January

January

திருமலையில் ஏவுகணை பொருத்த அமெரிக்கக் குழு கவனம் செலுத்துகிறதா? -அநுர திஸாநாயக்க

parliment_inside.jpg திருகோணமலைக்கு அண்மையிலுள்ள தீவுகளில் ஏவுகணைகளைப் பொருத்துவது குறித்து அமெரிக்க இராணுவக்குழு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவ்வறிக்கை வருமாறு:-

அமெரிக்க இராணுவத்தினர் பசுபிக் பிராந்தியத்துக்கான கட்டளை குழுவொன்று தற்போது இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல். கொனன்ட்டின் தலைமையில் வந்திருக்கும் இந்த குழுவில் தெற்காசிய நாடுகள் தொடர்பான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பெட்ரிகோ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் திருகோணமலையை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது வருகையின் நோக்கம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த கிழக்குமாகாண மக்களின் மீள்குடியேற்றல் மற்றும் புனரமைத்தல் தொடர்பான விடயங்கள் எனக்கூறப்படுகிறது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை புனரமைப்பதற்காக இராணுவ அதிகாரிகளை இங்கு அனுப்புவதன் நோக்கம் என்ன வென்று புரியவில்லை.

இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பயன்படுத்தும் திட்டம் இருந்தது. இலங்கையில் அமெரிக்க ஏவுகணைகளை திருகோணமலையில் பொருத்தும் முயற்சியொன்று 1978ல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அது வெற்றியளிக்கவில்லை. 1985ல் மீண்டும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சித்தது. மக்கள் எதிர்த்தமையால் அது கைவிடப்பட்டது.

அதே போன்று, தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக “பிரம்ம புத்திர திட்டம்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.” வி. யி. தி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்க இராணுவத்தை நிலை நிறுத்தக் கூடிய பூமியாக குறிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அமெரிக்காவின் யுத்த திட்டங்களில் திருகோணமலை முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்கா வுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஒப்பமிட்டனர்.

அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் செய்து கொண்ட இதேபோன்ற ஒப்பந்தங்களில் பொதுவான அடையாளமொன்றிருந்தது. அதாவது அமெரிக்காவின் யுத்த தேவைகளுக்காக அந்த நாடுகளின் பூமியைப் பயன்படுத்த இடமளித்தல். எனவேதான், அமெரிக்காவின் இராணுவக் குழுவொன்று திருகோண மலைக்கு வந்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. அந்நிய நாடுகளின் யுத்த தேவைகளுக்காக எமது மண்ணை பயன்படுத்த இடமளிப்பதனால் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதேபோன்று எமது மண்ணையும், வளங்களையும் அந்நிய இராணுவமொன்றுக்கு பயன்படுத்த இடமளிப்பது, எமது நாட்டின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.

எமது நட்பு நாடுகளின் மீது யுத்தரீதியான தாக்குதல் நடத்த எமது மண்ணில் இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. சமீபத்தில் திருகோணமலைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவக் குழு, திருகோணமலைக்கு அண்மித்த தீவுகளில் ஏவுகணை பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து இந்த உயர் சபைக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, இது குறித்த அனைத்து தகவல்களையும் இந்தச் சபையில் முன்வைக்குமாறு கேட்கின்றேன்.

பராக் ஒபாமாவுக்கு சபையில் பாராட்டு

parliment_inside.jpgஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற பராக் ஒபாமாவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசாங்கத்தின் சார்பிலும், எம்.பிக்கள் சார்பிலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

