“சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் “சிரச’ தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல்கள் போன்ற படுகொலை உட்பட வன்முறை நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வுத் துறையின் ஒரு பிரிவினரே மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவத் தளபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் மட்டுமே பொறுப்புக் கூறும் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை விஷேட அறிவிப்பொன்றை விடுத்துப் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; நாட்டை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு அமைச்சரவைக்குள்ளது. எனினும், அமைச்சரவை அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியுள்ளமை கடந்தகால சம்பவங்களிலிருந்து புலனாகிறது. சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் மற்றும் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத பிரிவு ஒன்று இருக்கிறது. இராணுவ புலனாய்வுத் துறையின் சிறு பிரிவினரே இதைச் செய்கின்றனர். இதன்மூலம் நாம் முழு இராணுவத்தையும் குற்றஞ்சாட்ட முயற்சிக்கவில்லை. இந்தச் சிறு பிரிவினரின் செயற்பாடுகளால் முழு இராணுவத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தப்படுகிறது. புலனாய்வுத் துறையின் இந்தக் குழுவினர் இராணுவத் தளபதி ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகின்றனர். வேறு எவருக்கும் இவர்கள் கட்டுப்படுவதில்லை.
எனவே, கொழும்பின் பாதுகாப்பு, இப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியினதும், பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடும் குழுவினரைப் பொறுப்பானவர்களுக்கு தெரியாமல் வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் அனுமதியின்றி செயற்பட்டால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதிர்க்கட்சிக்கும், ஊடகங்களுக்கும் மட்டுமான அச்சுறுத்தல் கிடையாது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தரப்புக்கும் அச்சுறுத்தலே. நாம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் இச்சபைக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன், நீதிமன்றத்துக்கும் அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தல் இதனுடன் மட்டுப்பட்டு விடவில்லை. எனவே, இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரஉரிய உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்’ என்றார்.