தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதக் குழுவொன்றை வைத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லாமற் போயுள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்றுத் (23.01.2009) தெரிவித்தார்.
தமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளதாலும், தாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கம் போதிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், தற்போது ஆயுதக் குழுவுக்கான அவசியம் இல்லையென்று தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் கடந்த டிசம்பர் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், தமது அமைப்பில் உள்ள சகல சிறுவர்களையும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
அதேநேரம், இன்னும் சில வாரங்களில் மேலும் 20 சிறுவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் முரளிதரன் எம். பி. கூறினார்.
சிறுவர்களை விடுவிக்கும் இந்த உடன்பாட்டின்படி நேற்று முன்தினம் 14 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்கவென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையில் தனியான அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் கம்லத், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டியுமலே ஆகியோரும் தகவல்களை வழங்கினர்.
இங்கு தொடர்ந்து தகவல் வழங்கிய முரளிதரன் எம். பி, எமது அமைப்பில் சிறுவர் போராளிகள் இல்லை. எனினும் பொதுவான விடயங்களைக் கவனிப்பதற்காக சிறுவர் பிரிவொன்றை நடத்தி வந்தோம். இப்போது அதற்கான தேவை இல்லை. சகலரையும் விடுதலை செய்து புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த போது ஆறாயிரம் போராளிகளை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினேன். இதில் 1600 பேர் சிறுவர்களாவர். எமது அமைப்பில் எஞ்சியுள்ள போராளிகளை அரச படைகளில் இணைந்து பணியாற்ற வழியேற்படுத்தியிருக்கிறோம். விரும்பியோர் வெளிநாடு செல்லலாம். அல்லது சமூகத்தில் இணைந்து கொள்ளலாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒரு புதிய மாற்றத்தைக்கான விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பிரதிநிதி பிலிப் டியுமலே, சிறுவர் போராளிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கமும் ரீ. எம். வீ. பீ. யினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையைப் பாராட்டுவதாகக் கூறினார். மேலும் 53 சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், வடக்கில் 93 சிறுவர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வன்னியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வதாகக் கூறிய யுனிசெப் பிரதிநிதி, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார். சிவிலியன்களைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
ரி.எம்.வி.பி. சிறுவர் போராளிகள் 15பேர் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சிறுவர் போராளிகளுள் ஒரு பகுதியினர் (22.01.2009) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பிரதி நிதிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
தமிழ் இயக்கங்களிலுள்ள சிறுவர் போராளிகளை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 22.01.2009 காலை சிறுவர் நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இச்சிறுவர் நலன்புரி நிலையத்தைத் திறந்து வைக்கும் வைபவத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், பிலிப் பேண்டுமாறோ, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்புப் பணிப்பாளர் அன்ரூரோக்கியா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி செளலிட்ரஸ், நீதியமைச்சின் செயலாளர், சுகத்கமன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர், ஜெயம் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.
சிறுவர் நலன்புரி நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர் போராளிகளை அவ்வமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி பிரதீப் மாஸ்டர் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எமது இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.
அரசாங்கத்துடன் எமது கட்சித் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய இவர்களை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 25 சிறுவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று குறிப்பிட்டார். மட்டக்களப்பு கச்சேரியில் நேற்றுக்காலை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் நலன்புரி பிரிவில் தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளராக அ. கோடீஸ்வரன் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்