நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலைவரங்கள் பற்றிய உண்மையான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான சுனில் கந்துன்நெத்தி புதன்கிழமை சபையில் வயுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்குகென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே கந்துன்நெத்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“நாடு இன்று பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சிலர் இதை கண்டுகொள்வதாகவும் இல்லை, அதற்கு தயாராகவும் இல்லை. வடக்கை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருக்கும் வேளையில், இரண்டாவது மிகப் பெரிய யுத்தமான பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதில் பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். காரணம் பொருளாதார நெருக்கடி என்பது வடக்கு, தெற்கு என பாகு பாடில்லாமல் சகல பகுதிகளிலும் வாழும் மக்களையும் பாதிக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தலையில் சுமந்து வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையே இன்றைய வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஆடைக் கைத்தொழிற்சாலையொன்று தனது ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் அறிவித்தலில் இலங்கையிலுள்ள 850 ஆடைத்தொழிற்சாலைகளில் 300 தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாகவும் இவற்றில் 2008 ஆம் ஆண்டு மாத்திரம் 100 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இன்று நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பெருந்தோட்ட துறை இரத்தினக்கல் வர்த்தகம், சுற்றுலாத்துறை என பல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் அந்நிய செலாவணி வருமானம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வருடத்தில் எரிபொருள் உள்ளிட்ட பருப்பு,சீனி,அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவென பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்நிய செலாவணி கையிருப்பானது 3 வருடத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
இன்று ஏற்பட்டிருக்கும் நிதி, பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. எனவே, அரசாங்கம் நாட்டின் நிதி, பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும். இதனை எமது கட்சி சார்பான யோசனையாக நான் அரசாங்கத்துக்கு முன் வைக்கிறேன் என்றார்.