January

January

வடமாகாண ஆளுநரின் உப அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு

வடமாகாண ஆளுநரின் உப அலுவலகம்  செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் உள்ள அரச சுற்றுலாவிடுதியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. ஆளுநர் சரத்சந்திர டிக்ஸன் தலா வைபவரீதியாக அலுவலகத்தை திறந்துவைத்ததுடன் மாகாண அமைச்சின் செயலாளர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடலையும் நடத்தினார்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களுடைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக முக்கிய வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோடியாக அவசர தேவையாகவே உப அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்டுள்ளது. மற்றும் பொதுமக்கள் தமது தேவைகளை கவனிக்க நீண்ட தூரம் பயணம் செய்து திருகோணமலைக்கு செல்லவேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் இந்த உப அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. வடக்கே வசந்தம் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதமாக நடைபெறவேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வோம் என ஆளுநர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.

வாரத்தில் இரு தினங்கள் உப அலுவலகத்தில் சகல மாகாண அமைச்சுகளுடைய செயலாளர்களும் பிரசன்னமாகி இருப்பார்கள் என மாகாண பிரதம செயலாளர் எஸ்.இரங்கராசா தெரிவித்தார். வவுனியா மாவட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைவர் செபமாலை திரைவீரசிங்கம் மற்றும் உறுப்பினர்கள் தேசநிர்மாண அமைச்சின் இணைப்பாளர் பி.சுமதிபால ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மீண்டும் யாழ் தேவி புகையிரத சேவை – போக்குவரத்து அமைச்சர்

train.jpgவடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மேம்படுத்தும் முகமான யாழ்தேவி புகையிரத சேவையை காங்கேசன்துறை வரையில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கைகளுக்கென நாட்டின் அனைத்து மக்களையும் இனபேதமற்ற முறையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ள வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 169 கிலோமீற்றர் புகையிரத பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
 

“ஜெயவர்தனபுர வைத்தியசாலை நிதி மோசடி விசாரணை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்’

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற நிதி மோசடி பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ் வைத்தியசாலைக்கு அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் 680 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள போதும் பரசிற்றமோல் மாத்திரைக்காகவும் நோயாளர்களிடம் பணம் அறவிடப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற முறைகேடுகளை இனம் காணவென குழுவொன்றை நியமித்திருப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சங்கத்தின் பேச்சாளர் உப்புல் குணசேகர தெரிவித்தார். பாராளுமன்ற சட்டத்துக்கு அமைவாக 1983 இல் நிறுவப்பட்ட இவ் வைத்தியசாலையில் தற்சமயம் மூன்றாவது நிலையில் உள்ள மருத்துவப் பட்டப் பின்படிப்புப் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவ் வைத்தியசாலை முகாமைத்துவ சபையின் சீரற்ற நிர்வாகத்தால் கடுமையான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். முறைகேடுகளை விசாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையின் படி, மிக மோசமான முறைகேடுகள் இடம்பெறும் நிறுவனங்களில் ஜெயவர்தன புர வைத்திய சாலை 9 ஆவது இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வைத்திய சாலையின் இந்த நிலைமைக்கு எவரும் பொறுப்புக் கூறுவதாக இல்லை. இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வைத்திய சாலைக்கான நியமனங்கள் அனைத்தும் சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இவற்றில் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட சில நியமனங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையின் தற்போதைய சீர்கேடான நிலைமையை திருத்தியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் உரிய பயிற்சியைப் பெறுவதற்கு இவ்வைத்தியசாலை தகுதியற்றது என பயிற்சி பெறும் பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சுப் பதவிகள் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் உரிய முறையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டும் – மனோ எம்.பி. தெரிவிப்பு

mano_ganesan_mp_.jpgஇன்று பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் அரசாங்கங்களைக்குறை கூறுவதால் எவ்வித பிரயோசனமுமில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்யாதவர்களையே உண்மையில் குறை கூற வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள எலிபடை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு, கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு, பெற்றசோ ஆகிய தோட்டங்களில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனோ கணேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிகமாக உழைத்துக் குறைந்த வருமானம் பெறுகின்ற ஒரே சமூகமாக பெருந்தோட்டச் சமூகம் இன்றும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற இந்தப் பெருந்தோட்டச் சமூகப்பிரதிநிதிகள் இந்த மக்களின் தேவைகளை உணர்ந்து சேவை செய்யாமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.