அதேநேரம் இந்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அளித்த ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுர திசாநாயக்க நேற்று சபையில் எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விகளுக்கு சபாநாயகரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பதிலளித்தார். இச்சமயமே வெளிவிவகார அமைச்சர் மேற்படி நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அடைந்த முன்னேற்றத்தை உலகிற்கு தெரியப்படுத்துங்கள். இராஜதந்திர பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ

president.jpgவடக்கில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றத்தை உலகிற்கு நீங்கள் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதிகளுடனான விஷேட கூட்டமொன்றும் விஷேட செயலமர்வும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த விஷேட செயலமர்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பாக தெரிவிக்கப்படும் தவறான தகவல்களுடனான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய காலம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் துன்பங்கள் புலிகளால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் தமிழ் மக்களை விடுவிப்பவர்கள் என்று தவறுதலாக உரிமை கோருகின்றனர்.  ஆனால், அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் அடக்குமுறையாளர்களாகும். நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாடுகளிலுள்ள மக்கள் தமிழர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இலங்கைப் படையினர் மனிதாபிமான படையினராக விடுதலைக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வடக்கு இலங்கை விடுதலை, அபிவிருத்தி என்பவற்றின் புதிய வசந்தத்தின் உதயத்திற்காக காத்திருக்கின்றது என்பதை உங்கள் மூலம் உலகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் தற்போதைய பொருளாதர நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதாரம் சிறப்பான முறையில் ஈடுகொடுத்து வருகிறது. அங்கவீனர்கள், அநாதைகள், முதியவர்கள், வறியவர்களென சமூகத்தின் நலிந்த வர்க்கத்தினரின் பாதுகாப்பு நலனோன்பு நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எமது பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு நாம் ஊக்குவிப்பு அளித்து வருகின்றோம். அத்துடன், தனியார் துறைக்கும் அரச சேவைகளுக்கும் இடையில் ஆரோக்கியமான பொருளாதார, சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியென்ற ரீதியில் எமது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன் மூலம் எமது நாட்டிலுள்ள சமூகங்கள் பேச்சுவார்த்தையிலீடு படுவதற்கான வழிகள் திறந்து விடப்படும். இதனால், பயமோ அச்சுறுத்தலோ இல்லாமல் தமது துன்பங்களுக்கு நியாய பூர்வமான தீர்வை கண்டு கொள்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சமாதானம் ஏற்படும்.

யாழ். குடாவில் ஊர்காவல்படையை நிறுவ அமைச்சர் டக்ளஸ் திட்டம்

daglas.jpgயாழ்.  குடாநாட்டின் சட்டம், ஒழுங்கினைப் பேணும் முகமாகவும் பல்வேறு சமூக சிர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் முகமாகவும் ஊர்காவற் படையினை உருவாக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ். மாவட்ட விவசாய மக்களின் பிரதி நிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கட்டாக்காலி கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படுவதாக, மேற்படி விவசாய மக்களது பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டாக்காலி கால்நடைகளை அவ்வப் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர்கள் மூலம் பிடித்து, உரிமையாளர்களை இனங் கண்டு அவற்றைக் கையளிக்கும் வரையில் கால்நடைப் பண்ணை அமைத்து அவற்றைப் பராமரிப்பதென்றும், உரிமையாளர்கள் இனங்காணப்படாத கால்நடைகளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் ஜீவனோபாயத்தைக் கருத்தில் கொண்டு சட்டரீதியாக அவர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைப்பதென்றும் தான் ஆலோசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெறுதல் மற்றும் ஏனைய சமூக சீர்கேடுகள் மற்றும் பாதிப்புகளை இல்லாதொழிப்பதற்காக யாழ். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நபர்களைத் தெரிவு செய்து அவ்வப் பகுதிகளுக்கு ஊர்காவற் படையை உருவாக்கி அதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு தட்டுப்பாடு இல்லை’

mahinda-samarasinga.jpg‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது. அப்பகுதிக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். வன்னி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் மேலும் கூறியதாவது:- மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள போதும் மோதல் நடைபெறும். பகுதிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி 58 லொறிகளில் 820 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் ஒரு தொகுதி உணவுப் பொருட்களை அடுத்த வாரம் அங்கு அனுப்பவுள்ளோம்.

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப உணவு அனுப்பப்படுகிறது.
 
