எம்.ரி.வி., எம்.பி.சி. நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்துக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொறுப்புள்ள அதிகாரி என்ற வகையில் அது தொடர்பான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென, நுகேகொடையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடக அடக்கமுறைக்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான சனத் பாலசூரியவும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“ஊடக அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய சனத் பாலசூரிய; இன்று நிலவி வருவது ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோவான பிரச்சினையல்ல ஜனநாயகத்துக்கான பிரச்சினையே இன்று நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருவர் எதையும் பேசி விட்டு வீடு செல்ல முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. கருத்துச் சுதந்திரமும் மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையும் மறுக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தெடர்பாக இதுவரை விசாரணைகள் நடத்தப்பட்டு இவற்றுக்குப் பொறுப்பான எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இதன் மூலம் எவரும் ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ தாக்கிவிட்டு துணிவாக இருக்க முடியுமென்ற நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஆபாயகரமானது. ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் நாட்டின் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் ஊடக சுதந்திர த்துக்காக போராடும் அதேநேரம், ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகளுக்காகவும் போராட நாம் முன்நிற்கிறோம்.
சிரச நிறுவனம் மீதான தாக்குதல் நடத்துவதன் மூலமோ, லசந்தவை படுகொலை செய்வதன் மூலமோ எம்மை தடுத்து நிறுத்தி விடமுடியாது. அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றியும் “சிரச’ ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். பாதுகாப்பு செயலாளர் என்பவர் பொறுப்பு வாய்ந்த அதிகாரி. பொறுப்பிலிருந்து கொண்டு அவர் பொய் கூற மாட்டார். எனவே, அவர் போதிய விசாரணைகளின் பின்னரான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் கூறியதைப் பார்த்தால் விசாரணைகள் முடிந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே, அவர் மக்கள் முன்நிலையில் ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை, அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.
இதேநேரம், ஜே.வி.பி.யின் அநுர குமார திஸாநாயக்க எம்.பி.இங்கு பேசுகையில்; “கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறார். யுத்த நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. அதற்காக அவர் மீது மதிப்பும் இருக்கிறது. எனினும் ஒரு துறையில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக, மற்றொரு துறையை முடக்க இடமளிக்க முடியாது. சிரச ஊடக நிறுவனத்தின் மீது தீ வைக்கப்பட்டமையானது நிறுவனத்தினரே செய்து கொண்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அதிகாரி. அவர் ஜனாதிபதியின் தம்பியாக இருந்தாலும் அவருக்கு அப்படிக் கூற முடியாது. அதிகாரி ஒருவர் என்ற வகையில் அவர் கூறியது உண்மையாக இருக்க வேண்டும். அப்படியாயின் அந்த தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.