மலையகத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் இன்று அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டிருக்கின்ற போதும் இவர்களால் சமூகத்துக்கு எந்த வித பிரயோசனமுமில்லை. இந்த மக்கள் நாளுக்கு நாள் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஏமாற்றுத் தலைமைகளைத் துடைத்தெறிவதற்கு தான் நாம் இன்று மலையகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். மலையகம் எனது தாயகம், இந்த மண்ணையும் என்னையும் பிரிக்கமுடியாது.

இந்த மக்களுக்காக மனமுவந்து சேவை செய்வதற்கு முன்வந்துள்ளோம். எம்மை ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. எதிர்வரும் தேர்தலில் எமக்கு உரிய பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.

தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காவிட்டால் உரிய தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுப்பதில் தயங்கப்போவதில்லை.
எனவே ஆளுகின்ற அரசாங்கங்களில் எம்மவர்கள் அமைச்சுப்பதவிகளை வகிப்பதை நான் ஒருபோதும் குறை சொல்லமாட்டேன். மாறாக அந்த அமைச்சுப்பதவிகள் மூலம் கிடைக்கின்ற வளங்கள், வரப்பிராசாதங்கள், அதிகாரங்கள் அனைத்தும் இந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் எனக்கு வாக்களிக்கின்றீர்கள் என்று கருதி எனது அமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

சிவிலியன்களை விடுவிக்க: புலிகளுக்கு ஜனாதிபதி 48 மணிநேர காலக்கெடு

mahi-raja.jpgவடக்கில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்களை சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி புலிகளிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடரற்ற சூழலை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்லும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் தான் உத்தரவாதம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாக ஜனாதிபதி நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்தார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- என்னுடைய அரசாங்கம் எப்போதும் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் நலன்புரி நடவடிக்கைகளிலும், அவர்களது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திலும் பெரும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகிறது.

விசேடமாக, புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நலனிலும் எனது அரசாங்கம் பெரும் கரிசணை கொண்டு செயற்படுகிறது. இந்த வகையில், இலங்கையிலுள்ள சகல மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், இலங்கையில் நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகப் பாரம்பரியம் மூலம் அவர்களது அபிலாஷைகளுக்கேற்ப தேர்தல் மூலம் அவர்களுடைய தலைவர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் புலிகளால் குழப்பியடிக்கப்பட்டன. இலங்கை மக்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பயங்கரவாதத்தை அகற்றி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.

இந் நடவடிக்கையின் போது அரசாங்கத்தினரும் படையினரும் சிவிலியன்களின் நலன்புரி நடவடிக்கைகளிலும், உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்துக்களை அழிக்காமல் இருப்பதிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். மேலும், ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணைபெற்ற அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தும் அதேநேரம் சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வரையறைக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமென்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த வகையில் அரசாங்கத்தினதும் மக்களினதும் இலக்கை அடைவதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கிறது. வடக்கில் வாழும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகள் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமுமே தீர்வு காணப்படும். வன்முறைகள் மூலம் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையால் வடக்கில் குறுகிய நிலப்பரப்பினுள் பொது மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும் தொகையான மக்கள் புலிகளால் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புலிகளால் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்ட நாம், யுத்தப் பிரதேசத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்தினோம். இது முழுக்க முழுக்க சிவிலியன்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

படையினருக்கும், ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுகின்ற போது பொது மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தி வருகின்ற அதேநேரம் அந்தப் பகுதிகளினுள் இருந்து கொண்டு பாதுகாப்புப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கண்மூடித்தனமான முறையில் சிவிலியன்களைக் கொல்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென நான் புலிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிவிலியன்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பா இடரற்ற சூழலுக்குள் பாதுகாப்பாக செல்வதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வடக்கில் மோதல் நடைபெறும் பகுதிகளில், (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில்) வாழும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்பும் இலங்கையில் வாழும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளும் அந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
 
 

இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்

Wanni Childஇப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் :
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரைக்கான சில ஆதாரக் குறிப்புகள்:

._._._._._.

“வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்” 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், 27 ஜனவரி 2009
– – – – –

”சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும்”

எஸ்.ஜெயானந்தமூர்த்தி, TNA MP, 28 ஜனவரி 2009

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! – ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன் )
– – – – –

Liberation Tigers of Tamileelam (LTTE)’s Political Office on Wednesday categorically denied a news originated in Colombo government’s media, the Daily News, and was highlighted in the International media that LTTE prevented UN convoy transporting injured patients from Mullaiththeevu district to Vavuniyaa hospital. Director of LTTE’s Peace Secretariat S. Puleedevan described the news as mischievous. “In fact, the LTTE has been repeatedly urging the ICRC to facilitate unhindered transportation of injured civilians who need urgent attention and also for the provision of medical facilities locally,” Mr. Puleedevan told TamilNet Wednesday night.

TamilNet, 28 January 2009
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28187
– – – – –

Amnesty has received information that the LTTE have, in at least one instance, prevented injured civilians from moving to safer areas or accessing medical care, an act that could constitute a war crime… A convoy of 24 vehicles, arranged by the Red Cross and the UN to transport up to 300 wounded people, including 50 children, was stopped from leaving the area by the LTTE… The government had declared ’safe zones’ to allow civilians to seek shelter, but information made available to Amnesty International indicates that several civilians in the so-called safe zone have been killed or sustained injuries as a result of artillery bombardment.

Yolanda Foster, Amnesty International’s Sri Lanka researcher, 29 January 2009
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18045
– – – – –

The United Nations in Sri Lanka will attempt for the second time in three days to help evacuate by convoy hundreds of critically wounded civilians from the war-torn north of the country, including at least 50 seriously injured children. The convoy has been trapped for days in the town which lies just across the lines of confrontation in Tamil Tiger-controlled territory. If permission is granted by the Liberation Tigers of Tamil Eelam and, if a lull in fighting permits, the United Nations convoy will cross the frontline at midday Thursday. The injured will then be transported to Ministry of Health hospitals in Vavuniya to help treat their injuries and wounds.

Marie Okabe, Deputy Spokesperson for the Secretary-General, 28 January 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090128.doc.htm
– – – – –

The Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should take immediate steps to allow thousands of civilians trapped in a shrinking conflict zone safe passage and to ensure that they receive desperately needed humanitarian aid, Human Rights Watch said today. Intense fighting between the Sri Lankan army and the separatist LTTE has caught an estimated 250,000 civilians in deadly crossfire, and in the past week civilian casualties have risen dramatically.

The government-ordered September 2008 withdrawal of all UN and nongovernmental humanitarian organizations (with the exception of the ICRC and Caritas) from the Vanni plunged the region into a serious humanitarian crisis, with acute shortages of food, shelter, medicine, and other humanitarian supplies. The humanitarian crisis was documented by Human Rights Watch in its December 2008 report, “Besieged, Displaced, and Detained.” A companion report, “Trapped and Mistreated,” focused on LTTE abuses against the civilian population in the Vanni.

Brad Adams, Asia director at Human Rights Watch. January 28, 2009
http://www.hrw.org/en/news/2009/01/28/sri-lanka-urgent-action-needed-prevent-civilian-deaths
– – – – –

The Office of the Resident Coordinator in Sri Lanka has issued its strongest possible protest to the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, for their refusal to allow UN national staff and dependents to return from the Vanni region with the present UN convoy. The staff were part of a UN convoy which travelled to the Vanni on 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations trapped in the midst of fighting in the Vanni. Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today. The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area, as its denial of safe passage is a clear abrogation of their responsibility under international humanitarian law.

