
‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka – a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பிபிசி சிங்கள சேவைப் பணிப்பாளர் பிரியத் லியனகே இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவ்வுரையாடலில் இலங்கையில் பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய பிரான்ஸஸ் ஹரிசன், தமிழ் ஊடகவியலாளர் பேர்ள் தேவநாயகம், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடம்கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது உரையில் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை விளக்கியதுடன் இலங்கை அரசு மனித உரிமைகளையும் ஊடகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதைச் சுட்டிக்காட்டினர்.
ரிச்சட்டி சொய்சாவின் படுகொலை முதல் இதுவரை 37 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பேர்ள் தேவநாயகம், அண்மைய காலங்களில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரளவு பயமற்ற சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். இன்றைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடைப் பிடிக்கும் போக்கு இலங்கையர்கள் மனிதர்களுக்கு குறைவானவர்கள் என்ற எண்ணத்தில் இயங்குவது போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் தான் கலந்துகொண்டதன் ஊடகப்பின்னணியைக் கூறி ஆர் ஜெயதேவன் தன்னுரையை ஆரம்பித்தார். எல்ரிரியும் இலங்கை அரசும் மனித உரிமைகளை மீறுகின்றன என்றும் ஆனால் இலங்கை அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயறபடுவது அவசியம் என ஆர் ஜெயதேவன் தெரிவித்தார். இலங்கை அரசு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை வைத்து பொறுப்புடன் செயற்படாத வரை புலிகளும் இருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆர் ஜெயதேவன் இலங்கை விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.
நிர்மலராஜனின் படுகொலையைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸஸ் ஹரிசன் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனது அனுபவத்தினூடாகப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் எண்ணை வளம் இல்லை, அணுகுண்டுகள் இல்லை, இலங்கைக்கு பிராந்திய முக்கியத்துவமும் இல்லாததால் இலங்கைப் பிரச்சினை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் பிரான்ஸஸ் ஹரிசன் தெரிவித்தார்.
சர்வதேச ஊடகவியலாளராக ஆசியாவில் கடமையாற்றிய சாரு லட்டா ஹொக் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அரசுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கும் பொறுப்புடையவராக இருந்தவர். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளராக உள்ளார். இவருடைய உரையின் அடிப்படையே கேள்வி நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களை வன்னிக்குள் அனுமதிக்காதது, அங்கு நிலவும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட சாரு ஹொக், அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரச கட்டப்பாட்டுப் பகுதிக்குள் வருவோரைத் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த யுத்தத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 2000 பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பிய அர்சுனன் எதிர்வீரசிங்கம் பொஸ்னியா, சூடான் ஆகியவற்றின் உதாரணங்களைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ‘ஏன்? இனப்படுகொலை என்று குறிப்பிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வு ஏற்பாடானது முதலே புரொன்ட் லைன் கழகம், பிபிசி, மனித உரிமைகள் கண்காணிகப்பு அமைப்பு ஆகியன இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூற மறுப்பதாக எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. அதன் தொடர்ச்சி புரொன்ட்லை ஏற்பாடு செய்த நிகழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றது.
அர்ச்சுனன் எதிர்விரசிங்கத்துக்குப் பதிலளித்த சாரு ஹொக் ”நான் 2000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டது இலங்கை இராணுவத்தினால் மட்டும் ஏற்பட்டது அல்ல. எல்ரிரிஈ யும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். காயப்படுத்தி உள்ளனர். இந்நிலைக்கு இரு தரப்புமே காரணம். ஆகையால் இதனை ஒரு இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது” எனத் தெரிவித்தார். சாரு ஹொக்கின் இந்தப் பதில் அங்கு வந்திருந்த எல்ரிரிஈ ஆதரவு அமைப்பினருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.
அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாரு ஹொக், ”100 000 பேர் வந்து சொன்னால் எதுவும் உண்மையாகிவிடாது. அதற்கு ஆதாரங்கள் வேண்டும். சர்வதேச விதிமுறைகள் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பு யுத்தத்தில் காயப்பட்டு வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அந்த அறிக்கையைப் (War on the Displaced – Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni : http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0209web_0.pdf ) படியுங்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ, பிரிஎப், ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட், ரிவைஓ, தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது. அந்நிகழ்வின் ஓரிடத்தில் பிரான்ஸஸ் ஹரிசன் தனக்கு வந்த மிரட்டல்கள் அவமதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். தன்னை றோ ஏஜென்ட் என்றவர்கள் பலதையும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இடையிடையே இந்நிகழ்வை மீண்டும் பொது விவாதத்திற்கு பிரியத் லியனகே கொண்டு வந்த பொழுது ஏனைய சில கேள்விகளும் எழுப்பப்பட்டது. ‘இந்த யுத்தம் எல்ரிரிஈ இன் முடிவா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸஸ் ஹரிசன், ‘எல்ரிரிஈ நிலங்களை இழந்துள்ளார்கள். மிகக் குறுகிய நிலப்பரப்பிலேயே உள்ளனர். ஆனால் ஒரு உறுதியான இராணுவமாகச் செயற்பட்ட அவர்களுடைய கனரக ஆயுதங்கள் எதனையும் இலங்கை இராணுவம் கைப்பற்றவில்லை. அவர்களிடம் அதி விசேட கடற்படைக் கலங்களும் இருந்தது. அவையும் கைப்பற்றப்படவில்லை. புலிகளை அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது அவர்கள் வேறு வடிவத்தில் வெளிப்படுவார்கள்’ என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்டார்.
இதே கருத்தை வெளியிட்ட பிரியத் லியனகே அரசாங்கம் ஓடு பாதைகளைக் கைப்பற்றியதாகக் கூறிய பின்னரும் வான் புலிகள் கொழும்பிற்கு வந்துள்ளனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனுடன் பேசிய போது அவர்கள் வழமைபோல் முழுமையான மறுப்பையே வழங்குவதாகக் கூறி உண்மை நிலையைக் கணிப்பது கடினமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவற்றைவிடவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இரு மணி நேரம்வரை நிகழ்வு நீடித்தது.