January

January

ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

அரசுக்கு எதிரான சர்வதேச சதி குறித்து ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும்

ranil-2912.jpgஅரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய நாடு எதுவென்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் முறையிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டுமக்களை ஏமாற்றாமல் சதிகாரர்கள் யார் என்பது பற்றியும் எம்.ரி.வி. தீவைப்பு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் உண்மைகளை இன்று வெளியிடவேண்டுமெனவும் கேட்டிருக்கின்றார்.  சர்வதேசத்தின் மீது சுட்டுவிரல் நீட்டி அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கமுயலும் கபட நாடகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகிந்தாலை சாஞ்சி விகாரையில்  சனிக்கிழமை காலை இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானகபெரேராவின் மூன்று மாத நினைவு சமய நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, யாழ்ப்பாணத்தில் ஊடகநிறுனத்தின் மீதான குண்டுத்தாக்குதல், தொப்பிகல மீட்கப்பட்டதன் பின்னர் ஆங்கில ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, வவுனியா அகதி முகாம் தீ வைக்கப்பட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை, எம்.ரி.வி. ஊடகநிறுவனம் தீவைக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பனவற்றின் பின்னணியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச சக்தியொன்றின் சதி காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்காற்றிய உரையின் போது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார்.

இக்குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஒரு நாட்டின் மீது பழிசுமத்தும் போது ஆழமாக ஆராய்ந்த பின்னரே அதனைச் செய்ய முடியும். நாட்டின் தலைவர் என்ற பொறுப்பைக்கொண்ட ஜனாதிபதி இக்குற்றச்சாட்டை சுமத்துவதான மிக உன்னிப்பாக நோக்கப்படவேண்டியதாகும். சர்வதேசத்தின் சதியென்று பொதுப்படையாகக் கூறிவிட்டு உலகத்தை ஏமாற்றி விடமுடியாது. முன்னே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச சதியென்றால் அவற்றுடன் தொடர்புபட்ட நாடு எது என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடாமலிருப்பது ஏன் எனக் கேட்கவிரும்புகின்றோம். தனது அரசியல் நலனுக்கும், அதிகார இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சுமத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ அநுராதபுரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவினரின் படுகொலைகள் தொடர்பில் அவ்வாறானதொரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை எனவே அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது உறுதியாகியுள்ளது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அக்காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசில் அவரும் ஒரு பங்காளி என்பதை மறந்துவிடக்கூடாது. இம்முறை வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 2,500 படைவீரர்கள் பலியானதாகவும் 15 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறிக்கையொன்று கூறுகிறது.

இவற்றை அரசு ஏன் நாட்டு மக்களுக்கு மறைக்கவேண்டுமெனக் கேட்கின்றோம். யுத்த வெற்றியின் பெருமை படையினருக்கும் நாட்டுமக்களுக்குமே உரியது. இதனை ஜனாதிபதி தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் நலன்களை பெற முயற்சிக்கின்றார் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாகர்கோயிலும் படை வசமானது

SL_Army_in_Killinochieவட மராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம்வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத்தரப்பு நேற்றுத் தெரிவித்தது. வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள்  இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
 

12 தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பில் கைது!

handcuff.jpgநீர் கொழும்பில் படையினர் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடியதன் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 

இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது. நாங்கள் அரசியல் தீர்வினையே விரும்புகின்றோம். – பா. நடேசன்

nadesan.jpgஎமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

logo.gifகேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்:  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்:  முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்:  அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்:  பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:  எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்:  இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்:  போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்:  எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.

நன்றி: தினமணி

A9 கண்ணிகள் அகற்றப்பட்டதும் பயணிகள் போக்குவரத்து

basil.jpgஏ-9  பாதையில் மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த உடனேயே பயணிகளின் போக்குவரத்துக்காகத திறக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

மன்னார் – பூநகரி கேரதீவு வரையிலான ஏ-32 பாதை திருத்த வேலைகளில் ஈடுபடும் பொறியியல் குழுவினரின் உதவியுடனேயே ஏ-9 பாதையின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படும்.

ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையில் பாதையில் திருத்த வேலைகள் செய்ய தேவையேற்படாது. எனினும், ஆங்காங்கே சிறு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். கிளிநொச்சி முதல் முகமாலை வரையிலான பாதையே பெரிதும் பழுதடைந்துள்ளன.

இதேவேளை, ஏ-32 பாதையின் திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இப்பாதையின் திருத்த வேலைகளை முற்று முழுதாக பூரணப்படுத்துவதற்கு புலிகளின் தாக்குதல் தடையாக இருந்தது. ஆனையிறவு கைப்பற்றியதுடன் இத்தடையும் நீங்கியது என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கின் அபிவிருத்தி முன்னெடுப்பு போன்றே மின்சாரம் வழங்கல், குடிநீர் வழங்கல், அரச நிர்வாக பொறிமுறைகளை ஆரம்பித்தல், பொலிஸ் நிலையங்களை நிறுவுதல் போன்றவை பூர்த்தியடைந்ததன் பின்னரே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படும் என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

பிரபாகரன் தொடர்பாக இந்தியாவிடமிருந்து உத்தியோகபூர்வமான கோரிக்கை எதுவும் இல்லை – வெளிவிவகார அமைச்சர்

bogolagama-1612.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இலங்கையின் சட்ட வரைமுறைக்குட்பட்ட வகையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்தத் தகவலை வெளியிட்டார்.

பிரபாகரன் கைது செய்யப்பட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம; “இவ்விடயம் தொடர்பில் இதுவரை இந்தியாவிடமிருந்து எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடல்களும் கிடையாது. ஊடக அறிக்கைகள் மூலமே இதுபற்றி நாம் கேள்வியுற்றிருக்கிறோம். நாடொன்றிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் சர்வதேச சட்ட வரைவுகள் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு இலங்கை நீதிமன்றத்தினால் 200 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பாக அவருக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை நீதிமன்றத்தாலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவிடமிருந்து (பிரபாகரனை ஒப்படைக்குமாறு) உத்தியோகபூர்வ வேண்டுகோள் வரும்போது இலங்கையின் சட்ட வரைமுறைகளுக்கு அமைய ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், பிரபாகரன் முதலில் உயிருடன் பிடிபடுகிறாரா என்று பார்ப்போமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

வன்முறைகளுக்கு இராணுவ புலனாய்வுத்துறையின் ஒரு பிரிவினர் மீது ரணில் குற்றச்சாட்டு

ranil-2912.jpg“சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் “சிரச’ தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல்கள் போன்ற படுகொலை உட்பட வன்முறை நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வுத் துறையின் ஒரு பிரிவினரே மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவத் தளபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் மட்டுமே பொறுப்புக் கூறும் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்  வெள்ளிக் கிழமை விஷேட அறிவிப்பொன்றை விடுத்துப் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; நாட்டை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு அமைச்சரவைக்குள்ளது. எனினும், அமைச்சரவை அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியுள்ளமை கடந்தகால சம்பவங்களிலிருந்து புலனாகிறது. சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் மற்றும் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத பிரிவு ஒன்று இருக்கிறது. இராணுவ புலனாய்வுத் துறையின் சிறு பிரிவினரே இதைச் செய்கின்றனர். இதன்மூலம் நாம் முழு இராணுவத்தையும் குற்றஞ்சாட்ட முயற்சிக்கவில்லை. இந்தச் சிறு பிரிவினரின் செயற்பாடுகளால் முழு இராணுவத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தப்படுகிறது. புலனாய்வுத் துறையின் இந்தக் குழுவினர் இராணுவத் தளபதி ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகின்றனர். வேறு எவருக்கும் இவர்கள் கட்டுப்படுவதில்லை.

எனவே, கொழும்பின் பாதுகாப்பு, இப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியினதும், பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடும் குழுவினரைப் பொறுப்பானவர்களுக்கு தெரியாமல் வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் அனுமதியின்றி செயற்பட்டால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதிர்க்கட்சிக்கும், ஊடகங்களுக்கும் மட்டுமான அச்சுறுத்தல் கிடையாது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தரப்புக்கும் அச்சுறுத்தலே. நாம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் இச்சபைக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன், நீதிமன்றத்துக்கும் அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தல் இதனுடன் மட்டுப்பட்டு விடவில்லை. எனவே, இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரஉரிய உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்’ என்றார்.

‘யாழ். மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்’ – அமைச்சர் டக்ளஸ்

a-9-road.jpgஆனை யிறவு மீட்பு மற்றும் ஏ-9 வீதி பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இவ்வாறு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆணையிறவைப் படையினர் கைப்பற் றியது தொடர்பாகவும் ஏ-9 பாதை முற்று முழுதாக படையினரால் விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்; கடந்த மாதம் யாழ். சென்று அங்கு மக்கள் குறைகளைத் தீர்க்க தினசரி நூற்றுக்கும் அதிகமான மக்களைச் சந்தித்து வருகிறேன். நான் மீண்டும் கொழும்பு சென்றுவிடுவேனோ என எண்ணும் மக்கள் தினசரி முண்டியடித்துக் கொண்டு என்னைப் பார்க்க வருகின்றனர். அவர்களிடம் நான் கூறியிருந்தேன்; இனிமேல் நான் கொழும்பு செல்வதானால், ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரே செல்வேன். எனத் தெரி வித்திருந்தேன். நான் கூறிய கூற்று இன்று உண்மையாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டு ஏ-9 பாதை திறக்கப் படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக அனைத்து இனமக்களும் ஒன்றுபடவேண்டும் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgஇஸ் ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிப்பதோடு , பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக சகல இன மக்களும் கட்சி பேதங்களை மறந்த ஒட்டு மொத்தமான ஆதரவை வழங்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மெரைன் கிறான்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் அவர் உரையாற்றுகையில்; பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இங்கு முன்னெடுக்கப்படும் ஆதரவு போராட்டத்துக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள இக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படவேண்டும். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் நல்கும்.

ஹிட்லருக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஐ.நா சபையில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் இன்று இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் கண்டிக்காமல் இருக்கின்றன. அந்தளவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை இன்று கையறுநிலையில் இருக்கிறது. அதேநேரம் அரபுலகில் உள்ள பல நாடுகள் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் நாம் காண்கிறோம். பலஸ்தீனின் காஸாப் பிரதேசம் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்குப் ஈரானிய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற பார்வையில் தான் பலஸ்தீனுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அவர்களது விடுதலைக்காக இலங்கையில் உள்ள தமிழ் , சிங்கள ,முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டும் உதவவேண்டும் என்ற முனைப்புடனேயே முக்கிய அரசியல் கட்சிகளும் இணைந்து பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.பலஸ்தீன மக்களின் விடுதலை என்பது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்காகவும் , அவர்களுக்கான நீதி, நியாயங்களுக்காகவும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற செய்தியை உலகுக்கு இங்கு வெளிப்படுத்துகிறோம்.

இஸ்ரேலின் இத்தாக்குதல்களை வாய்மூடி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும் , ஏனைய நாடுகளும் இஸ்ரேலிய இராணுவ பலத்தையும், காஸாப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்ற ஹமாஸ் அரசாங்கத்தையும் ஒன்றாக சமநிலைப்படுத்திப்பார்க்க முடியாது. அண்மையில் இலங்கை அரசாங்கம் கூட இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் போது ஹமாஸ் இயக்கமும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அறிக்கையை விடுத்திருந்தது. இதனை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது.

ஹமாஸின் தாக்குதல்களையும் நிறுத்தச் சொல்பவர்கள் கடந்த எட்டு வருட காலத்தில் இஸ்ரேலில் இறந்தவர்களின் தொகை 19 பேர் மட்டும் தான் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆனால், கடந்த 10 நாட்களுக்குப்பின் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருக்கின்றார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் அதிகம் அடங்குகின்றனர். ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் ஒரு பாடசாலை மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இத்தகைய இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும், பலஸ்தீனருக்கு ஆதரவாகவும் போராடும் எமது முயற்சி தொடர்ச்சியாக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.