Michèle Montas, Spokesperson for the Secretary-General. 22 january 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090122.doc.htm

குறிப்பு: யுத்தப் பகுதியில் காயமடைந்த பொது மக்கள் (50 வரையான சிறார்கள் உட்பட) அப்பகுதியில் இருந்து ஐநா வாகனங்களில் வெளியே கொண்டுவரப்பட்டு உள்ளதாக ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களை அடுத்து இன்று (ஜனவரி 29) காயப்பட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 220 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்காணவர்கள் காயப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
._._._._._.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த பிரதேசத்தின் எல்லைகள் குறுகிக் குறுகி தற்போது சில பத்து மைல்களுக்குள் யுத்தம் குறுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த குறுகிய சுற்றளவுக்குள் 200 000 – 300 000 பொதுமக்கள் அகப்பட்டு உள்ளனர். புலிகள் வடக்கு கிழக்கின் நிலப் பிரதேசங்களை பெரும்பாலும் முழுமையாக இழந்த நிலையில் இந்த சில பத்து மைல் சுற்றளவுக்குள் இலங்கை அரச படைகளும் புலிகளும் யுத்தத்தைத் தொடர்கின்றனர்.

வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை போர்த்தந்திரத்துடன் மெது மெதுவாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் நிதானமாக பின்வாங்கிய புலிகள் தற்போது மிகக் குறுகிய மக்கள் செறிவான பகுதியில் ‘போர்த் தந்திரத்துடன்’ யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ( முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன் )

இலங்கை அரசு யுத்தத்தில் காட்டும் வேகத்தில் தமிழ் மக்களின் மனித அவலம் பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது. புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர முன் யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் தவறியுள்ளது. பாதுகாப்பு வலயத்தை அறிவித்த இலங்கை அரசு அப்பகுதிகளை சர்வதேச உரிமை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வில்லை. மேலும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 000 – 300 000 மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாட்டின் சட்டபூர்வமான அரசு யுதத்தை முடக்கி விட்டிருப்பது அந்த மக்களை (human guinea pigs) பரிசோதணைக் கூட விலங்குகளாக்கி உள்ளனர்.

‘வன்னி மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்’ என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ‘எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர்’ என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசனும் வாய்த் தர்க்கம் புரிகின்றனர். யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைபற்றி எவ்வித உறுத்தலும் இன்றி அந்த மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களும் மறுப்புகளும் மட்டுமே இரு தரப்பில் இருந்தும் வந்து உள்ளது. ( தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன் )

இலங்கை அரசுக்கு வேண்டியது விடுதலைப் புலிகளின் முழுநிலப்பரப்பையும் கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்குள் அவை வந்துவிட்டது என்ற செய்தி. அந்தச் செய்தி சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. புலிகளைப் பொறுத்தவரை தங்களுடைய சகல பிரதேசங்களையும் இழந்தவர்கள் இந்த மக்களை வைத்துக் கொண்டு ‘ஒரு யுத்த நிறுத்தம்’, ‘ஒரு யுத்த பேரம்’ நடத்தி ‘வீழ்ந்தும் பிரபாவின் மீசையில் மண்படவில்லை’ என்று எழும்புவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த பொறுப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நலன்களுக்கு 200 000 – 300 000 மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இருதரப்பினருமே குற்றவாளிகள் தான்.

இலங்கை அரசு சட்ட ரீதியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையது. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் அரசு, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சர்வதேச விழுமியங்களுக்கு அமைய செயற்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறி ‘அரசியல் தாதா’வாகவே செயற்படுகிறார். புலிகளின் இறுதிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றி தன்னை ஒரு துட்டகைமுனுவாக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்பட்டு உள்ளார்.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களை ஆள்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டென்று மார் தட்டியவர்கள். அப்படியானால் இலங்கை அரசிலும் பார்க்க ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுடையது. ஆனால் இன்று அந்த மக்களைப் பணயம் வைத்து தங்களது மீசையில் மண்படவில்லை என்று காட்ட முற்பட்டு உள்ளனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலப்பரப்பில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதிகளுக்குள் பின்வாங்காமல் நின்று தாக்குவதோ அல்லது பதில் தாக்குதல் நடத்துவதோ எந்த விதத்திலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது. ‘சிங்கள அரசு தமிழ் மக்களை நரபலி செய்கிறது’ என்று முன்னாள் கூட்டணித் தலைவர்கள் மேடையில் பேசுவது போல ஐபிசியில் செய்தி வாசிக்கவே இந்த தாக்குதல்கள் உதவும். இழப்புகளை அரசியலாக்கும் மூன்றாம்தர அரசியலே தற்போது புலிகளின் கடைசி ஆயுதமாக மாறி உள்ளது. ( தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன் )

