வன்னி யிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களின் வைத்திய சேவைகளை முன்னெடுக்கவென, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இந்த மருந்துகள் ஏற்கனவே, முல்லைத்தீவில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் உட்பட வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார், 10 ஆயிரம் மக்களுக்கு 3 மாதகாலத்துக்குத் தேவையான மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வவுனியா மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென 12 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தேவையான வைத்தியர்கள், தாதியர், மருத்துவ ஊழியர்கள், தொழில்நுட்பவியலாளர்களை ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.