாரிகள் எவருமே இவ்வாறு ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை என்றார்.