வடக்கில் புலிகளின் பயங்கரவாதத்திற்கும், தெற்கில் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்திற்கும் மத்தியில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போரட்டத்திற்குள் தள்ளாது ஜனநாயக ரீதியான போரட்டத்திற்குள் உள்வாங்கியது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கண்டி ரெஹான்ஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஒருவித பீதி மனப்பான்மை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இச்சமூகத்தை வெளிக்கொணர வேண்டும். இந்த அரசு மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால், சகல இன மக்களையும் இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.
மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது கட்சியின் எதிர்காலப் போராட்டத்திற்கும் பேரம் பேசலுக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். 1988 மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 12 பிரதிநிதிகளை வட கிழக்குக்கு வெளியில் வென்றெடுத்தது. அதன் பிறகு 2004 மாகாணசபைத் தேர்தலில் நாம் இந்த 12 ஆசனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் அமைச்சரவையில் 27 சதவீதமானோர் முஸ்லிம்கள் . ஆனால் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்தான் என்ன? இவர்களின் கையாலாகாத நிலை அவர்களுக்கே தெரியும். இதுபோன்று இக்கட்சியின் தலைமைத்துவமும் இருக்க விரும்பவில்லை. எனவேதான், வெளியே வந்தோம். முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடத்தக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது எதிர்கால தேர்தல்களில் நிரூபிக்கப்படும் என்றார்.