 

தேர்தல் சட்டவிதிகளை மீறி ஆளுங்கட்சி செயற்படுவதாக ஐ.தே.க. குற்றச்சாட்டு

laksmankiriyella.jpgஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்காதிருப்பதன் நோக்கமே தேர்தலை முறைகேடாக நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கேயாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியையும் ஐக்கிய தேசியக் கட்சி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் கண்டியில் இடம்பெறும் வைபவமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வர் என கடந்த வாரம் முழுவதும் அரச ஊடகங்கள் பெரியளவில் பிசாரங்களை மேற்கொண்டன. இதனைக் கண்ணுற்ற நான் அவர்கள்யார் எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு கண்டியில் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கருகிலிருந்த கட்டிடமொன்றின் மேல் மாடியில் நின்றவண்ணம் அவதானித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்துக்கு ஊர்வலமாக வந்தவர்கள், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களும் அரச ஊழியர்களுமே என்பதை இந்த இடத்தில் உறுதிபடக் கூறவிரும்புகின்றேன். அரச அலுவலகங்கள், திணைக்களங்களிலிருந்து அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்பட்டிருந்தனர். மத்திய மாகாணத்துக்கு வெளியே இருந்தும் அரச ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பச்சை நிறத் தொப்பிகளையும், சாப்பாட்டுப் பார்சல்களையும் சுதந்திரக்கட்சியினர் விநியோகிப்பதை எமது ஆதரவாளர்கள் நேரிடையாகவே கண்டுள்ளனர். ஆறுவருடங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் ஊர்வலத்தில் காணப்பட்டார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஜனாதிபதியா அல்லது சரத் ஏக்க நாயக்காவா என்பது குறித்து சந்தேகமேற்பட்டுள்ளது. மத்திய மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் ஜனாதிபதியின் பெயர் மட்டுமே பெரிதாகக் காட்டப்படுகின்றது. சரத்ஏக்க நாயக்காவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வெளிவருவதில்லை அத்துடன் ஜனாதிபதியே தேர்தல் சட்ட விதிகளை மீறிவருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்காக கண்டி மகாவலி ரீச் ஹோட்டலிலிருந்து மாத்திரம் இதுவரையில் 27 ஆயிரம் சாப்பாட்டுப் பார்ச்சல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின் படி உபசரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு புடவைகளும் சாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. வங்கி ஊழியர்கள் மூவாயிரம் பேருக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் விருந்துபசாரமளிக்கப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனை ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய மாகாணத்தில் தோல்வி கண்டது. இந்த மாகாண சபை தேர்தலிலும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை ஜனாதிபதி நன்குணர்ந்துள்ளார். முழு நாடும் ஜனாதிபதி தேர்தலில் ஏமாந்த நிலையில் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களின் மக்கள் ஏமாறவில்லை. கண்டி மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்த பொதுத் தேர்தலில் கூட கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் ஐ.தே.க.வே வெற்றியீட்டியது மத்திய மாகாணத்தின் சுதந்திரமுன்னணி முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட குழுவினால் தேர்தல் களத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நன்குணர்ந்ததன் காரணமாகவே அரச வளங்களையும், பணத்தையும் அள்ளி வீசி வெற்றியை தமதாக்கிக் கொள்ள ஜனாதிபதி குறுக்குவழிகளை நாடியுள்ளார்.  நடப்பவற்றை அவதானிக்கும் போது இத்தேர்தலை இரத்துச் செய்யக் கூடிய முறைகேடுகள் கூடிக் கொண்டே வருகின்றது. தேர்தல் ஆணைக்குழு இருந்தால் அரசு இத்தகைய முறைகேடுகலீடுபட முடியாது.

தேர்தல் காலத்தில் அரச நியமனங்களோ, விண்ணப்பங்களோ கோர முடியாது. ஆனால் இவ்வாறான நியமனங்களும், விண்ணப்பங்கள் கோரப்படுவதும் மத்திய, வடமேல் மாகாணங்களில் தாராளமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நாம் ஒவ்வொன்றாக தேர்தல் ஆணையாளருக்கு பட்டியலிட்டு அனுப்பிவருகின்றோம். அவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

