ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்ற நிதி மோசடி பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ் வைத்தியசாலைக்கு அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் 680 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள போதும் பரசிற்றமோல் மாத்திரைக்காகவும் நோயாளர்களிடம் பணம் அறவிடப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற முறைகேடுகளை இனம் காணவென குழுவொன்றை நியமித்திருப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சங்கத்தின் பேச்சாளர் உப்புல் குணசேகர தெரிவித்தார். பாராளுமன்ற சட்டத்துக்கு அமைவாக 1983 இல் நிறுவப்பட்ட இவ் வைத்தியசாலையில் தற்சமயம் மூன்றாவது நிலையில் உள்ள மருத்துவப் பட்டப் பின்படிப்புப் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ் வைத்தியசாலை முகாமைத்துவ சபையின் சீரற்ற நிர்வாகத்தால் கடுமையான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாதுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். முறைகேடுகளை விசாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையின் படி, மிக மோசமான முறைகேடுகள் இடம்பெறும் நிறுவனங்களில் ஜெயவர்தன புர வைத்திய சாலை 9 ஆவது இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வைத்திய சாலையின் இந்த நிலைமைக்கு எவரும் பொறுப்புக் கூறுவதாக இல்லை. இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வைத்திய சாலைக்கான நியமனங்கள் அனைத்தும் சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இவற்றில் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட சில நியமனங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையின் தற்போதைய சீர்கேடான நிலைமையை திருத்தியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் உரிய பயிற்சியைப் பெறுவதற்கு இவ்வைத்தியசாலை தகுதியற்றது என பயிற்சி பெறும் பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.