15

15

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன – றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு

risard.jpgவிடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய செய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மீட்கப்படாத பகுதிகளிலிருந்து அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை 1,168 பேர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா மெனிக் பாம் மற்றும் நெலுக்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு செய்து கொடுத்து வருகின்றது.

அமைச்சின் நிதிமூலம் வவுனியா பிரதேசத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்குவதற்கென தற்காலிக வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 150 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 75 வீடுகளின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கமைய 47 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் தற்சமயம் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனையோரை மிக விரைவில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்படாத பகுதிகளிலிருந்து வந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், உடைகள், சிறுவர்களுக்கான உணவு வகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகளுக்கென ரூபா 30 மில்லியன் நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.றாசிக் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் நாட்களிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் கைது

arrest.jpgபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரிடம் முரசுமோட்டை பிரதேசத்தில் வைத்தே படையினரால் இம் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

படையினர் முன்னேறி நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் நான்கு சடலங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக ட்ரக் வண்டி ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மோதல்கள் நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து இரகசியமாக தப்ப முயன்ற மூவரையே படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் அலக்ஸ் மற்றும் யசோதரன் ஆகிய இருவரும் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவர். அலக்ஸ் என்பவர் பொட்டு அம்மானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், புலிகளின் புலனாய்வு துறையிலும் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் யசோதரன் என்பவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

air.jpgசிங்கப்பூரில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வசூலித்து மோசடி செய்த முகவர் நிலையமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் மருதானையில் முற்றுகையிட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாட்டு கல்வி ஆலோசகர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்த மேலும் இருவரையும் அண்மையில் குருணாகலையில் வைத்து கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து தலா 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இவர்கள் வசூலித்திருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட எமது அதிகாரிகள் அங்கு பணியகத்தினால் அங்கீகரிக்கப்படாத பல துறைளுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி எழுதப்பட்டிருந்த போலி ஆவணங்கள் மற்றும் 60 இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் என்பவற்றை அங்கிருந்து மீட்டிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

42 புலி உறுப்பினர்களின் சடலங்கள் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் 42 சடலங்களும் நேற்று (14) அரசாங்க செலவில் புதைக்கப்பட்டன. மேற்படி சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் நேற்று கூறினர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வவுனியா ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் பல சடலங்கள் அழுகியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி சடலங்களை ஐ. சி. ஆர். சி. ஊடாக புலிகளிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவற்றை அரச செலவில் புதைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று 26 ஆண்களினதும் 16 பெண்களினதும் சடலங்கள் புதைக்கப்பட்டன.

பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதலை நிறுத்தவும்

jet-1301.jpgவன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதலை நிறுத்துமாறு யாழ. மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாவது விமாமனத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களினால் மக்கள் நாளாந்தும் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர். வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையிலான ஏ35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்கதல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாது தவிக்கின்றனர் நாம் மக்களை தேவாலையங்களில் ஒன்று கூடுமாறு அழைக்கலாம் அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர் தற்போது உள்ள நிலயில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம். எனவே பொது மக்களின் பகுதிகளில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களை அரசாங்கம் நிறுத்தவேண்டும்

இவ்வாறு ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறி விக்கிமநாயக்கää பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ,  மற்றும வவுனயா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர் பிரித்தானியத் தூதுவர் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் நடவடிக்கை

daglas.jpgவலிகாமம் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழ்ந்துவரும் பொதுமக்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தங்களது தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன் பிரகாரம் தங்களுக்கு இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் இது தமக்கு போதாமல் இருப்பதால் இதனை கூட்டித்தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்.குடாநாட்டில் வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் இவ்விடயம் குறித்து வெகுவிரைவில் மாற்றங்கள் ஏற்படவிருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தங்களது கிராமசேவையாளரை மாற்றித்தரும்படி இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர், தெல்லிப்பழை கிராம சேவையாளரை இரு தடவைகள் இம்மக்கள் வாழும் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய ஏற்பாடு செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது பதிவுகளை மாற்றித்தரும்படி இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பணித்ததுடன் அண்மைக்கால வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரியமுறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேச செயலாளரிடமிருந்தும் அப்பகுதி கிராமசேவையாளரிடமிருந்தும் அறிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம்மக்கள் வாழும் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகமொன்றை அமைக்குமாறு இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இச்சந்திப்பின்போது கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட வலி. வடக்கு மற்றும் கிழக்கு கிராமசேவையாளர்களும் கலந்துகொண்டதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் ஆறுமுகன்