இந்த யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு பொதுமகனதும் பொது மகளதும் இழப்புக்கும் அவலத்திற்கும் இலங்கை அரசபடைகளும் புலிகளுமே பொறுப்பு. யார் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். யார் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற விசாரணை இரண்டாம் பட்சமானது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருமே இடையில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பது சுயாதீன அமைப்புகளின் அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள் இரு தரப்பினரதும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி உள்ளன.

இதற்கிடையே புலம்பெயர் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இலங்கை அரசின் மீது தங்களது ஆக்ரோசமான கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். அவர்களுடைய கோபம் நியாயமானது. அது இலங்கை அரசுக்கு எதிராக அமைந்ததிலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் இந்த எதிர்ப்புகளை ஒழுங்கு செய்பவர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவனவர்களாக இருப்பதாலேயே அந்த எதிர்ப்பு பலமிழந்து போய்விடுகிறது. அந்த எதிர்ப் நடவடிக்கைகளின் போது வைக்கப்படும் கோசங்கள் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லாமல் புலிகளின் நலன் சார்ந்ததாகவே அமைந்துவிடுகிறது. புலிக் கொடியும் வே பிரபாகரனின் உருவப்படத்தையும் தூக்கிச் சென்று மனித உரிமைகள் பற்றி கதைக்கின்ற அளவுக்கு வே பிரபாகரனினதோ புலிகளினதோ மனித உரிமைப் பார்வை ஒன்றும் மெச்சத்தக்கது அல்ல. ‘புலிகளும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல. புலிகள் தான் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் தான் புலிகள்’ என்று கதையளப்பது யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

லண்டனில் ஜனவரி 31 அன்று பிரித்தானிய தமிழர் பேரவை STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS என்ற தலைப்பில் மாபெரும் ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 31 மதியம் ஒரு மணிக்கு மில்பாங்கில் ஆரம்பிக்கும் ஊர்வலம் ரெம்பிள் பலசில் முடிவடைகிறது. ‘We shall gather to fight for our rights’  என்று இந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்தள்ளது. ஜனவரி 27 அன்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லோட் மலோச் பிறவுண் வெளியுறவுச் செயலர் மில்பாங்க் ஆகியோருடன் பிரித்தானியன தமிழர் பேரவையினர் ஒரு சந்திப்பை நடத்தி இருந்தனர். அச்சந்திப்பும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பிரித்தானிய அரசு இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்க தயாராக இருக்கவில்லை. வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 21ல் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ( பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் )

Protest_Swissபிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் சுயாதீனக் குரலாக அல்லாமல் புலிகளின் குரலாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. ( பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன் ) இலங்கை அரசுக்கு குறையாத வகையில் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல் செய்துள்ள நிலையில் சுயாதீனமாக அல்லாமல் புலிகள் சார்ந்து இயங்கும் எந்த அமைப்பினதும் நியாயத்தன்மை அடிபட்டுப் போவது இது முதற்தடவையல்ல. இந்தப் பாடத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் விளங்கிக்கொள்வதாக இல்லை. (  ”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்)

காசாவில் இஸரேல் குண்டுகளைப் பொழிந்து பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்த போது யாரும் ஹமாஸின் தடையை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஹமாஸ் தலைவர்களின் படத்தையும் ஹமாஸின் கொடியையும் தாங்கி ஊர்வலம் செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலத்தில் பாலஸ்தீனியர்கள் மட்டும் பங்கெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்ல.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முதலில் தங்களது புலிவாலாத் தனங்களை கைவிட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை நியாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.  (  காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன் )

மேலும் இன்று யுத்தமுனையில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலத்திற்கு புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. அப்படி இருக்கையில் புலிக்கொடியையும் பிரபாகரனின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்று தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்க முடியாது.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் அறிக்கைவிடுவதும் பதிலறிக்கை விடுவதும் மறுப்பறிக்கை விடுவதும் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடே.

அப்பாவி தமிழ் மக்களைத் தண்டிக்காதீர்கள்! : தமிழ் சமாதான ஒன்றியம்

TFP Logoஇலங்கையில் தொடர்ந்துவரும் இனப்போரில்; அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவரும் செய்திகளையிட்டு தமிழ் சமாதான ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் நலன்களை புறந்தள்ளி அப்பாவிப் பொது மக்களை தொடர்ந்து பணயக் கேடையங்களாக பாவித்து போர் புரிவதை தமிழ் சமாதான ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றது. குறிப்பாக, இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை அரச படைகள்மீது போர் புரிவதன்மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரிக்கச் செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாகக் கைவிடவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் வற்புறுத்துகிறது.

போரில் சிக்குண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வரையில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்றை செய்யவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வலயமொன்றில் பொதுமக்கள் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை இரு பகுதியினரும் உடனடியாக செய்யவேண்டுமெனவும் தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.

போரில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், வணக்கத்திற்குரிய யாழ் அதிமேற்றிராணியார் அவர்களும் மற்றும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் இதுவரையில் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனத்திலெடுத்து செயற்படுமாறு இலங்கை அரசையும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் சமாதான ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்பாக நடந்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை தமிழ் சமாதான ஒன்றியம் நினைவூட்ட விரும்புகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அப்பாவி மக்களைக் கொல்லக்கூடிய போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது மட்டுமே இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்தும். தற்பாதுபாப்பு அணுகுமுறைகளை மேற்கொண்டு மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்தவும் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் அரச தரப்பினரை கேட்டுக் கொள்கிறது. அதற்கு ஆவன செய்யுமாறு புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களையும் இந்திய அரசு உட்பட அனைத்து உலக நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் சமய நிறுவனங்களையும் கரம் கொடுத்து உதவுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது.

பிரிட்டனின் எக்கனோமிஸ்ட் சஞ்சிகைக்கு தாய்லாந்தில் தடை

பிரிட்டனை தளமாகக் கொண்டு வெளியாகும் எக்கனோமிஸ்ட் சஞ்சிகையின் புதிய வெளியீட்டிற்கு தாய்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இராஜ குடும்பம் தொடர்பாக வெளிவரும் கட்டுரை இப்பதிப்பில் பிரசுரமாவதால் மக்களிடையே நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இச்சஞ்சிகையின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாட்சியை அவதூறாக விமர்சித்தமைக்காக சிறைவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய எழுத்தாளரின் கட்டுரையே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை பொது வாழ்வில் தாய்லாந்து மன்னரின் செயற்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தமைக்காக கடந்தமாதமும் இச்சஞ்சிகையின் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 26 உடல்களும் பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத 26 சடலங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியவில் அரசாங்க செலவில் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நீதிமன்றின் உத்தரவுடன் சடலங்களை பொலிஸார் அடக்கம் செய்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னிப் போர்முனைப் பகுதியில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட இவையாவும் புலிகளின் சடலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் கேட்டிருந்தனர். பழுதடைந்த நிலையில் இவை இருந்ததால் சவச்சாலையிலிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவச்சாலையில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சடலங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் சடலங்களை அடக்கம் செய்தனர்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு எதிரொலி – இலங்கை வங்கி தாக்குதல் :தூதரகத்திற்கும் பலத்த பாதுகாப்பு

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின்  கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் போலீசார் வந்து பதட்ட நிலையை சரிப்படுத்தினர். மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் தாக்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அங்கே போலீசார் குவிந்துள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.