திருத்தவேலை முடிவடைந்ததும் யாழ். – கொழும்பு இடையே தினமும் 5 பஸ்சேவை

bus-17o1.jpgஏ- 9  நெடுஞ்சாலையின் திருத்தப் பணிகள் முடிவுற்றதும், இலங்கைப் போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான ஐந்து பஸ்கள் 5 யாழ். – கொழும்பு பயணிகள் சேவைக்காகத் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இப் போக்குவரத்துச் சேவைக்காக இப்போதே பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகபெரும ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

யாழ்.  – கொழும்பு போக்குவரத்துச் சேவையைத் தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும்  இப்போதே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  ஏ- 9 பாதை புனரமைப்புப் பணிகள் முடியும்வரை தாம் காத்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, வவுனியா – யாழ். பயணிகள் போக்குவரத்துச் சேவை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அதற்காக மேலதிக பஸ்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார். ஏ- 9 நெடுஞ்சாலையில் கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை அகற்றி முடிந்ததும் அப்பாதை பயணிகளின் பாவனைக்கு விடப்படும் என்றும் அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

ஐ. தே. க.வின் சூழ்ச்சிகள் வெற்றிபெறப் போவதில்லை – பிரதமர்

pm-sl.jpgமக்களின் பலம் அரசின் பக்கம் இருக்கும் வரை ஐ. தே. கட்சியின் சூழ்ச்சிகள் ஒரு போதும் வெற்றிபெறப் போவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்துள்ள ஐ. தே. கட்சி எதிர்வரும் தேர்தலிலும் தோல்வியைத் தழுவும் என்பது அவர்களுக்கே தெரிந்த விடயம்.

யுத்த நிலைமை பற்றி பொய் வதந்திகளை எழுப்பி வந்த இக்கட்சியினருக்கு இன்று தேர்தல் மேடைகளில் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தை வியாபாரமாகவும் அரசியலை இலாப மாகவும் கருதி செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று வலுவிழந்து காணப்படுவதற்கு காரணம் அவர்களது சூழ்ச்சிகளாகும். இக்கட்சியின் பொய்ப்பிரசாரங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.

எதிர்வரும் தேர்தலில் இரண்டு மாகாண சபைகளிலும் பாரிய வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஈட்டும் என கல்கமுவ வன்னிநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல பஸ்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மேலும் பேசிய பிரதமர், யுத்த களத்தில் உள்ள படைவீரர்களை சக்தி மிக்க தாக்கி அவர்களுக்கு போதிய பலத்தை வழங்கி யுத்தம் புரிவதால் எல். ரீ. ரீ. ஈ.யினருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. ஐ. தே. கட்சியினர் போன்று நாமும் யுத்தத்தை வியாபாரமாக்கி அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தவில்லை.

எனினும் இன்று யுத்தத்தில் வெற்றிபெற்று வரும் நிலையை சகிக்காத சிலர் அரசிற்கு எதிரான பெரும் சூழ்ச்சியொன்றை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. யுத்தத்தை நிறுத்தி அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிதறடிக்க எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு அரசு திடமாக நடவடிக்கை எடுக்கும். எதிர்வரும் தேர்தல்களில் அரசு நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் ஆணை அரசின் பக்கமேயுள்ளது.

இவ்வாண்டு முற்பகுதியில் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் தோன்றி நாடு அபிவிருத்தியின் பக்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் முல்லைத்தீவில் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகள் அடுத்த ஒருசில வாரங்களில் மீட்கப்படும்.

வடமேல் மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விஷ்வமடு ஆஸ்பத்திரியில் 285 பிள்ளைகள் பிறப்பு

hospital.jpgகடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ள விஷ்வமடு ஆஸ்பத்திரியில் 285 பிள்ளைகள் பிறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு உரிய வசதிகளை அரசு வழங்கி வருவதோடு மருத்துவர்கள், தாதிமார்கள் போன்றோரையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

 அங்கு சிறந்த சுகாதார சேவைகள் நடைபெறுவதாலேயே கடந்த மாதத்தில் அங்கு 285 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கு வசதிகள் அளிப்பதற்கான திரிபோஷா அடங்கலான போஷாக்கு உணவுகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
 
 

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.