aarumugam.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தோட்டப் புறங்கள் மாத்திரமன்றி, நகரங்களும் பாரிய அபிவிருத்தியடைந்து வருவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலையகத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, கொழும்பிலிருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ‘மக நெகும’ திட்டத்தின் கீழ் மலையகத் தோட்டப்புறப் பாதைகள் பல செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக கரடுமுரடாகக் காட்சியளித்த பாதைகள் கொங்கிட் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு இந்தப்பாதைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். அதே போன்று மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் மூலம் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் இளைஞர், வலுவூட்டல் அமைச்சுக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றும் அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் பான்கிமூன் மத்திய கிழக்கிற்கு விசேட விஜயம்

gaza_war02.jpgஐ.நா.  செயலாளர் பான்கிமுன் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இன்று புதன் கிழமை அவர் எகிப்து , ஜோர்தானுக்குச் சென்று காஸாவில் தோன்றியுள்ள அப்பாவிகளின் நெருக்கடிகளை நிறுத்துவது பற்றி பேசுவார். இஸ்ரேலை காஸா மீதான தரை, வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஹமாஸை ரொக்கட் தாக்குதலை நிறுத்துமாறும் கோரவுள்ளதாக பான்கிமுன் சொன்னார்.

அப்பாவிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ள தனது விஜயம் வெற்றி பெற அனைத்து வழிகளையும் செல்வாக்குகளையும் பாவிக்கவுள்ள பான்கிமுன் லெபனான், சிரியா, துருக்கி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

ஐ.நா. வின் ஆலோசனைகளை இரு தரப்பும் நிராகரித்தமையால் சிவிலியன்கள் வாழ்வு கவலைக் கிடமாகியுள்ளதாக பான்கிமுன் கவலை வெளியிட்டுள்ளார். ஹமாஸ¤க்கு நெருக்கமான நாடுகளான லெபனான், சிரியாவிடம் ரொக்கட் தாக்குதலை நிறுத்தும்படி ஹமாஸை வற்புறுத்துமாறு கோரவுள்ளதுடன் இஸ்ரேலிடம் நேரடியாக தாம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

எகிப்தின் எல்லைகளைத் திறந்து பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேலும் எகிப்தும் உடன்பட வேண்டும். இதுபற்றியும் பான்கிமுன் பேசுவார் இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர். நாலாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் காயமடைந் தோர் படும் அவலம் காண்போரைக் கண் கலங்க வைக்கும்.

தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணங்கி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதை நிராகரித்த ஹமாஸ் தமது போராளிகள் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தரைத் தாக்குதல் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து பாடசாலைகள், பொது இடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு விஜயத்தை முடித்துக் கொண்டு பான்கிமுன் 20ம் திகதி அமெரிக்கா செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் பான்கிமுன் காஸாவின் நிலவரம்பற்றி ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பு அரபு நாடுகளின் தலையீடுகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பராக் ஒபாமாவை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர் மூவர் கைது

handcuff.jpgஐக்கிய அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்ற இலங்கையர் மூவரும் அவர்களுக்கு உதவியவர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மக் அலனிலுள்ள மில்லர் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று சட்டவிரோத குடிவரவாளர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகள், போலி கனேடிய அடையாள அட்டைகளுடன், கனடாவைச் சேர்ந்த சுரேஷ் சுந்தரலிங்கம் (வயது 28) என்பவரை கைது செய்தனர்

அத்துடன், அவரின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்காவினுட் புக முனைந்த இலங்கையர் மூவரும் அமெரிக்க எல்லைப்பகுதி ரோந்து படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தம் குடும்பத்தை ஐக்கிய அமெரிக்கா மெச்சிக்கோ ஊடாக கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக 32 ஆயிரம் டொலர்களை சுந்தரலிங்கத்திற்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், வழக்கறிஞரின்றி புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சுந்தரலிங்கம் மறுத்து விட்டார். இந்நால்வரதும் ஆரம்ப விசாரணைகள் நாளை இடம் பெறும். உரிய மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழ் மொழியிலேயே வாக்கு மூலம் அளிப்பர்.

வடமேல், மத்திய மாகாண தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கு 75000 பேர் விண்ணப்பம்

ballot-box.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட் டாரங்கள் தெரிவித்தன. இரண்டு மாகாணங்களிலுமுள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களினது தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமே இவ்விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தகுதியுள்ளோர் பெப்ரவரி 02ஆம் 03ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும். இதற்கான வாக்குச்சீட்டுக்கள் இம் மாதம் 21ஆம் திகதி கிடைக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறின.