விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இலங்கையின் சட்ட வரைமுறைக்குட்பட்ட வகையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்தத் தகவலை வெளியிட்டார்.
பிரபாகரன் கைது செய்யப்பட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம; “இவ்விடயம் தொடர்பில் இதுவரை இந்தியாவிடமிருந்து எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடல்களும் கிடையாது. ஊடக அறிக்கைகள் மூலமே இதுபற்றி நாம் கேள்வியுற்றிருக்கிறோம். நாடொன்றிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் சர்வதேச சட்ட வரைவுகள் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு இலங்கை நீதிமன்றத்தினால் 200 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பாக அவருக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நீதிமன்றத்தாலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவிடமிருந்து (பிரபாகரனை ஒப்படைக்குமாறு) உத்தியோகபூர்வ வேண்டுகோள் வரும்போது இலங்கையின் சட்ட வரைமுறைகளுக்கு அமைய ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், பிரபாகரன் முதலில் உயிருடன் பிடிபடுகிறாரா என்று பார்ப்போமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.